இலங்கை புனித செபஸ்தியன் பகுதியிலுள்ள மாதா உருவச் சிலை உடைப்பு - போலீஸ் குவிப்பு

நீர்கொழும்பு - கட்டுவாப்பிட்டி பகுதியில் ஏற்பட்டுள்ள அமைதியின்மையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு பாதுகாப்பு பிரிவினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கட்டுவாப்பிட்டி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் போலீஸார், விசேட அதிரடிபடை மற்றும் ராணுவம் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
நீர்கொழும்பு - கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியன் பகுதியிலுள்ள மாதா உருவச் சிலையொன்று அடையாளம் தெரியாத நபர்களினால் நேற்றிரவு சேதமாக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, கட்டுவாப்பிட்டி பகுதியில் இன்று காலை அமைதியின்மை நிலவியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எனினும், சிறிது நேரத்தில் குறித்த பகுதியின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டு நிலைமை முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிடுகின்றது.
இதேவேளை, ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்திற்கு நியாயத்தை பெற்றுத்தருமாறு வலியுறுத்தி நீர்கொழும்பில் இன்று பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கட்டுவாப்பிட்டி கிறிஸ்தவ தேவாலயத்தின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தரப்பின் உறவினர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
இதனால் குறித்த பகுதியில் இன்று பாரிய அமைதியின்மை நிலவியதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீர்கொழும்பு - கட்டுவாப்பிட்டி பகுதியில் இன்றைய தினம் இடம்பெற்ற சிலை உடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் ஆகியன காரணமாக, குறித்த பகுதியிலுள்ள முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.

போலீஸாரின் அறிவித்தலுக்கு அமையவே முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.
பிரதேசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












