மைத்திரிபால சிறிசேன: 'போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையால் என் உயிருக்கு அச்சுறுத்தல்'

போதைப்பொருளை ஒழிக்கும் நடவடிக்கை காரணமாக தனது உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கின்றார்.

பொலன்னறுவையில் இன்று, செவ்வாய்க்கிழமை, இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டிருந்தார்.

தனக்கு உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுகின்றமை தொடர்பில் புலனாய்வு பிரிவினர் தனக்கு அறிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

இந்த நிலையில், நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு, அதனை நிறைவேற்றுவதற்கான அதிகாரம் தனக்கு காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு பின்னால் இருந்து செயற்படுகின்ற அரச சார்பற்ற நிறுவனங்கள், தனக்கு எதிரான பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறு எந்தவித பிரசாரங்களையும் கவனத்தில் கொள்ளாது, நாட்டை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

போதைப்பொருளை இல்லாதொழிக்க வேண்டும் என்ற எண்ணம், நாட்டு மக்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ளதாக கூறிய ஜனாதிபதி, அந்த மக்கள் சக்தியை வலுப்படுத்தும் வகையில் சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் எனவும் சுட்டிக்காட்டினார்.

இந்த மரண தண்டனை நிறைவேற்றும் நடவடிக்கைகளுக்கு எதிராக பெருந்திரளானோர் நீதிமன்றத்தை நாடியுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான பின்னணியிலேயே தனக்கு மரண அச்சுறுத்தல் காணப்படுவதாக புலனாய்வு பிரிவினர் தனக்கு அறிவித்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறினார்.

தன்னால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே ஏப்ரல் 21ஆம் தேதி தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி தெரிவிக்கின்றார்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் 7 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறிய ஜனாதிபதி, தாக்குதலுக்கு பொறுப்புகூற வேண்டியவர்களின் பட்டியலில் தனது பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் கட்டியெழுப்பிய சுதந்திரமும், ஜனநாயமுமே தனது பெயர் இந்த பட்டியலில் உள்ளடக்கப்பட்டமைக்கான காரணமாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஏப்ரல் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பின்றி விசாரணைகளை நடத்தி, உயர்நீதிமன்றத்தினால் வழங்கப்படும் எந்தவொரு தீர்ப்பையும் ஏற்றுக் கொள்ள தான் தயாராகவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :