இலங்கை அரசியல்சாசன குழப்பம்:“19ஆவது திருத்தச்சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்” - திருத்தியவர் சொல்கிறார்

பட மூலாதாரம், Getty Images
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியதை போன்று, அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தில் பாரிய சர்ச்சைகள் காணப்படுவதை தான் ஏற்றுக் கொள்வதாக ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பத்தி விக்ரமரத்ன தெரிவிக்கின்றார்.
சட்டமூலத்தை தயாரித்தவர்
19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் சர்ச்சைகள் காணப்படுவதாக வெளியிடப்பட்ட கருத்துக்கள் குறித்து, 19ஆவது திருத்தச் சட்டமூலத்தை தயாரித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பத்தி விக்ரமரத்ன ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து, தெளிவூட்டிய போதே இதனைக் குறிப்பிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் கொண்டு வரப்பட்ட 18ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாது செய்வதாக மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிக்கு அமையவே 19ஆவது திருத்தச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர், ஜனாதிபதி செயலகத்தில் விசேட கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டு, சட்டமூலம் தொடர்பில் விவாதிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன்போது எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அழுத்தங்களின் பிரகாரம், 19ஆவது திருத்தச் சட்டத்தில் உள்வாங்கப்பட்ட பல முக்கியமான சரத்துக்கள் வலுவிழக்கச் செய்யப்பட்டதாகவும், அதனாலேயே நாட்டில் தற்போது பிரச்சினைகள் எழுந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையில் காணப்படுகின்ற அதிகாரங்களை குறைக்க முயற்சித்த போதிலும், அதனை உரிய முறையில் முன்னெடுக்க முடியாது போனதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்திற்கு அதிகாரங்கள்
ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு, நாடாளுமன்றத்திற்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கும் பட்சத்தில், 19ஆவது அரசியலமைப்பு திருத்தம் சிறந்த முறையில் அமைந்திருக்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
ஜனாதிபதிக்கும், நாடாளுமன்றத்திற்கும் இடையில் பிரச்சினைகள் காணப்படும் வகையில் அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் அமையப்பெற்றுள்ளதாகவும் ஜயம்பத்தி விக்ரமரத்ன சுட்டிக்காட்டுகின்றார்.
நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிக்கும் வகையில் மக்கள் விடுதலை முன்னணியினால் தயாரிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தின் ஊடாகவே, தற்போதுள்ள பிரச்சினைகளை நிறைவுக்கு கொண்டு வர முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.
இயலுமான விரைவில் அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தை ரத்துசெய்து, 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுதன் ஊடாக, நாட்டில் எழுந்துள்ள பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வர முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பத்தி விக்ரமரத்ன நம்பிக்கை வெளியிடுகின்றார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












