You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கையில் 43 வருடங்களுக்குப் பிறகு 4 பேருக்கு மரண தண்டனை - குற்றம் என்ன?
சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நால்வருக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் ஆவணத்தில் தான் கையெழுத்திட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கின்றார்.
ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை ஜனாதிபதி மாளிகையில் இன்று காலை சந்தித்து கலந்துரையாடிய போதே, ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
மரண தண்டனையை நிறைவேற்றும் ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ள போதிலும், நிறைவேற்றும் தேதி இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், மிக விரைவில் மரண தண்டனையை நிறைவேற்றதான் நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது நம்பிக்கை வெளியிட்டார்.
இலங்கையில் 1976ஆம் ஆண்டு ஜுன் மாதம் 23ஆம் தேதிக்கு பின்னர் இதுவரை மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை.
நீதிமன்றங்களினால் குற்றம் இழைத்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட போதிலும், மரண தண்டனையை நிறைவேற்றும் ஆவணத்தில் 1976ஆம் ஆண்டுக்கு பின்னர் ஆட்சி செய்த எந்தவொரு ஜனாதிபதியும் கையெழுத்திடவில்லை.
இந்த நிலையில், 43 வருடங்களின் பின்னர், மரண தண்டனையை நிறைவேற்றும் ஆவணத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையெழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
19ஆவது திருத்தம், அரச சார்பற்ற நிறுவனங்களின் தேவைக்கு கொண்டு வரப்பட்டது - ஜனாதிபதி
நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜயம்பத்தி விக்ரமரத்ன, எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சமூக செயற்பாட்டாளரான பாக்கிசோதி சரவணமுத்து உள்ளிட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளது தேவைக்கு ஏற்பவே அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
தாம் ஆட்சிப் பீடம் ஏறிய போது, நாட்டின் சிறந்த எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த 19ஆவது திருத்தத்தை கொண்டு வர இணக்கம் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டார்.
எனினும், 19ஆவது திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு, அதன் அனுபங்களை பெற்றுக் கொள்ளும் போதே, அது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்துகின்றது என தான் புரிந்துக்கொண்டதாகவும் ஜனாதிபதி கூறினார்.
19ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக, நாட்டில் இரண்டு தலைவர்கள் உருவாகியுள்ளதாக கூறிய ஜனாதிபதி, ஜனாதிபதி செயலகத்திலும், அலரிமாளிகையிலும் இரண்டு தலைவர்கள் தற்போது ஆட்சி செய்து வருவதாக குறிப்பிட்டார்.
எதிர்வரும் காலத்தில் ஆட்சி அமைக்கும் தரப்பினர் 19ஆவது திருத்தச் சட்டத்தை ரத்து செய்து, புதிய திருத்தங்களைகொண்டு வரும் பட்சத்தில், அது நாட்டிற்கு சிறந்த பலனை பெற்றுக் கொடுக்கும் என தான் நம்புவதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
அமெரிக்காவுடனான உடன்படிக்கைகளுக்கு எதிர்ப்பு
அமெரிக்காவுடன் கையெழுத்திட திட்டமிடப்பட்டுள்ள சோபா, எக்ஸா மற்றும் மிலேனியம் ஆகிய உடன்படிக்கைகளுக்கு தான் முழுமையாக எதிர்ப்பை வெளியிடுவதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.
அத்துடன், சோபா உடன்படிக்கையின் ஊடாக இலங்கைக்குள் அமெரிக்க இராணுவத்தை களமிறக்க முடியும் என சுட்டிக்காட்டிய அவர், அதற்கு தான் முழுமையாக எதிர்ப்பை வெளியிடுவதாகவும் கூறினார்.
நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலைக்கு பிரசன்னமாக போவதில்லை - ஜனாதிபதி
ஏப்ரல் 21ஆம் தேதி நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலைக்கு பிரசன்னமாகுமாறு தனக்கு இதுவரை அழைப்பு விடுக்கப்படவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கின்றார்.
அவ்வாறு நாடாளுமன்ற தெரிவுக்குழு தன்னை விசாரணைகளுக்காக அழைக்கும் பட்சத்தில், தான் அந்த விசாரணை குழு முன்னிலைக்கு பிரசன்னமாக போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலமான அலரிமாளிகையில் தேவைக்கு ஏற்பவே, நாடாளுமன்ற தெரிவுக்குழு நாடகம் அரங்கேற்றப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அலரிமாளிகையில் முன்தினம் இரவு நாடகத்திற்கான பயிற்சிகள் பெற்றுக் கொள்ளப்பட்டு, மறுநாள் நாடாளுமன்றத்தில் அந்த நாடகம் அரங்கேற்றப்படுவதாகவும் ஜனாதிபதி கூறினார்.
இந்த செயற்பாட்டிற்கு தான் முழுமையாக எதிர்ப்பை வெளியிடுவதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்