இலங்கை தேவாலயங்களில் மீண்டும் ஞாயிறு திருப்பலி ஆராதனைகள் ரத்து

பட மூலாதாரம், Getty Images
இலங்கையில் அடுத்த ஞாயிற்றுகிழமை கிறிஸ்தவ தேவாலயங்களில் திருப்பலி ஆராதனைகளை நடத்த வேண்டாமென கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாட்டில் தற்போது நிலவும் அமைதியற்ற சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பேராயர் இல்லம் தெரிவிக்கிறது.
இலங்கையில் கடந்த 21ஆம் தேதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மூன்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளை இலக்கு வைத்து தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இந்த தாக்குதல் சம்பவத்தில் 253 பேர் உயிரிழந்திருந்ததுடன், 500-க்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர்.

பட மூலாதாரம், Getty Images
இந்த சம்பவத்தை அடுத்து, நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், கடந்த ஞாயிற்றுகிழமை கிறிஸ்தவ தேவாலயங்களில் திருப்பலி ஆராதனைகள் ரத்து செய்யப்பட்டன.
அன்றைய தினம் பேராயர் இல்லத்தில் மட்டும் சிறப்பு திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டதுடன், அதனை நாட்டிலுள்ள அனைத்து மக்களும் தங்கள் வீட்டில் இருந்தவாறே தொலைக்காட்சிகளின் ஊடாக பார்க்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.


இந்த நிலையில், நாட்டில் தொடர்ந்தும் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக பாதுகாப்பு பிரிவினர் தொடர்ச்சியாக அறிவித்து வருகின்ற பின்னணியில், அடுத்த வார ஞாயிறு திருப்பலி ஒப்புக் கொடுத்தலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டிலுள்ள அனைத்து வழிபாட்டு தலங்களுக்குமான பாதுகாப்பு, போலீஸார் மற்றும் முப்படையினரை கொண்டு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

வழிபாட்டுத் தலங்கள் மட்டுமின்றி, பாடசாலைகள், அரசு நிறுவனங்கள், திணைக்களங்கள், வங்கிகள் உள்ளிட்ட அனைத்து முக்கிய இடங்களின் பாதுகாப்புக்களும் தற்போது பலப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், பிரதான நகரங்களுக்குள் பிரவேசிக்கும் பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இலங்கையில் தொடர்ந்தும் பல பகுதிகளில் முப்படையினர் மற்றும் போலீஸார் இணைந்து சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையை மேற்கொண்டு வருவதுடன், பல ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்களையும் பாதுகாப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
அத்துடன், இந்த சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர்.
இலங்கை குண்டுவெடிப்பு: "தற்கொலை தாக்குதல் இஸ்லாத்தில் கிடையாது" - அமைச்சர் ரிசாத் பதியூதீன்
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













