இலங்கை வெடிகுண்டு தாக்குதல்: வெடி பொருள் நிரப்பிய ஒரு லாரி, வேன் கொழும்பில் நுழைந்திருப்பதாக போலீஸ் உஷார்

பட மூலாதாரம், Reuters
முழுவதும் வெடிபொருள் நிரப்பிய ஒரு லாரியும், ஒரு வேனும் இலங்கை தலைநகர் கொழும்புவிற்குள் நுழைந்திருப்பதாக கொழும்பு நகர காவல் நிலையங்கள் அனைத்தும் உஷார் படுத்தப்பட்டுள்ளன.
பொதுமக்கள் அனைவரும் எச்சரிக்கையோடு இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
பிபிசி செய்தியாளர் அஸம் அமீன் பகிர்ந்துள்ள ட்வீட்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
இத்தகவலை போலீஸ் ஊடகப் பிரிவு உறுதி செய்துள்ளது என்கிறார் கொழும்புவில் உள்ள பிபிசி தமிழ் செய்தியாளர் ஒருவர்.
இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த குண்டுவெடிப்பு தாக்குதல்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 321 ஆக அதிகரித்துள்ளது. ஐநூறுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். அவர்களில் 375 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருதாக இலங்கையின் பாதுகாப்பு துணை அமைச்சர் ரூவன் விஜயவர்தனே தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் காவல்துறை ஊரடங்கு உத்தரவு இன்று இரவு 9 மணி முதல் நாளை காலை நான்கு மணி வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"நியூசிலாந்து மசூதி தாக்குதலுக்கு பதிலடி"
இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு தாக்குதல்கள் கடந்த மார்ச் மாதம் நியூசிலாந்து மசூதிகளில் நடந்த தாக்குதலுக்கு பதிலடியாகவே நடத்தப்பட்டிருக்கிறது என்று இலங்கையின் பாதுகாப்பு துணை அமைச்சர் ரூவன் விஜயவர்தனே இன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசினார்.
தேசிய தவ்ஹீத் ஜமாத்தும், மற்றொரு இஸ்லாமியவாதக் குழுவான ஜே எம் சி-யும் இணைந்து இத்தாக்குதலை தாக்குதலை நடத்தியிருக்கின்றன என்று அவர் தமது நாடாளுமன்ற உரையில் தெரிவித்தார்.
ஆனால் இது தொடர்பான மேற்கொண்டு எந்தவித தகவலையும் அவர் அளிக்கவில்லை.

பட மூலாதாரம், Reuters
ஐஎஸ் பொறுப்பேற்பு
இஸ்லாமிய அரசு என்று தம்மை அழைத்துக்கொள்ளும் குழு (ஐ.எஸ். குழு) இலங்கையில் நடந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாக தமது ஊடகப் பிரிவு மூலம் தெரிவித்துள்ளது.
ஆனால், இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பொறுப்பேற்றிருப்பதை சற்று கவனமாக அணுகவேண்டும் என்று இலங்கையில் உள்ள ஒரு பிபிசி செய்தியாளர் கூறுகிறார். "வழக்கமாக தாக்குதல் நடந்த உடனே, தாக்குதல் நடத்தியவரின் புகைப் படத்தை தமது ஊடகத் தளமான 'அமாக்'கில் வெளியிட்டு பொறுப்பேற்பதே ஐ.எஸ். குழுவின் வழக்கம்" என்று அவர் கூறுகிறார்.
இலங்கை ஜனாதிபதி, வெளிநாட்டு தூதுவர்களுடன் சந்திப்பு
வெளிநாட்டு தூதர்களையும், சர்வதேச முகவர் அமைப்பின் பிரதிநிதிகளையும் இன்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்தார். ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.
இலங்கையில் நிலைக்கொண்டுள்ள பயங்கரவாதத்தை முழுமையாக ஒழிப்பதற்கு உதவுவதாக வெளிநாட்டு தூதர்கள் மற்றும் சர்வதேச அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒருமனதாக உறுதியளித்துள்ளனர்.

பட மூலாதாரம், JEWEL SAMAD
இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அப்போது கூறியுள்ளார்.
பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் அனுபவம் வாய்ந்த மற்றும் புலனாய்வு திறமைகளை கொண்ட 8 நாடுகள் இலங்கைக்கு உதவுவதற்கு ஏற்கனவே இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அதேபோன்று, பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு ஏனைய நாடுகளின் ஒத்துழைப்புக்களையும் ஜனாதிபதி இப்போது கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, சமூக வலைத்தளங்கள் மீதான தடையை விரைவில் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.
இறந்தவர்கள் உடல்கள் கூட்டாக அடக்கம்
இலங்கை தற்கொலைகுண்டுதாரிகள் நடத்திய தாக்குதலில், 321 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 500 பேர் காயமடைந்துள்ளனர் என போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் உடல்களை கூட்டாக அடக்கம் செய்யும் நிகழ்வு தொடங்கியுள்ளது.
நீர்கொழும்பில் உள்ள செபாஸ்தியன் தேவாலயத்தில் இந்த கூட்டு இறுதிச் சடங்கு நிகழ்வு நடைபெற்றது.
நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்த வாய்ப்பு
இலங்கையில் அவசர நிலை அமலில் இருக்கும் நிலையில் இன்று மதியம் நாடாளுமன்றம் கூடியது.

பட மூலாதாரம், JEWEL SAMAD
அப்போது பேசிய சபாநாயகர் நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.
பாதுகாப்பு தரப்பில் இருந்து இந்த தகவல்கள் வந்ததாகவும், நாடாளுமன்றத்துக்கு மட்டுமல்லாது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கும் பாதுகாப்பு தேவை என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
40 பேர் கைது
இதுவரை 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 26 பேர் குற்றப்புலனாய்வுத் துறையால் விசாரிக்கப்படுவர். உள்ளூர் இஸ்லாமியவாத தீவிரவாதிகள் அமைப்பான தேசிய தவுஹீத் ஜமாத்துடன் தொடர்புடைய சிலரை கைது செய்ய பல விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் என பிபிசி செய்தியாளர் அசாம் அமீன் தெரிவிக்கிறார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
இவர்களில் போலீசாரால் கைது செய்யப்பட்ட 9 பேர் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மே 6 வரை விலக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த 9 பேரும் வெல்லம்பட்டி என்ற இடத்தில் உள்ள ஒரே தொழிற்சாலையில் வேலை செய்துவந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணுவம் அறியவில்லை
இலங்கையில் தாக்குதல்கள் நடத்தப்படவுள்ளமை தொடர்பில் இலங்கை இராணுவம் அறிந்திருக்கவில்லை என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆயர் இல்லத்தில் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகையை நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ள போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு இராணுவத்தினால் தனித்து செயற்பட முடியாத நிலைமை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நபர்களை பரிசோதிக்கின்றமை, கைது செய்கின்றமை மற்றும் வீதி தடைகளை ஏற்படுத்துகின்றமை போன்ற செயற்பாடுகளுக்கான அதிகாரத்தை இராணுவத்திற்கு வழங்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் புலனாய்வு தகவல்களின் தெளிவின்மை காணப்பட்டதாக குறிப்பிட்டுள்ள இராணுவ தளபதி, இராணுவம் தெளிவுட்டப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், இராணுவத்திற்கு புலனாய்வு தகவல்கள் பகிரப்பட்டாலும், செயற்படுவதற்கான அதிகாரம் கிடையாது எனவும், அந்த அதிகாரத்தை வேறொரு தரப்பிற்கு வழங்குகின்றமை பிரச்சினைக்குரிய விடயம் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் வேறு தரப்பினர் மீது விரல் நீட்டுவதை தவிர்த்து, எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் எனவும் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய துக்க தினம்
இலங்கையில் இன்று தேசிய துக்க தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இதன்படி, அனைத்து அரசாங்க நிறுவனங்கள், திணைக்களங்களில் தேசிய கொடியை அரை கம்பத்தில் பறக்க விட்டு துக்க தினத்தை அனுசரிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன், அலுவலக நேர ஆரம்பத்தின்போது, 3 நிமிட மௌன அஞ்சலியையும் செலுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












