இலங்கை குண்டுவெடிப்பு: தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஞாயிறு பிரார்த்தனை

இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து, நாட்டிலுள்ள அனைத்து கிறித்தவ தேவாலயங்களிலும் இன்றைய தின ஆராதனைகள் ரத்து செய்யப்பட்டன.

எனினும், கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் தலைமையில், கொழும்பு பேராயர் இல்லத்தின் இன்றைய தினம் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.

இந்த கூட்டு பிரார்த்தனை, இலங்கையிலுள்ள அனைத்து தொலைக்காட்சிகளிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டதுடன், அதனை மக்கள் தமது வீடுகளிலிருந்து பார்வையிட்டதை காண முடிந்தது.

கொழும்பு பேராயர் இல்லத்தில் இடம்பெற்ற கூட்டு பிரார்த்தனை நிகழ்விற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட பலரும் வந்திருந்தனர்.

இதேவேளை, கொழும்பு - கொச்சிகடை புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு முன்பாக இன்றைய தினம் சர்வமதத் தலைவர்களின் பங்குப்பற்றுதலுடன் விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்தி வேண்டும் வகையில் மெழுகுவர்த்திகளை ஏற்றி இந்த வழிபாடுகள் நடத்தப்பட்டிருந்தன.

இதன்போது குறித்த பகுதியின் பாதுகாப்பிற்காக போலீஸார் மற்றும் முப்படையினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததை காண முடிந்தது.

தாக்குதலில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காகவும், காயமடைந்தவர்கள் குணமடைய வேண்டும் எனவும் பக்தர்கள் தேவாலயத்தின் பாதுகாப்பு வலயத்திற்கு வெளியிலும் வழிபாடுகளை நடத்தியிருந்தனர்.

இவ்வாறு இடம்பெற்ற வழிபாடுகளை தொடர்ந்து, தாக்குதலுக்கு உள்ளான கொச்சிகடை புனித அந்தோனியார் தேவாலயத்திற்குள் பிரவேசிப்பதற்கான அனுமதி ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்டது.

பாதுகாப்பு பிரிவினரின் முழுமையான ஒத்துழைப்புடன் புனித அந்தோனியார் தேவாலயத்தின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

புனரமைப்பு பணிகளை விரைவில் நிறைவு செய்து, தேவாலயத்தை நிர்வாகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு பிரிவினர் உயர் அதிகாரிகள் இதன்போது உறுதியளித்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :