அம்பாறை சாய்ந்தமருதில் வாடகை வீடெடுத்த ஆயுததாரிகள் - தகவல் தெரிந்தது எப்படி?

Sri Lanka bombings
    • எழுதியவர், யூ. எல். மப்றூக்
    • பதவி, பிபிசி தமிழுக்காக, அம்பாறையிலிருந்து

இலங்கையின் அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பிரதேசத்தில் நேற்று, வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற தற்கொலைக் குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 16 பேர் பலியாகியுள்ளனர்.

பலியானோரில் பெண்கள் மற்றும் சிறுவர்களும் அடங்குவர்.

சாய்ந்தமருதில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட 'பொலிவேரியன்' வீட்டுத் திட்டத்திலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

குறித்த பகுதியிலுள்ள வீடொன்றை வாடகைக்குப் பெற்று, அதில் வெளி ஊரைச் சேர்ந்த சிலர் தங்கியுள்ளனர்.

இந்த நிலையில், இவர்களின் நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்ட அப்பகுதி மக்கள், இவர்கள் குறித்து அங்குள்ள பள்ளிவாசல் நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர்.

இதனையடுத்து பள்ளிவாசல் நிர்வாகத்தினரும், பொதுமக்கள் சிலரும் இணைந்து, குறித்த வீட்டில் இருந்தவர்களிடம் பேசியுள்ளனர். ஆனாலும், அவர்கள் முரண்பாடான வகையில் நடந்து கொண்டதன் காரணமாக, அந்தப் பகுதி கிராம சேவகருக்கு, குறித்த வீட்டில் தங்கியிருந்தோர் பற்றி தாங்கள் அறிவித்ததாக, அங்குள்ள றிஸ்வான் எனும் இளைஞர் பிபிசி தமிழிடம் கூறினார்.

இதன் பின்னர், அங்கு வந்த கிராம சேவகரை குறித்த வீட்டில் இருந்தோர் மிரட்டியதாகவும், இதனையடுத்து, அவர்கள் பற்றி போலீஸாருக்கு தாங்கள் அறிவித்ததாகவும் றிஸ்வான் தெரிவித்தார்.

இதனையடுத்து, குறித்த இடத்துக்கு போலீஸார் மற்றும் படையினர் வந்தபோது, அந்த வீட்டில் இருந்தவர்கள் குண்டை வெடிக்கச் செய்துள்ளனர்.

மேலும், படையினர் மீது அவர்களில் சிலர் துப்பாக்கித் சூடு நடத்தியதாகவும், பதிலுக்கு படையினரும் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாகவும் தெரியவருகிறது.

"இரவு 7.00 மணியளவில் முதல் குண்டுச் சத்தம் கேட்டது. அதன் பின்னர் சற்று நேர இடைவெளியில் இரண்டாவது குண்டும், சிறிது நேரத்தில் மூன்றாவது குண்டும் வெடிக்கும் சத்தம் கேட்டது" என்று சாய்ந்தமருதைச் சேர்ந்த ஊடகவியலாளர் யூ.கே. கால்தீன் பிபிசி தமிழிடம் கூறினார்.

Sri Lanka bombings

வெள்ளிக்கிழமை இரவு சுமார் 8.00 மணி தொடங்கி இரவு 11.00 மணி வரையில், துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டுக் கொண்டேயிருந்ததாகவும் கால்தீன் தெரிவித்தார்.

சம்பவத்தில் மேற்படி வாடகை வீட்டில் தங்கிருந்த 15 பேர் இறந்துள்ளதோடு, அந்தப் பகுதியில் வசிக்கும் பாத்திமா அஸ்ரிபா எனும் 21 வயதுடைய பெண் ஒருவரும் துப்பாக்கிச் சூட்டில் தற்செயலாகச் சிக்கி உயிரிழந்துள்ளார்.

உறவினர் வீட்டுக்குச் சென்று விட்டு, தமக்குச் சொந்தமான முச்சக்கர வண்டியில் தனது கணவருடன் வீட்டுக் திரும்பிக் கொண்டிருந்த போதே, துப்பாக்கிச் சூட்டுக்கு மேற்படி பெண் இலக்காகி உயிரிழந்துள்ளதாக, அவரின் உறவினர்கள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.

இதேவேளை, குறித்த பெண்ணின் கணவர் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சாய்ந்தமருது - பொலிவேரியன் பகுதியிலுள்ள வீட்டில் வாடகைக்குத் தங்கியிருந்தவர்கள் என நம்பப்படும் 15 பேரில், இருவரின் உடல்கள் வீட்டுக்கு வெளியிலும் ஏனைய உடல்கள் வீட்டுக்கு உள்ளேயும் காணப்பட்டன.

வீட்டின் உள்ளே காணப்பட்ட சில உடல்கள் முற்றாக எரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வீட்டினுள் இறந்து கிடந்தவர்களில் பெண் ஒருவரினதும், இரண்டு சிறுவர்களினதும் உடல்களை அடையாளம் காணக் கூடியதாக இருந்தது.

இந்த சம்பவத்தில் சந்தேக நபர்கள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வேன் ஒன்று, அவர்கள் தங்கியிருந்த வீட்டின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் சேதமடைந்து காணப்பட்டது.

Sri Lanka bombings

குறித்த வீட்டின் வெளியில் சில சந்தேகத்துக்குரிய ஆடைகளின் பாகங்களையும் காணக்கூடியதாக இருந்தது.

இலங்கையில் தற்கொலைத் தாக்குதலை நடத்தியவர்கள் எனத் தெரிவித்து ஐ.எஸ். அமைப்பினர் வெளியிட்டதாகக் கூறப்படும் காணொளியில் காணப்படுவோர் அணிந்திருக்கும், ஆடைகளுக்கு ஒப்பானவையாக, சம்பவ இடத்தில் காணப்படும் ஆடைகளின் பாகங்கள் உள்ளன.

இந்த நிலையில், பொலிவேரியன் வீட்டுத்திட்டத்தில் போலீஸார் மற்றும் படையினர் குவிக்கப்பட்டுள்ளதோடு, அங்கு தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சம்பவ இடத்துக்கு நீதவான் இன்று, சனிக்கிழமை, காலை வருகை தந்து, பிரேதங்களைப் பார்வையிட்டார்.

இந்த நிலையில், அந்தப் பகுதியில் வசிக்கும் அனைத்து பொதுமக்களையும் அருகிலுள்ள பாடசாலை வளாகத்துக்குள் அழைத்து, அவர்கள் பற்றிய பதிவுகளை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, சந்தேகத்தின் பேரில் அங்குள்ள சிலரை படையினர் கைது செய்துள்ளனர்.

இலங்கை

கொச்சிக்கடை தேவாலயத்தின் புனரமைப்பு தொடக்கம்

ரஞ்ஜன் அருண் பிரசாத், பிபிசி தமிழுக்காக, கொழும்பிலிருந்து

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம்
படக்குறிப்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம்

இதனிடையே, இலங்கையில் கடந்த 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் பெரிதும் பாதிக்கப்பட்ட தேவாலயங்களில் ஒன்றான கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோணியார் தேவாலயத்தின் புனரமைப்பு பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டன.

புனித அந்தோணியார் தேவாலயம் மற்றும் அதனை சுற்றிலுள்ள பகுதிகளின் புனரமைப்பு பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டன.

புனித அந்தோணியார் தேவாலயத்தின் கட்டடம் மற்றும் அதனை சுற்றிலுள்ள வீதி ஆகியன தற்போது புனரமைக்கப்பட்டு வருகின்றன.

போலீசார் மற்றும் முப்படைகளின் முழுமையான பாதுகாப்புக்கு மத்தியில் இந்த புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தாக்குதல் நடத்தப்பட்ட நாள் முதல் இதுவரையான காலப் பகுதி வரை குறித்த பகுதி அதிவுயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டு, அந்த இடத்திற்குள் செல்ல அனைவருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

புனரமைப்பு பணிகளின் ஈடுபட்டுள்ள ஊழியர்களும் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

எதிர்வரும் சில தினங்களில் இந்த புனரமைப்பு பணிகள் நிறைவடையும் என பாதுகாப்பு பிரிவு தெரிவிக்கின்றது.

அதன்பின்னர், அந்த பகுதிக்குள் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் பாதுகாப்பு பிரிவினர் அறிவித்துள்ளனர்.

இதேவேளை, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறும் அறநெறி பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை நடத்தப்படாது என இந்து விவகார அமைச்சர் மனோ கணேஷன் இன்று தெரிவித்தார்.

நாட்டில் நிலைமை வழமைக்கு கொண்டு வரப்பட்டு, பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர் அறநெறி பாடசாலைகளை நடாத்துமாறு அதற்கு பொறுப்பானவர்களிடம் அமைச்சர் மனோ கணேஷன் கேட்டுக்கொண்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :