You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விடுதலை புலிகள் இருவருக்கு 185 ஆண்டுகள் சிறை
இலங்கை பாதுகாப்புப் படையின் 37 பேரை கொலை செய்தது தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் இருவருக்கு அநூராதபுரம் மேல் நீதிமன்றத்தால் 185 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அநூராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதி மகேஷ் வீரமன் முன்னிலையில் வியாழகிழமை இந்த வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டபோதே பிரதிவாதிகளுக்கு கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இராசதுறை ஜெகன் மற்றும் நல்லசாமி சிவலிங்கம் ஆகியோருக்கு இந்த சிறைத்தண்டனை விதித்துப்பட்டுள்ளது.
185 வருட கடூழிய சிறைத்தண்டனையை ஒரே தடவையில் 5 வருடங்கள் கழிக்கும் வகையில் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பலாலி விமான நிலையத்திலிருந்து இரத்மலானை நோக்கி பயணித்த அன்டனோ 32 ரக விமானத்தின் மீது வில்பத்து வனப்பகுதியில் வைத்து ஏவுகணை செலுத்தி தாக்கியதால் அதில் பயணித்த பாதுகாப்பு படையின் 37 பேர் கொல்லப்பட்டனர்.
கடந்த 2000வது ஆண்டு மார்ச் மாதம் 30ம் தேதி அல்லது அதனை அண்மித்த காலப்பகுதியில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இராசதுரை ஜெகன் மற்றும் நல்லசாமி சிவலிங்கம் ஆகியோருக்கு எதிராக ஏவுகணை செலுத்திய குற்றச்சாட்டு உள்பட 37 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு அநுராதபுரம் சிறப்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
எதிரிகளின் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இந்தக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. எனினும் தமது குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை அவர்கள் நிராகரித்திருந்தனர்.
விசாரணைகளின் பின்னர் எதிரிகளின் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் ஏற்றுக்கொள்ளப்படுவதாக அநுராதபுரம் சிறப்பு மேல் நீதிமன்ற நீதிபதி மகேஷ் வீரமன் கட்டளையிட்டிருந்தார்.
எனினும் அந்தக் கட்டளையை ஆட்சேபித்து யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இராசதுரை ஜெகன் இலங்கை மேல்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீடு செய்தார். அந்த மேல்முறையீடு நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டது.
இந்த நிலையில் அநுராதபுரம் சிறப்பு மேல் நீதிமன்ற நீதிபதி மகேஷ் வீரமன் முன்னிலையில் விளக்கம் இடம்பெற்று வந்த நிலையில் வியாழக்கிழமை இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி வழங்கினார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்