You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் தரப்புக்கு ஆதரவு தர வேண்டும்" - புளட் சித்தார்த்தன்
தமிழ் அரசியல் கைதிகளை ஒரு மாத காலத்துக்குள் விடுதலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை ஏற்கும் தரப்புக்கு, தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்க வேண்டும் என்று அந்த அமைப்பில் இடம்பெறுகின்ற புளட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் கூறியுள்ளார்.
தற்போது இலங்கையில் அரசியல் நெருக்கடி ஒன்று உருவாகியிருக்கும் நிலையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கா அல்லது மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டமைப்புக்கா ஆதரவு வழங்குவது என்ற விசயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒன்றாக இணைந்து ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்று கூறும் சித்தார்த்தன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூட்டாக எடுக்கும் முடிவுக்கு தமது அமைப்பு ஆதரவு வழங்கும் என்று கூறியதுடன், இருந்தபோதிலும், அந்தக் கூட்டமைப்புக்கு தலைமை தாங்கும் தமிழ் அரசுக் கட்சி தனிமையில் ஒரு முடிவை எடுத்துவிட்டு ஏனைய கட்சிகள் மீது அதனை திணிக்க முயலக்கூடாது என்றும் குறிப்பிட்டார்.
அதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த விசயத்தில் எடுக்கும் முடிவு, தமிழ் மக்களின் நலனுக்கானதாக இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்:
இந்தவிடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு நிபந்தனையை வெளிப்படையாக முன்வைக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதாவது, பல ஆண்டுகளாக சிறைகளில் வாழும் தமிழ் அரசியல் கைதிகளை ஒரு மாத காலத்துக்குள் விடுவிக்க வேண்டும் மற்றும் தமிழ் மக்களின் காணிகளை உடனடியாக அரசாங்கம் விடுவிக்க வேண்டும் ஆகிய இரு நிபந்தனைகளை உடனடியாக நிறைவேற்றும் தரப்புக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்க வேண்டும் என்றும் அவர் சொன்னார்.
மஹிந்தவுக்கும் ஆதரவா?
'தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க மஹிந்த ராஜபக்ஷ தரப்பு முன்வந்தால், அவர்களுக்கும் ஆதரவு வழங்குவீர்களா?' என்று கேட்டதற்கு பதிலளித்த சித்தார்த்தன், 'அவர்களை விடுவிக்க முன்வந்தால் நிச்சயமாக மஹிந்தவுக்கு ஆதரவு வழங்குவதையும் ஆலோசிக்கலாம்' என்றும் பதிலளித்தார்.
கடந்த காலங்களில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது, ரணிலை ஆதரிக்க சில நிபந்தனைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்திருந்தது. அதனை ரணில் தரப்பு ஏற்றுக்கொண்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தரப்பில் கூறப்பட்டாலும், அவை குறித்து எந்த நடவடிக்கையும் பின்னர் எடுக்கப்படவில்லை.
இந்த நிலவரம் குறித்து கேட்டதற்கு பதிலளித்த சித்தார்த்தன், ஒரு மாத காலத்துக்குள் கைதிகள் விடுதலை மற்றும் காணிவிடுவிப்பு நிகழாவிட்டால், வரவு செலவு திட்டத்தின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது ஆதரவை வாபஸ் பெறலாம் என்றும் குறிப்பிட்டார்.
தமிழர் பிரச்சினையின் ஏனைய முக்கிய விடயங்களான, இனப்பிரச்சினைக்கான தீர்வு போன்றவற்றை உரிய காலத்தில் தீர்ப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உத்தரவாதமும் பெறப்பட வேண்டும் என்றும் சித்தார்த்தன் கூறினார்.
கடந்த காலங்களில் முக்கிய தருணங்களில் தமிழரசுக்கட்சியினர் தமக்கிடையே முடிவை தனியாக எடுத்துவிட்டு, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய கட்சிகள் மத்தியில் அதனை திணிக்கும் வகையில் நடந்துகொண்டதாகவும் சித்தார்த்தன் விசனம் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :