இலங்கை: ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை

பட மூலாதாரம், Getty Images
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை ரணில் விக்ரமசிங்கவிற்கான சிறப்புரிமைகளை பாதுகாக்குமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு இன்று கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.
இந்த கோரிக்கையை சபாநாயகர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், பொதுச் செயலாளரும் இதுகுறித்து தன்னிடம் எழுத்துமூலம் கோரியுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் அதிக உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று பிரதமராக ரணில் விக்ரமசிங்கவே பதவி வகிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
அரசியலமைப்பின் 42(4)ஆம் பிரிவின்படி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து வரப்பிரசாதங்களையும் உறுதிப்படுத்துமாறு ஐக்கிய தேசியக் கட்சி சபாநாயகிடம் கோரியுள்ளது.
எவ்வாறாயினும், ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு நேற்று சனிக்கிழமை முதல் அகற்றப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், ISHARA S.KODIKARA / getty images
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுதி செய்யப்படும் வரை ரணில் விக்ரமசிங்கவின் சிறப்புரிமைகளை பாதுகாக்குமாறு வேண்டுகோள் விடுக்கும் வகையில் தமக்கு கடிதமொன்று கிடைத்துள்ளதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வேண்டுகோளை ஜனநாயக ரீதியிலான நியாயமான கோரிக்கையாக தாம் கருதுவதாகவும் ஜனநாயக நல்லாட்சிக்காக மக்கள் ஆணையைப் பெற்றுக்கொண்ட அரசாங்கம் என்ற வகையில் இந்த வேண்டுகோளை ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவருவதாகவும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்
ஊடகங்கள் வாயிலாக சிலர் அச்சுறுத்தல் விடுத்த சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் சபாநாயகர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரச ஊடகங்களில் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படும், பலவந்த தலையீட்டினால் நாட்டிற்குள் அமைதி சீர்குலைவதற்கு அப்பால், சர்வதேச ரீதியில் ஏற்படும் பாரதூரமான விளைவுகளையும் ஜனாதிபதி உணர்வார் என தாம் நம்புவதாக கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.

பட மூலாதாரம், KIRILL KUDRYAVTSEV / getty images
சில நாடுகள் ஏற்கனவே தமது பிரஜைகள் இலங்கைக்கு செல்வதைத் தவிர்க்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளமை தற்போதைய நிலையின் பாரதூரத் தன்மையை புலப்படுத்துவதாகவும் குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், நாடாளுமன்றத்தில் எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி வரை 20 நாட்கள் மூடி வைப்பதன் ஊடாக, நாட்டிற்கு பாதகமான சூழ்நிலை ஏற்படுவதற்கு இடமளிக்க வேண்டாம் எனவும் சபாநாயகர் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜனநாயக சம்பிரதாயத்திற்கு அமைய சபாநாயகருக்கு அறிவித்தே நாடாளுமன்றத்தை ஒத்திவைக்க வேண்டும் என்பதை ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவருவதாகவும் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












