இலங்கை பிரதமரின் அலரி மாளிகையில் இருந்துவெளியேற சொல்லும் ராஜபக்ஷ; மறுக்கும் ரணில்

ரணில் விக்ரமசிங்க

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரணில் விக்ரமசிங்க

இலங்கை பிரதமரின் அலுவல்பூர்வ இல்லமான அலரி மாளிகையில் இருந்து வெளியேற பிரதமர் பதவியில் இருந்து அதிபர் மைத்ரிபால சிறிசேனவால் நீக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்க மறுத்து வருகிறார்.

2015 தேர்தல் தோல்விக்கு பிறகு அதிகாரபூர்வ இல்லத்தை தாம் திரும்ப ஒப்படைத்தது போல, ரணிலும் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று புதிதாக பிரதமர் பதவியேற்றுள்ள மகிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

அலரி மாளிகை வெள்ளிக்கிழமை மாலை முதல் பரபரப்பாகவே காணப்படுகிறது. வாகனங்கள் தொடர்ந்து வந்து செல்கின்றன. ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களும் குழுமி வருகின்றனர்.

மகிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டாலும், நானே பிரதமர் என ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். வெள்ளி இரவு முதல் ரணில் விக்ரமசிங்க தனது கட்சி உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட கட்சி ஆதரவாளர்களுடன் அலரி மாளிகையில் தங்கியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவை வெளியேற்றுவதில் புதிய பிரதமராக நியமனம் பெற்றுள்ள மகிந்த ராஜபக்ஷ தரப்பு குறியாக இருக்கிறது.

இலங்கை
இலங்கை

''ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாளை (ஞாயிறு) காலை எட்டு மணிக்கு முன்னதாக வெளியேற வேண்டும்'' என மகிந்த தரப்பு எம்.பி.யான விமல் வீரவன்ச தெரிவித்து இருந்தார்.

"இன்று (சனி) இரவு மாத்திரம் அலரி மாளிகையில் நிம்மதியாகத் தூங்க அனுமதிக்கிறோம். நாளை காலை ரணில் அங்கு இருக்க முடியாது. போலீஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர புதிய பிரதமரைச் சந்தித்து, அவரின் ஆலோசனைக்கமைய செயற்படுவதாகக் கூறியுள்ளார். அலரி மாளிகைக்கு மக்கள் வந்து, விரட்டும் நிலையை ரணில் ஏற்படுத்தக் கூடாது.'' என்று விமல் வீரவங்ச எம்.பி. தெரிவித்துள்ளார்.

இலங்கை

தொடரும் சந்திப்புக்கள்

அலரி மாளிகையில் தொடர் சந்திப்புக்கள் நடந்து வருகின்றன. ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ள உறுப்பினர்கள் புதிய பிரதமாக பதவியேற்றுள்ள மகிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவளிக்கக் கூடும் என்று நம்பப்படுகின்ற உறுப்பினர்கள் தனித்தனியாக அழைத்துப் பேசப்படுகின்றனர்.

ஏற்கனவே ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் மகிந்த தரப்பிற்கு சென்றுள்ள நிலையில், இந்தச் சந்திப்புக்கள் நடந்து வருகின்றன.

சனியன்று, கட்சி உறுப்பினர்கள் மட்டுமன்றி, வெளிநாட்டுத் தூதுவர்கள் சிலரையும் ரணில் விக்ரமசிங்க அலரி மாளிகையில் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

இலங்கை
இலங்கை

இலங்கையில் நடக்கும் நகர்வுகளை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. அனைத்து தரப்பினரும் இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு அனுகூலமான முறையில் நடந்து கொள்ள வேண்டும் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.

வன்முறைகளை தவிர்க்குமாறும், வழமையான நடைமுறைகளுக்கு அமைய செயற்படுமாறும், அரசியலமைப்பு ரீதியான நிறுவனங்கள் மற்றும் ஊடக சுதந்திரத்திற்கு மதிப்பளிக்குமாறும் ஐரோப்பிய ஒன்றியம் கேட்டுக்கொண்டுள்ளது.

மகிந்த ராஜபக்ச

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மகிந்த ராஜபக்ஷ

ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் மட்டுமல்லாது ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ருமேனியா ஆகிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் பிரித்தானிய உயர் ஆணையர் உள்ளடங்கிய ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.

பாதுகாப்பு தீவிரம்

அலரி மாளிகை, ரணில் விக்ரமசிங்கவின் வீடு ஆகியவற்றில் போலீஸ் விசேட அதிரடிப்படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். கொழும்பிலுள்ள முக்கிய பிரபுகளின் வீடுகளுக்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகத்தின் பாதுகாப்பிற்கு இலங்கை இராணுவத்தினர் அமர்த்தப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் அலுவல்பூர்வ இல்லத்திலும் மேலதிக பாதுகாப்புப் படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். புதிய பிரதமர் மகிந்த ராஜபக்சவின் இல்லத்திற்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இலங்கை
படக்குறிப்பு, ஜனாதிபதி செயலகத்தின் முன்பு

பாதுகாப்பு அமைச்சராக செயற்படுகின்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுக்கு அமைய செயற்படுவதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. நெருக்கடியான நிலை ஏற்பட்டால் நாட்டில் அனைத்து முகாம்களிலும் உள்ள இராணுவத்தினர் தயார் நிலையில் உள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கை
இலங்கை

'பொய்யான தகவல்'

"நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவுள்ள ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியிருந்து நீக்கியதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளமை மிக மோசமான ஜனநாயக மீறல். அவ்வாறான ஜனநாயக விரோத செயற்பாட்டுக்கு எதிராகவும், நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுறுமாறும் வலியுறுத்தி, ஐக்கிய தேசியக் கட்சி நாளை மறுதினம் (செவ்வாய்), கொழும்பில் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது," அந்தக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

இதேவேளை, மாளிகையை விட்டு வெளியேறுவதற்கு ரணில் விக்ரமசிங்க உடன்பட்டுள்ளார் என, உள்நாட்டு ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி குறித்து வினவியபோது, "அது பொய்யான தகவல். நான் தற்போது அலரி மாளிகையிலேயே இருக்கின்றேன். நாடாளுமன்றம் கூட்டப்பட்டு, எந்தக் கட்சிக்கு பெரும்பான்மை உள்ளது என அறிய வரும் வரையில், அலரி மாளிகையை விட்டு ரணில் விக்ரமசிங்க வெளியேற மாட்டார்" என்று முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: