You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்து விவகார துணை அமைச்சராக முஸ்லிம் நியமிக்கப்பட்டதால் இலங்கையில் சர்ச்சை
இலங்கையில் இரண்டு ராஜாங்க அமைச்சர்களும் 5 துணை அமைச்சர்களும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் செவ்வாய்க்கிழமை பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டனர்.
இதில் ஒரு துணை அமைச்சரின் நியமனம் இங்கு சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
நியமிக்கப்பட்ட கே. காதர் மஸ்தான் என்பவர் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி (வளர்ச்சி) மற்றும் இந்து மத விவகாரம் ஆகியவற்றுக்கான துணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்து மத விவகாரத்தை கவனிக்க ஒரு முஸ்லிமை பதவியேற்கச் செய்துள்ளது இலங்கையில் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து மத விவகாரம் ஆகியவற்றுக்கான அமைச்சராக டி. எம். சுவாமிநாதன் என்கின்ற இந்து மதத்தவரே இருக்கின்ற போதிலும் அவருக்கு துணை அமைச்சராக நியமிக்கப்பட்டவர் மாற்று மதத்தை சேர்ந்தவராக இருப்பது குறித்து பல தரப்பினரும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
சமூக ஊடகங்களில் பலர் இர் பற்றி கடுமையான விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர். இதுதான் நல்லாட்சி என்றும், இதுதான் மத நல்லிணக்கம் என்றும் இதுதான் நல்லாட்சி அரசாங்கத்தால் கூறப்பட்ட விஞ்ஞான முறையிலான அமைச்சரவை என்றும் பலர் ஏளனம் செய்துள்ளனர்.
இந்த நியமனம் மாற்றப்படவேண்டும் என்று கூறுகின்றார் ஞாயிறு தினக்குரலின் ஆசிரியரான ஆர். பாரதி.
இந்து மக்களின் தேவைகளை புரிந்து செயற்படவும், அவர்களுக்கு நம்பிக்கையை கொடுக்கவும் இந்து மதத்தை சோந்த ஒருவரே அந்த அமைச்சுக்கான துணையமைச்சராக நியமிக்கப்படுவது பொருத்தமாக இருக்கும் என்று கூறிய அவர், இந்த நியமனம் ஏதாவது அவசரத்தில் செய்யப்பட்டதா என்று தெரியாது, ஆனாலும் அதில் மாற்றம் செய்வதே உகந்தது என்று கூறினார்.
இந்த நியமனம் ஜனாதிபதியால் கொடுக்கப்பட்டதால், இது விடயத்தில் காதர் மஸ்தான் மீது எந்தக் குறையும் சொல்ல முடியாது என்று கூறுகின்ற பத்திரிகையாளரான என்.எம். அமீன், இதற்கு முன்னதாக ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது, பௌத்தம், இந்து மற்றும் முஸ்லிம் ஆகிய அமைச்சுக்களை தன்வசம் வைத்திருந்தார், ஆனால் அப்போது எவரும் குறைகூறவில்லையே என்று கேள்வி எழுப்புகிறார்.
முன்னர், யூலிப் விஜேசேகர என்ற மாற்று மதத்தவர் இஸ்லாமிய இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்ததாகவும் அமீன் குறிப்பிடுகிறார்.
புனர்வாழ்வு, மீள்கட்டுமானம் மற்றும் வடக்கு அபிவிருத்தி ஆகியவற்றுடன் இந்து திணைக்களமும் சேர்ந்து இருக்கும் நிலையில் அதனைப் பிரிக்க முடியாது என்ற காரணத்தினால்தான் காதருக்கு இந்து விவகாரமும் சேர்த்து வழங்கப்பட்டுள்ளதாகக் கூறும் கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன், முழு அமைச்சராக டி. எம். சுவாமிநாதன் என்னும் இந்து இருக்கையில் இது அவ்வளவு பிழையல்ல என்று கூறுகிறார்.
அத்துடன் ரஞ்சித் அலுவிகார என்னும் பௌத்த மதத்தவரே கிறிஸ்தவ விவகாரங்களுக்கு இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டதாகவும் அவர் கூறுகின்றார்.
இருந்தபோதிலும், பல இந்து அமைப்புக்கள் இந்த விவகாரம் தொடர்பில் தன்னிடம் முறையிட்டதாகவும் அமைச்சர் ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார். இந்து மத விவகாரங்களை வேறு மதத்தைச் சேர்ந்த ஒருவர் கையாள்வது சிரமமாக இருக்கும் என்று அவர்கள் கருதுவதாகவும் ராதாகிருஷ்ணன் கூறினார்.
இவ்வளவு நாளும் இந்துக்கள் "இந்து விவகார" அமைச்சராக இருந்து எதனை சாதித்தார்கள் என்று கேள்வி எழுப்பும் பெண்ணியச் செயற்பாட்டாளரான எஸ்.டி. நளினி ரட்ணராஜா, அந்த அமைச்சுக்கு உள்ள அதிகாரம் என்ன, நிதி ஒதுக்கீடு என்ன என்பன போன்றவற்றை ஆராயாமல், எந்த மதத்தவர் அமைச்சராகிறார் என்று பார்ப்பது பொருத்தமற்றது என்கிறார்.
அது மட்டுமல்லாமல், 52 சதவீதம் பெண்கள் உள்ள இலங்கையில், ஆண்கள் பெண்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாயின் ஒரு முஸ்லிம் இந்து மத விவகாரத்தை கவனிப்பதில் என்ன தவறு என்றும் நளினி கேள்வி எழுப்புகிறார்.
பெண்கள் விவகாரத்துக்கு பொறுப்பாக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா இருந்தபோது கேள்வி எழுப்பாதவர்கள், காதர் மஸ்தான் இந்து விவகாரத்தை பொறுப்பேற்பதை எதிர்ப்பதேன் என்றும் அவர் வினவினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்