You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
''இந்த உலகம் எங்களை சேர்ந்து வாழவிடவில்லை'' - பெண் ஓரினச்சேர்க்கையாளர்கள் தற்கொலை
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பெண் ஓரினச்சேர்க்கையாளர்களாக கருதப்படும் இருவர், அங்குள்ள சபர்மதி ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து பிபிசியிடம் பேசிய சபர்மதி காவல்நிலைய துணை ஆய்வாளரான சிங், இந்த சம்பவம் சபர்மதி ஆற்றங்கரைக்கு அருகிலுள்ள எலிஸ் மேம்பாலத்தில் நடைபெற்றதாகவும், பிறகு தங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டவுடன் சம்பவ இடத்திற்கு சென்று, இரண்டு பெண்கள் மற்றும் ஒரு சிறுமியின் சடலத்தை கைப்பற்றியதாகவும் தெரிவித்தார்.
மேலும், சம்பவம் நடந்தேறிய இடத்திற்கு அருகில், தற்கொலை செய்துகொண்ட பெண்களில் ஒருவர் காகித தட்டிலும், அருகிலுள்ள சுவரிலும் தற்கொலை குறிப்பை எழுதி வைத்துள்ளதாகவும், அதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
தற்கொலை செய்துகொண்ட ஆஷா மற்றும் பாவ்னா ஆகிய இரு பெண்களில் ஆஷாவுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. அதில் தனது மூன்று வயது குழந்தையுடன் ஆற்றில் குதித்து ஆஷா தற்கொலை செய்துகொண்டார்.
தங்களை துப்பட்டாவினால் கட்டிக்கொண்டு அவர்கள் ஆற்றில் குதித்ததாக போலீசார் கூறுகின்றனர்.
உதட்டு சாயத்தை பயன்படுத்தி தற்கொலை குறிப்பு எழுதப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
"நாங்களிருவரும் இணைந்து வாழ்வதற்காக உலகத்திலிருந்து தனித்திருந்தோம். ஆனால், இந்த உலகம் எங்களை வாழவிடவில்லை" என்று அவர்கள் எழுதிய தற்கொலை குறிப்பு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தற்கொலை குறிப்பை கைப்பற்றிய போலீசார், தற்கொலை செய்துகொண்டவர்கள் பெண் ஓரினச்சேர்கையாளர்களாக இருக்கலாம் என்ற கோணத்தை முதன்மையாக கொண்டு விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இதுகுறித்து ஆஷாவின் உறவினரான பரத் வாக்ஹெலா பிபிசியிடம் பேசும்போது,"எங்களுக்கு பாவ்னா என்பவர் யார் என்றே தெரியாது. ஆஷா ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அவர் வேலைக்கு இரண்டு நாட்கள் விடுப்பு எடுத்ததால் பணியிலிருந்து நீக்கப்பட்டார். நிறுவனத்திலுள்ள நிலுவைகளை தீர்ப்பதற்காக தான் செல்வதாக கூறிவிட்டு அவர் வீட்டிலிருந்து கிளம்பினார். போலீசார் எங்களது வீட்டிற்கு வந்த பிறகுதான் அவரது மரணம் குறித்து எங்களுக்கு தெரியவந்தது" என்று கூறினார்.
"ஆஷாவின் கணவர் தினக்கூலி அடிப்படையில் வேலை செய்து வந்தார். அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். அவர்களில் ஒருவர் ஆஷாவுடன் ஆற்றில் குதித்து இறந்துவிட்டார். மற்றொரு குழந்தை ஆஷாவின் கணவருடன் உள்ளது" என்று அவர் மேலும் கூறினார்.
ஆஷாவும், பாவ்னாவும் ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததாக உள்ளூர் செய்தித்தாள்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஒரே பாலினத்தை சேர்ந்தவருடன் உறவுகொள்வதை இந்திய தண்டனை சட்டத்தின் 377 பிரிவு சட்டவிரோதம் என்று கூறுகிறது.
377 பிரிவின்படி ஒருவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனையை வழங்குவதற்கு அது வழிவகை செய்கிறது.
பிரிட்டிஷ் ஆளுகைக்கு கீழ் இந்தியா இருந்தபோது 1861ல் இந்த சட்டப்பிரிவு உருவாக்கப்பட்டது.
இருந்தபோதிலும், நாடெங்கிலும் பல ஆர்வலர்களும், சமூக சேவகர்களும் இந்த சட்டப்பிரிவை மாற்றக்கோரி அரசாங்கத்திடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்