You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஒரு நாள் பள்ளிக்கு வந்தால் 100 ரூபாய் உதவித்தொகை: இலங்கையில் புதிய திட்டம்
இலங்கையில் வறுமை மற்றும் பிற காரணங்களினால் பள்ளிக்கூடம் செல்லாத மாணவர்களுக்கு மாதம்தோறும் சிறப்பு கொடுப்பணவு வழங்குவது குறித்து மத்திய கல்வி அமைச்சகம் கவனம் செலுத்தி வருகின்றது.
அடுத்த வருடம் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள இந்த திட்டம் ஊடாக மாணவர்கள் இடை விலகல் தடுக்கப்படுவது மட்டுமன்றி, அவர்களின் கல்வி ஆர்வத்தையும் அதிகரிக்க முடியும் என கல்வி அமைச்சகம் எதிர்பார்க்கின்றது.
இந்தத் திட்டத்தின் கீழ் பள்ளிக்கூடத்திற்கு சமூகமளிக்கும் நாளொன்றுக்கு ரூபாய் 100 வீதம் மாதந்திரக் கொடுப்பணவு வழங்குவது தொடர்பாக தற்போது ஆராயப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூறுகின்றார்.
அடுத்த ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தில் இது தொடர்பான யோசனை முன்வைக்கப்படவிருப்பதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
இலங்கையில் தற்போது 5 முதல்17 வரை பள்ளிக் கல்வி பெறுவதற்கான வயதாகும். அடுத்த ஆண்டு 5 முதல் 19 வரை வயதை அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. தற்போது இலங்கையில் அரச மற்றும் தனியார் பள்ளிகளில் சுமார் 45 லட்சம் மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.
இலவசக் கல்வித் திட்டத்தின் கீழ் இலவசப் பாட நூல்கள், சீருடை, சத்துணவு மற்றும் மருத்துவக் காப்புறுதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அரசாங்கத்தினால் மாணவர்களுக்கு இலவசமாகக் கிடைக்கின்றன.
இந்த வசதிகள் மற்றும் சலுகைகள் கிடைத்தும் பள்ளி செல்லக்கூடிய வயதுடைய 4,52,661 பேர் பள்ளிக்கூடம் செல்வதில்லை என ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 51,249 பேர் இதுவரை ஒரு நாள் கூட பள்ளிக்கூடம் செல்லாதவர்கள் என கூறப்படுகின்றது.
கல்வி அமைச்சினால் முன்வைக்கப்பட்டுள்ள இந்த யோசனைக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ள இலங்கை ஆசிரியர் சங்கம் " மாணவர் வரவுக்கு ரூபாய் 100 என்ற இந்த யோசனை அவசியமற்றது" என கூறுகின்றது.
"அடுத்த வருடம் நடைபெறவுள்ள தேர்தல்களை மையப்படுத்திய இந்த யோசனை முன் வைக்கப்படுகின்றது" என அந்த சங்கத்தின் பொதுச் செயலாளரான ஜோசப் ஸ்டாலின் குற்றம் சாட்டுகின்றார்.
"கல்வியில் சம வாயப்பு மற்றும் பாகுபாடு இன்றி பள்ளிக்கூடங்கள் அபிவிருத்தி செய்யப்படுவது பற்றித்தான் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்துகின்றார்.
இந்த யோசனையை "மாணவர்களின் வரவுக்கு கொடுக்கும் லஞ்சம் "என விமர்சிக்கின்றார் ஓய்வு பெற்ற பள்ளிக்கூட அதிபரான சிதம்பரபிள்ளை நவரெத்தினம்.
"இந்த யோசனை பாடசாலை நிர்வாகத்தையும் பெற்றோரையும் தவறாக வழி நடத்தும். பெற்றோர் பிள்ளைகளை வேலைக்கு அனுப்புவது போன்று அனுப்புவார்கள். மாணவர்கள் வரவு பதிவு செய்யும் சந்தர்ப்பத்தில் பள்ளிக்கூடங்களில் நிர்வாக முறைகேடுகளுக்கும் வாய்ப்பு உண்டு" என்று அவர் கூறுகிறார்.
"இடை விலகல் மற்றும் பாடசாலை செல்லாத மாணவர்களை இனம் கண்டு இணைத்துக் கொள்வதற்காக பிரதேச ரீதியாக சிறப்புப் பாடசாலைகள் அமைக்கப்பட்டு இலவச உணவு மற்றும் தங்குமிட வசதிகளை அரசு ஏற்படுத்திக் கொடுப்பது தான் பொருத்தமான தீர்வாக இருக்கும்" என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.
பிற செய்திகள்
- ஆப்கானிஸ்தானில் செயல்பாடுகளை குறைக்கிறது செஞ்சிலுவை சங்கம்
- அமெரிக்க தேர்தல்: ரஷ்யா நிதியுதவி செய்த விளம்பரங்களை கண்டறிந்தது கூகுள்
- 10 வயதில் குழந்தை பெற்ற சிறுமி: இரண்டாவது மாமாவே காரணம் என்கிறது போலீஸ்
- காலில் முடியுடன் விளம்பரத்தில் நடித்த பெண் மாடலுக்கு பாலியல் அச்சுறுத்தல்
- ஹிட்லர் வரைந்த ஓவியம் கிழிப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- ட்விட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்