You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
7 ஊழியர்கள் பலி: ஆப்கனில் இரண்டு அலுவலகங்களை மூடுகிறது செஞ்சிலுவை
இந்த ஆண்டில் மட்டும் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தை (ஐ.சி.ஆர்.சி) சேர்ந்த 7 பேர் ஆப்கானிஸ்தானில் நடந்த தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டில் உள்ள தனது தன்னார்வலர்களின் எண்ணிக்கையை பெரிய அளவில் குறைக்கிறது செஞ்சிலுவை சங்கம்.
இரண்டு செஞ்சிலுவை அலுவலகங்கள் மூடப்பட உள்ளதோடு, மூன்றாவது அலுவலகத்தின் பணிகள் குறைக்கப்படவுள்ளது.
அந்நாட்டு செஞ்சிலுவை சங்க தலைவர், இந்த `வலிதரக்கூடிய முடிவினால்` என்பது வடக்கில் உள்ள மக்களுக்கு தேவைப்படும் உதவிகள் இனி கிடைக்காது என்றார்.
ஆப்கானிஸ்தானை விட்டு, செஞ்சிலுவை சங்கம் வெளி்யேறாது என்பதை தெரிவித்த அவர், அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் சந்திக்கும் இடர்ப்பாடுகளை குறைக்கவேண்டியிருக்கிறது என்றார்.
சமீப காலங்களில், தாலிபன் மற்றும் இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துகொள்ளும் குழு ஆகியவை தாக்குதலை அதிகப்படுத்தியுள்ளதால், வேறு பல மனிதாபிமான அமைப்புகள் ஆப்கனிஸ்தானை விட்டு வெளியேறிவிட்டன.
கடந்த மாதம், மசர்-இ-ஷரிஃப்பில், செஞ்சிலுவை சங்கத்தின் பிசியோதெரபி மருத்துவர் ஒருவர், நோயாளி ஒருவரால் கொல்லப்பட்டார்.
"எங்களின் தலைமையகத்தில் உள்ள உயரதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, வேறு வழியே இல்லாததால், ஆப்கனிஸ்தானில் குறிப்பாக வடபகுதிகளில் எங்களின் இருப்பையும், செயல்பாடுகளையும் குறைத்துகொள்ளும் முடிவிற்கு வந்தோம்" என்கிறார் அந்நாட்டு செஞ்சிலுவை சங்கத் தலைவர் மோனிகா சானரல்லி.
"ஆபத்தில் மாட்டிகொள்வதே எங்களின் முக்கியக் கவலையாக மாறியது. ஆப்கனிஸ்தானில் ஆபத்தே இல்லாத நிலை இல்லை என்று நாங்கள் அறிவோம். அப்படி ஆபத்து இல்லாத நிலைதான் வேண்டும் என்று நினைக்கவும் இல்லை. எங்களின் பாதுகாப்பு என்பது, ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் பேச்சுவார்த்தை மூலம் வருவது. பலவீனமானவர்களுக்கு செய்யும் அர்த்தமுள்ள சேவையில் இருந்தே ஏற்றுக்கொள்ளுதல் வருகிறது."
மைமானா மற்றும் குண்டூஸில் உள்ள ஐ.சி.ஆர்.சி அலுவலகங்கள் மூடப்பட உள்ளன. அத்துடன், மசர்- இ- ஷரிஃப்பில் உள்ள மறுவாழ்வு மையத்தை, தங்கள் உள்ளூர் கூட்டாளிகளிடம் ஒப்படைக்கவும் உள்ளது செஞ்சிலுவை சங்கம். உலகளவில் செஞ்சிலுவை சங்கம் பெரிய அளவில் செயல்படும் நான்காவது இடம் ஆப்கானிஸ்தானாகும்.
சர்வதேச செஞ்சிலுவை சங்கம், ஆப்கனிஸ்தானில் 30 ஆண்டுகளாக பணியாற்றியுள்ளது. அதன் 1,800 ஊழியர்கள், மருத்துவ உதவிகள் அளித்தல், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுதல், சிறையில் உள்ளவர்களை சந்தித்தல், அவர்கள் தமது குடும்பத்தோடு தொடர்பில் இருக்க உதவுதல் ஆகிய பணிகளை செய்கின்றனர்.
ஆப்கனின் சில இடங்களில், குறிப்பாக வடக்கில், இத்தகைய உதவிகளை செய்யக்கூடிய ஒரே சர்வதேச அமைப்பாக இது உள்ளது.
"எங்களின் சேவைகளை நிறுத்துவதால் உள்ள பின்விளைவுளை நாங்கள் அறிவோம், இருந்தாலும் எங்களுக்கு வேறு வாய்ப்புகள் எதுவும் இல்லை" என்கிறார் சானரெல்லி.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- ட்விட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்