You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆள் கடத்தல் குற்றச்சாட்டு: இலங்கையில் முன்னாள் போராளிக்கு ஆயுள் தண்டனை
விடுதலைப்புலிகளின் பயங்கரவாதச் செயற்பாடுகளில் இணைப்பதற்காகப் பெண் ஒருவரைக் கடத்திச் சென்றார் என்ற குற்றத்திற்காக முன்னாள் போராளி ஒருவருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் ஆயுட்கால சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
மற்றுமொரு வழக்கில் வவுனியா பம்பைமடு ராணுவ முகாமில் இடம்பெற்ற ராணுவ கொண்டாட்டம் ஒன்றின் போது மதுபோதையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தில் சக இராணுவ கோப்பரல் ஒருவரைக் கொலை செய்தார் என்ற குற்றத்திற்காக ராணுவ சிப்பாய் ஒருவருக்கு இந்த நீதிமன்றம் 2 வருட கடூழியச் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியுள்ளது.
இரண்டு வெவ்வேறு வழக்குகளில் இன்று செவ்வாய்க்கிழமை வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரனால் இந்தத் தீர்ப்புக்கள் இன்று செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டுள்ளன.
ராணுவத்தின் புனர்வாழ்வு பயிற்சி பெற்றதன் பின்னர் யாழ் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றிய முன்னாள் போராளி ஒருவருக்கு எதிராக கிளிநொச்சி காவல் நிலையத்தில் பயங்கரவாதச் செயற்பாட்டுக்காக ஆட்கடத்தலில் ஈடுபட்டிருந்தார் என முறையிடப்பட்டிருந்தது.
விடுதலைப்புலிகளின் படையணித் தேவைக்காக இளைஞர்களும் யுவதிகளும் பிடித்துச் செல்லப்பட்ட 2007 ஆம் ஆண்டு காலப்பகுதியில் விஜயபாலன் மஞ்சுளா என்ற இளம் பெண்ணான தனது மகளை பயங்கரவாதச் செயற்பாடுகளுக்காகக் கடத்திச் சென்றார் என்று கணைஸ் கண்ணதாஸ் என்பவருக்கு எதிராக நாகரத்தினம் விஜயபாலன் 2014-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9-ஆம் தேதி இந்த முறைப்பாட்டைச் செய்திருந்தார்.
இதனையடுத்து முன்னாள் போராளியாக இருந்து ராணுவத்தின் புனர்வாழ்வுப் பயிற்சியின் பின்னர் விடுதலை செய்யப்பட்டிருந்த கணைஸ் கண்ணதாஸ் 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15-ஆம் தேதி பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
விசாணைக்கு உட்படுத்தப்பட்ட அவர் பயங்கரவாதச் செயற்பாடுகளுக்காக விடுதலைப்புலிகளின் அமைப்புக்காக ஆட்கடத்தலில் ஈடுபட்டார் என்ற குற்றம் சுமத்தி 2016-ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் திகதி அவருக்கு எதிராகக் குற்றம்சாட்டி, வவுனியா மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் முன்னிலையில் சாட்சியமளித்த கடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட பெண்ணின் தந்தை விஜயாபலனும், தாயார் சாந்திமலர் ஆகியோர் சாட்சியமளித்தனர்.
விடுதலைப்புலிகளின் செயற்பாட்டிற்காகத் தமது மகள் மஞ்சுளாவை தங்களுடைய வீட்டில் இருந்து கண்ணதாஸ் இழுத்துச் சென்றதாக அவர்கள் சாட்சியத்தில் தெரிவித்தனர்.
அத்துடன் ராணுவத்தினருடனான விடுதலைப்புலிகளின் சண்டையில் தமது மகள் கொல்லப்பட்டுவிட்டார் என்பதையும் அந்த பெற்றார் தெரிவித்தனர்.
தொடர்ந்து பயங்கரவாதப் புலனாய்வு பிரிவு உத்தியோகத்தர்களின் சாட்சியத்தையடுத்து, எதிரி கண்ணதாஸ் சாட்சியமளித்தார்.
விடுதலைப்புலிகள் அமைப்பில் உறுப்பினராக இருந்ததை ஒப்புக்கொண்ட அவர், இராணுவத்;தினரால் வழங்கப்பட்ட புனர்வாழ்வுப் பயிற்சியின் பின்னர் தனது குடும்பத்துடன்தான் இணைக்கப்பட்டதன் பின்னர், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றியதாகவும் அவர் தனது சாட்சியத்தில் கூறினார்.
விசாரணைகளின் முடிவில் எதிரி குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்தது.
ராணுவத்தின் புனர்வாழ்வுப் பயிற்சி பெற்று எதிரி விடுதலை செய்யப்பட்டிருந்தாலும், பயங்கரவாதச் செயற்பாட்டுக்காக ஆட்கடத்தலில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் எதிரி குற்றவாளியாகக் காணப்பட்டிருப்பதனால், சட்டத்தின் அடிப்படையில் அவருக்குத் தண்டனை வழங்க வேண்டியிருப்பதாகத் தெரிவித்த வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் ஆயுட்காலச் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
ராணுவ சிப்பாய்க்கு 2 ஆண்டு கடுங்காவல் சிறை
மற்றுமொரு வழக்கில் வவுனியா பம்பைமடுவில் ராணுவ முகாமில் சக ராணுவ கோப்ரல் தரத்திலான ஒருவரை மது போதையில் கொலை செய்த குற்றத்திற்காக சிப்பாய் ஒருவருக்கு இரண்டு வருட கடூழியச் சிறைத் தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
அந்த ராணுவ முகாமில் 2011-ஆம் ஆண்டு ஜுலை 20-ஆம் தேதி நடைபெற்ற ஆண்டு பூர்த்திவிழா வைபவத்தின் போது நடைபெற்ற விருந்தில் மது போதையில் இரண்டு ராணுவத்தினருக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கொலையில் முடிந்திருந்தது.
இந்த சம்பவத்தில் நிரஞ்சன் குமார பண்டர என்பவரை கொலை செய்ததாக தனுஸ்க பணடார என்பவருக்கு எதிராக சட்டமா அதிபரினால் வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
வழக்கு விசாரணைகளின் முடிவில் மது போதையில் இருவருக்கும் இடையில் நடைபெற்ற வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறி கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் எதிரி குற்றவாளியாகக் காணப்பட்ட போதிலும், கொலை செய்யும் நோக்கம் அவருக்கு இருக்கவில்லை.
அத்துடன் இருவருமே மது போதையில் இருந்துள்ளனர் என தெரிவித்த நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் எதிரிக்கு இரண்டு வருட கடூழியச் சிறைத் தண்டனை விதித்ததுடன் இறந்தவரின் குடும்பத்தினருக்கு ஒரு லட்சம் ரூபா நட்டயீடு வழங்க வேண்டும் என்றும், பத்தாயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.
இந்த இரண்டு வழக்குகளிலும் வழக்குத் தொடுனர் தரப்பில் அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் முன்னிலையாகி சாட்சிகளை நெறிப்படுத்தினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்