You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மூதூர் மாணவிகள் பாலியல் வன்முறை: தமிழ் - முஸ்லிம் இனங்களுக்கிடையில் முறுகல் நிலை
இலங்கையில் திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேசத்தில் மூன்று தமிழ் மாணவிகள் பாலியல் வன்முறைக்குள்ளான சம்பவத்தையடுத்து அந்த பிரதேசத்தில் தமிழ் - முஸ்லிம் இனங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலை குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் ஓஸ்ரின் பெர்ணான்டோ இரு தரப்பு பிரதிநிதிகளையும் சந்தித்து ஆராய்ந்துள்ளார்.
இரு தரப்பும் சாலைகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதை கைவிட்டு உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க போலிஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஆளுநர் வலியுறுத்தி கேட்டுள்ளார்.
கடந்த 29ம் திகதி மூதூர் பிரதேசத்திலுள்ள அரசு பள்ளிக் கூடமொன்றில் ஞாயிற்றுக்கிழமை இந்து சமய வகுப்புக்கு சென்றிருந்த 6 - 8 வயதான மாணவிகள் மூன்று பேர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டனர்.
சம்பவம் தொடர்பாக பள்ளிக்கூட கட்டிட நிர்மாண பணி தொழிலாளர்கள் உட்பட அயல் பகுதியை சேர்ந்த 5 முஸ்லிம்கள் சந்தேகத்தின் பேரில் கைதாகி நீதிமன்ற அடையாள அணிவகுப்பு நடைபெற்றது.
மாணவிகளால் சந்தேக நபர்கள் அடையாளம் காட்டப்படவில்லை. இந்த நபர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளர்.
பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு நீதி கோரியும் இந்த சம்பவத்தை கண்டித்தும் கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் பிரதேசங்களில் கடந்த 10 நாட்களாக பள்ளி மாணவர்கள் மற்றும் சமூக அமைப்புகளின் ஏற்பாட்டில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த போராட்டங்களின் போது முஸ்லிம்களை கேவலப்படுத்தும் வகையிலான சில நிகழ்வுகளும் இடம் பெற்றுள்ளதாகவும் சமூக வலைதளங்களிலும் சில ஊடகங்களிலும் முஸ்லிம் சமூகத்தை தொடர்புபடுத்தி தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாகவும் முஸ்லிம் சமூக அமைப்புகளினால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இது போன்ற செயல்பாடுகளை கண்டித்து மூதூர் , தோப்பூர் பிரதேச முஸ்லிம்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்புடைய கட்டுரைகள்:
இந்த ஆர்பாட்டங்களில், பாதிக்கப்பட்டுள்ள மாணவிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும். உண்மையான குற்றவாளி கண்டு பிடிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் அவர்களால் முன் வைக்கப்பட்டுள்ளன.
நீதிமன்ற அடையாள அணி வகுப்பில் சந்தேக நபர்கள் அடையாளம் காணப்படாததை குறிப்பிட்டு அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் முஸ்லிம்கள் தரப்பில் கோரிக்கையும் அவர்களின் போராட்டங்களின் போது முன் வைக்கப்பட்டிருந்தன..
இந்த ஆர்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களின் விளைவாக மூதூர் பிரதேசத்தில் தமிழ் - முஸ்லிம் இனங்களுக்கிடையில் காணப்படுகின்ற முறுகல் நிலை குறித்து ஆராய்வதற்காகவே ஆளுநர் ஓஸ்ரின் பெர்ணான்டோவினால் அவரது அலுவலகத்தில் சிறப்பு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்