யாழ் பல்கலையில் இரண்டு நாள் முன்னதாகவே மாவீரர் தினம் அனுசரிப்பு

யாழ் பல்கலைக்கழக சமூகம் இன்று வெள்ளிக்கிழமை மாவீரர் தினத்தை அனுட்டித்துள்ளது.

பல்கலைக்கழகத்தின் கைலாசபதி அரங்கில் ஒன்று கூடிய பல்கலைக்கழக மாணவரகள் மற்றும் பல்கலைக்கழக சமூகத்தினர், யுத்த மோதல்களின் போது உயிரிழந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்களை நினைவுகூர்ந்து மெழுகுதிரிகளை ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தியிருக்கின்றனர்.

ராணுவத்தினருடனான மோதல்களிலும், பல்வேறு தாக்குதல் நடவடிக்கைகளிலும் உயிரிழந்த விடுதலைப்புலி உறுப்பினர்களை நினைவுகூர்வதற்காக நவம்பர் மாதம் 27 ஆம் திகதி மாவீரர் தினத்தை வருடந்தோறும் விடுதலைப்புலிகள் அனுட்டித்து வந்தனர்.

இந்த மாவீரர் தினத்தை அனுட்டிப்பது சட்டத்திற்கு விரோதமானது என அறிவித்து, முந்தைய அரசாங்கம் அதற்குத் தடைவிதித்திருந்தது.

ஆயினும் ஆட்சி மாற்றத்தின் பின்னர் யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூறுவதற்கு அரசாங்கம் அனுமதியளிக்க வேண்டும் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அரசுக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடிய ஜேவிபியினர் தமது இறந்த சகாக்களை நினைவுகூர்வதற்கு அரசாங்கங்கள் அனுமதியளித்திருப்பது போன்று விடுதலைப்புலிகளை நினைவு கூர்வதற்கும் இடமளிக்கப்பட வேண்டும் என்ற வாதமும் முன் வைக்கப்பட்டிருந்தது.

உயிரிழந்தவர்களை நினைவு கூர்வதற்குத் தடையில்லை. ஆனால் விடுதலைப்புலிகளை நினைவுகூர முடியாது. விடுதலைப்புலிகளை நினைவுகூர்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்ற அறிவித்தலும் அரச தரப்பில் வெளியிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்றிரவு யாழ் பல்கலைக்கழகத்தின் பல இடங்களிலும் மாவீரர்களை நினைவுகூரும் சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, இன்று நண்பகல் யாழ் பல்கலைக்கழகத்தில் மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு அமைதியான முறையில் நடந்தேறியிருக்கின்றது.