You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தயான் சந்த்: தேசிய விளையாட்டு தினம் - இதை ஏன் கொண்டாடுகிறோம்? 5 தகவல்கள்
இந்திய ஹாக்கி உலகின் ஜாம்பவான், மேஜர் தயான் சந்த் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில், இந்தியா ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29ஆம் தேதியை 'தேசிய விளையாட்டு தினம்' ஆக கொண்டாடுகிறது. இந்த நாளில் உடல் செயல்பாடு, விளையாட்டு மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இது குறித்த ஐந்து முக்கிய தகவல்களை பார்க்கலாம்.
1) முதல் தேசிய விளையாட்டு தினம், இந்தியாவில் 2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி கொண்டாடப்பட்டது. 'ஹாக்கி அணியின் வழிகாட்டி' மற்றும் 'ஹாக்கி சாகச நாயகன்' என்று பரவலாக அறியப்படும் மேஜர் தயான் சந்த் 1905ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி பிறந்தார். அதைக் கொண்டாடும் வகையில் தேசிய விளையாட்டு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
2) தேசிய விளையாட்டு தினத்தின் முதன்மை குறிக்கோள், விளையாட்டின் முக்கியத்துவம் மற்றும் அனைத்து குடிமக்களின் அன்றாட வாழ்வில் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பது பற்றிய விழிப்புணர்வை ஊக்குவிப்பதாகும். உடல் செயல்பாடுகள் மற்றும் வாழ்க்கையில் விளையாட்டின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகள், நிகழ்வுகள், கருத்தரங்குகள் போன்றவற்றையும் இந்த நாளில் மத்திய, மாநில அரசுகள் நடத்துகின்றன.
மேஜர் தயான் சந்த் பற்றி நமக்கு வேறு என்ன தெரியும்?
3) ஹாக்கி வீரர் மேஜர் தயான் சந்த், இந்திய ஆண்கள் ஹாக்கி அணியில் வீரராக இருந்தார். 'ஹாக்கியின் ஜாம்பவான்' என்று பரவலாக அறியப்படும் தயான் சந்த், உத்தர பிரதேசத்தில் உள்ள அலகாபாத்தில் (பிரயாக்ராஜ்) பிறந்தார். சுதந்திரத்திற்கு முந்தைய காலத்திலேயே அவர் பிரபலம் ஆனார்.
4) இந்திய ஹாக்கி அணியின் நட்சத்திரமான இவர், 1928இல் ஆம்ஸ்டெர்டாம், 1932இல் லாஸ் ஏஞ்சலஸ், 1936இல் பெர்லின் ஆகிய இடங்களில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்தியா தனது முதல் ஹாட்ரிக் ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை வெற்றியுடன் முடிக்க உதவுவதில் முக்கிய பங்காற்றினார். அவற்றில் மட்டும் அவர் அடித்த கோல்களின் எண்ணிக்கை 39. இவர் பங்கெடுத்த 19 வருட ஹாக்கி போட்டிகளில் 185 ஆட்டங்களில் பங்கேற்றார். அவற்றில் இவர் அடித்த ஒட்டுமொத்த கோல்களின் எண்ணிக்கை 570.
5) 1956ஆம் ஆண்டில் இந்திய ராணுவத்தின் பஞ்சாப் படைப்பிரிவில் மேஜராக பணியாற்றி ஓய்வு பெற்றபோது, அதே ஆண்டு இந்திய அரசாங்கம் இவருக்கு குடிமக்களுக்கு வழங்கப்படும் மூன்றாவது உயரிய விருதாக கருதப்படும் பத்ம பூஷணை வழங்கி கெளரவித்தது. 1979ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி இவர் காலமானார். பாக்ஸிங் உலகில் ஹெவிவெயிட் பாக்சர் ஆக கோலோச்சிய முகம்மது அலியை 20ஆம் நூற்றாண்டின் சிறந்த வீரராக 1999இல் பிபிசி அடையாளப்படுத்தி கெளரவித்தது. அவருக்கு நிகரான புகழை பெற்றவர் மேஜர் தயான் சந்த் என்று பிபிசியின் விளையாட்டுப்பிரிவு அழைத்தது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்