ஐபிஎல் 2022: விராட் கோலியின் கோல்டன் டக் - ரன் மெஷினுக்கு என்ன பிரச்னை?

பட மூலாதாரம், BCCI / IPL
- எழுதியவர், அஷ்ஃபாக்
- பதவி, பிபிசி தமிழ்
விராட் கோலிக்கு என்ன ஆனது என்பதுதான் இப்போது இணையத்தில் கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் தேடப்படும் கேள்வியாக மாறியிருக்கிறது.
ஐபிஎல் போட்டிகளில் அதிக ரன்கள் விளாசிய பேட்ஸ்மேன், ஒரே சீசனில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் என ஐபிஎல் டி20 ஃபார்மட்டில் தன்னை யாரும் நெருங்க முடியாத அளவுக்கு உச்சத்தில் இருந்த விராட் கோலி இப்போது ஆடுகளத்தில் கடுமையாக திணறிக்கொண்டிருப்பது அவரது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியிருக்கிறது.
க்ளாசான ஷாட்களும் ஆக்ரோஷமும் ஒருசேர கோலியின் பேட்டில் இருந்து வெளிப்பட்டு பல நாட்கள் ஆகின்றன
ஐபிஎல்லின் ரன் மெஷின்
2008ல் நடந்த ஐசிசி U 19 உலக கோப்பையை விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வாகை சூடியது. அதிரடியான பேட்டிங் ஸ்டைல் மூலம் உலகிற்கு அறிமுகமான கோலிக்கு அதே ஆண்டு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு விளையாட வாய்ப்பு கிடைத்தது. 2013ல் பெங்களூரு அணியின் கேப்டனாகவும் உயர்ந்தார்.
2016ல் நடந்த ஐபிஎல் தொடரை கிரிக்கெட் ரசிகர்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை. அது முழுக்க முழுக்க கோலியின் காலம். எப்படி பந்துவீசினாலும் துல்லியமான ஷாட்களால் எதிரணி பவுலர்களை கடுமையாக மிரட்டிக் கொண்டிருந்தார் விராட் கோலி. அந்த சீசனில் மட்டும் 7 அரைசதம், 4 சதங்களை அடித்து நல்ல ஃபாமில் வலம் வந்தார். 2016 தொடரில் கோலி அடித்த மொத்த ரன்கள் 973. ஐபிஎல் தொடரில் ஒரு வீரர் எடுத்த உச்சபட்ச ஸ்கோர் இதுவாகும். இந்த ஸ்கோரை இதுவரை எந்த பேட்ஸ்மேனும் முறியடிக்கவில்லை. 2016ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்ததற்கு விராட் கோலியின் ரன் மழையும் முக்கிய காரணம்.

பட மூலாதாரம், BCCI/IPL
விராட் கோலியின் சறுக்கல்
விராட் கோலி ஐபிஎல்-லில் கடைசியாக சதம் விளாசியது 2019 தொடரில்தான். 14 போட்டிகளில் விளையாடி 2 அரைசதமும் ஒரு சதமும் அடித்திருந்தார். 2020ல் அதிகபட்சமாக 90 ரன்களும் 2021ல் அதிகபட்சமாக 72 ரன்களும் எடுத்திருந்தார்.
உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக வலம் வரும் விராட் கோலிக்கு ஐபிஎல் வரலாற்றிலேயே இதுபோன்றதொரு மோசமான நிகழ்வு நடந்ததே இல்லை. நடப்பு தொடரில் கோலி தொடர்ச்சியாக 2 போட்டிகளிலும் கோல்டன் டக் எனப்படும் முதல் பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்து ஆட்டமிழந்திருக்கிறார். ஐபிஎல் வரலாற்றில் விராட் கோலி இதுவரை 5 முறை மட்டுமே கோல்டன் டக் ஆகியிருக்கிறார். அதில் 2 நடப்பு தொடரில் நடந்தவை.
41, 12, 5, 48,1,12,0,0 - இது விராட் கோலி நடப்பு ஐபிஎல் தொடரில் அடித்த ஸ்கோர்கள். இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் மொத்தமே 119 ரன்கள் தான். சராசரி வெறும் 17 ரன்கள். அதிகபட்சமாக மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் மட்டும் 48 ரன்கள் விளாசினார் விராட் கோலி
ஐதராபாத்திற்கு எதிரான ஆட்டத்தில் 2வது முறையாக கோலி டக் அவுட்டாக காரணமானவர் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த மார்கோ ஜென்சன். 2K கிட்டான இவர், இடது கை வேகப்பந்து வீச்சாளர். கடந்த டிசம்பரில் நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா சார்பில் அறிமுகம் செய்யப்பட்டார். அந்த ஆட்டத்தில்தான் முதல்முறையாக விராட் கோலியின் விக்கெட்டை இன்சைட் எட்ஜ் மூலம் கைப்பற்றினார் மார்கோ ஜென்சன்.
ஐதராபாத்திற்கு எதிரான ஆட்டத்தில் செகன்ட் ஸ்லிப் உதவியுடன் அவுட்சைட் எட்ஜ் மூலம் மீண்டும் விராட் கோலியின் விக்கெட்டை ஜென்சன் வீழ்த்தியிருக்கிறார். நேர்த்தியான ஒரு பேட்ஸ்மேனை இளம் பந்துவீச்சாளர் வீழ்த்துவதற்கு துல்லியமான பந்துவீச்சு தேவை. கோலியின் பலவீனம் அறிந்து அவரை முதல் பந்திலேயே டக் அவுட் செய்துள்ள ஜென்சனும் இப்போது லைம் லைட்டில் மிளிர்கிறார்.

பட மூலாதாரம், BCCI/IPL
"புத்துயிர் பெற கோலிக்கு ஓய்வு தேவை"
விராட் கோலிக்கு மிகவும் அவசியமான ஓய்வு தேவை. சிறிது ஓய்வு அவருக்கு புத்துயிர் அளிக்கக்கூடும் என முன்னாள் வீரர் அசாருதீன் விராட் கோலிக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார். விராட் கோலியின் சொதப்பலுக்கு பதற்றமும் ஒரு காரணியாக இருக்கலாம். அதை சரி செய்ய வேண்டும் என அறிவுறுத்தியிருக்கிறார் பிரபல கிரிக்கெட்டரும் வர்ணனைளருமான சுனில் கவாஸ்கர்
6 மாதங்களுக்கு முன்பு அனைத்து ஃபார்மட் கிரிக்கெட்டிலும் நம்பர் 1 ஆக ஜொலித்தவருக்கு இப்போது அனைத்தும் தலைகீழாக மாறி இருக்கிறது. கேப்டன் பதவியை இழந்திருக்கிறார், களத்தில் ரன் குவிக்க திணறுகிறார். இதையெல்லாம் சரி செய்வதற்கு குறைந்தது 3 வாரம் ஓய்வு தேவை. அப்போதுதான் அவரால் புத்துணர்ச்சியுடன் மிகச்சிறந்த கம்பேக்கை கொடுக்க முடியும் என்கிறார் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாஃபர்.
விராட் கோலி உலகின் சிறந்த நுட்பங்களுடன் ஆடக்கூடியவர். ஆனால் அவரது பயிற்சியும் முயற்சியும் ஆடுகளத்தில் எதிரொலிக்க இன்னும் எத்தனை காலமாகின்றன என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












