You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஐபிஎல் மெகா ஏலம் 2022 – இன்றைய நாளில் இதுவரை நடந்தது என்ன? - முக்கிய தகவல்கள்
ஐபிஎல்-ன் 15ஆவது சீசனுக்கான வீரர்களின் ஏலம் நேற்றும் இன்றும் பெங்களூருவில் நடைபெற்றது. இதில் லக்னெள சூப்பர் ஜயண்ட்ஸ், குஜராத் டைடன்ஸ் எனும் 2 புதிய அணிகள் உள்பட மொத்தம் 10 அணிகள் கலந்து கொண்டன.
இந்நிலையில் இன்று நடந்த ஏலம் குறித்த சில முக்கிய தகவல்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
- முதல் நாளில் இந்திய வீரர்கள் அதிகமாக ஏலம் எடுக்கப்பட்ட நிலையில் இரண்டாம் நாளான இன்று வெளிநாட்டு வீரர்கள் பலர் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். அதிகபட்சமாக இங்கிலாந்து அணியை சேர்ந்த லியம் லிவிங் ஸ்டோன் பஞ்சாப் அணியால் 11.5 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார். இந்த ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வெளிநாட்டு வீரர் இவர்.
- இஷாந்த் ஷர்மா, புஜாரா மற்றும் செளரப் திவாரி போன்ற வீரர்களை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை. அதேபோல நியூசிலாந்து ஆல் ரவுண்டர் ஜேம்ஸ் நீஷம், இங்கிலாந்து பந்து வீச்சாளர் கிறிஸ் ஜோர்டான், இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மார்கன் போன்றவர்கள் எந்த அணியாலும் ஏலத்தில் எடுக்கப்படவில்லை.
- சிங்கப்பூரை சேர்ந்த கிரிக்கெட் வீரர் டிம் டேவிட், அடிப்படை விலை 40 லட்சத்திலிருந்து மும்பை இந்தியன்ஸ் அணியால் 8.25 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது பெரும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. அவரை ஏலத்தில் எடுக்க கொல்கத்தா அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நடைபெற்ற போட்டியில் இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது.
- அதேபோன்று இங்கிலாந்தின் வேகப் பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்சரை ஏலத்தில் எடுக்க ஹைதராபாத் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் நீண்ட போட்டி நடைபெற்றது இறுதியில் மும்பை அணி 8 கோடி ரூபாய்க்கு அவரை ஏலத்தில் எடுத்தது.
- மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த ரொமாரியோ ஷெபர்டை ஹைதராபாத் அணி 7.75 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது. அதேபோல மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த ஆல் ரவுண்டர் ஓடியன் ஸ்மித்தை 6 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது பஞ்சாப் அணி.
- இன்றைய ஏலத்தில் இந்தியாவை சேர்ந்த வீரர் ஷிவம் துபவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
- 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டன் யாஷ் தூல் டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் 50 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
- மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரராக இருந்த ஃபாஃப் டூ ப்ளசிஸை சென்னை அணி ஏலம் எடுக்காமல் தவறவிட்டது குறித்தும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய ரெய்னாவை எந்த அணியும் ஏலம் எடுக்காதது குறித்தும் சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் பலர் தொடர்ந்து பேசி வருகின்றனர்.
- ஃபாஃப் டூ ப்ளசிஸை பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜுன் டெண்டுல்கரை 30 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.
- ஏலத்தின் முதல் நாளில் 74 வீரர்கள் 10 அணிகளால் ஏலத்தில் எடுக்கப்பட்டிருந்தனர். அதேபோல தமிழக வீரர்கள் அஷ்வின், நடராஜன், வாஷிங்டன் சுந்தர் போன்ற பலர் நேற்று ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.
- தமிழ்நாடு அணியை சேர்ந்த ஷாருக் கான் பஞ்சாப் அணி 9 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
- 370 இந்திய வீரர்கள், 220 வெளிநாட்டினர் என மொத்தம் 590 வீரர்கள் ஏலப்பட்டியலில் இடம்பெற்றிருந்த நிலையில், அவற்றில் 217 வீரர்கள் மட்டுமே ஏலம் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
பிற செய்திகள்:
- கத்திப்பாரா நகர்புற சதுக்கம் முதல் சூளைமேடு சுவரோவியம் வரை: சென்னையை வண்ணமயமாக்கும் கெளசிகா மற்றும் குழுவினர்
- 100 வார்டுகள் கொண்ட கோவை மாநகராட்சி - நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்
- சென்னை: இந்தியாவிலேயே பழமையான மாநகராட்சியின் வரலாறு
- 117 ஒளி ஆண்டுகள் தொலைவில் உயிர்கள் வாழத் தகுதியான ஒரு கோள்
- அரியலூர் மாணவி தற்கொலை, தேவாலயங்கள் மீது தாக்குதல்: பிபிசி கள ஆய்வில் புதிய தகவல்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்