கத்திப்பாரா நகர்புற சதுக்கம் முதல் சூளைமேடு சுவரோவியம் வரை: சென்னையை வண்ணமயமாக்கும் கெளசிகா மற்றும் குழுவினர்

    • எழுதியவர், ஆ. லட்சுமி காந்த் பாரதி
    • பதவி, பிபிசி தமிழ்

சென்னையில் அமைந்துள்ள கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கத்தின் முக்கிய அம்சங்களான, அதன் பெயர் பலகையும் அந்த சதுக்கத்தின் ஒரு பகுதியின் சுவர் ஓவியங்களும் அனைவராலும் பாராட்டப்பட்டது. இந்தச் சுவர் ஓவியங்களை கௌசிகா ராஜேந்திரன் என்ற பெண் தலைமையிலான குழுதான் உருவாக்கியது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சென்னையில் உள்ள கத்திப்பாரா பாலத்தின் கீழே கத்திப்பாரா நகர்புற சதுக்கம் (Kathipara Urban Square) என்ற குழந்தைகள் மற்றும் பெரியோர்கள் பொழுதுபோக்கு பகுதியை திறந்து வைத்தார்.5.9 லட்சம் சதுர அடி பரப்பளவில், இந்த நகர்ப்புற சதுக்கம் நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது

கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கத்தின் பெயர் பலகை மற்றும் சுவர் ஓவியங்கள் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய கௌசிகா ராஜேந்திரன், "சென்னை நகர்ப்புற வளர்ச்சி குழுமம், கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கத்தின் ஒரு பகுதியில் நாங்கள் சுவர் ஓவியங்கள் போன்றவை செய்வதற்கான ஒரு வாய்ப்பைத் தந்தது.

அதன் முதல்கட்டமாக எந்த எந்த ஓவியங்களை செய்யப்போகிறோம் என்பதற்கான முன் திட்டங்களை கொடுத்தோம். பிறகு அதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன் பிறகே இந்தப் பகுதியில் எங்கு எது வேண்டுமோ அதை செய்வதற்கான வேலையைத் தொடங்கினோம். குறிப்பாக இந்த ஒட்டுமொத்த கத்திப்பாரா நகர்புற சதுக்கத்தின் அடையாளமாக இருக்கக்கூடிய பெயர்ப் பலகையை நானே வடிவமைத்தேன். இந்த வடிவமைப்பை தான் அவர்கள் இறுதி செய்வார்கள் என்று எனக்கு தெரியாது.

பெயர் பலகைகளில் பயன்படுத்தப்பட்டுள்ள ஒவ்வொரு எழுத்துகளையும் பிரத்தியேகமாக இதற்காக வடிவமைத்தேன். தற்போது அதை அனைவரும் பகிர்ந்து வருகின்றனர். இது உண்மையிலேயே எனக்கு ஒரு மகிழ்ச்சியான தருணம்" என்றார்.மேலும், "இந்த வேலையை நாங்கள் ஒரு குழுவாக செய்தோம். முதல்கட்டமாக இந்தப் பகுதிக்கு யாரெல்லாம் வருவார்கள், அவர்கள் மனநிலை, என்ன மாதிரியான விருப்பங்கள் இருக்கும் என்பதை ஆராய்ந்து அறிந்தோம். பெரியவர், சிறியவர் என்று அனைவரும் ரசிக்கும் வகையில் இந்த பிரத்தியேக சுவர் ஓவியங்களை திட்டமிட்டு வரைந்தோம். வரக்கூடிய காலங்களில் இது போன்ற பல்வேறு புதுமை திட்டங்களை எதிர்பார்க்கிறோம் ." என்றார்.

இந்தத் சுவர் ஓவியங்கள் வரையும் பணி எவ்வாறு துவங்கியது? என்ற கேள்விக்கு பதிலளித்த கௌசிகா ராஜேந்திரன், "ஆரம்பத்தில் சென்னையில் குப்பைகளுடன் சில பகுதிகள் காணப்பட்டது. அந்தப் பகுதியைச் சென்னை மாநகராட்சி மூலம் சுத்தம் செய்து பின்னர் அந்தப் பகுதியில் சில சுவர் ஓவியங்களை வரைந்து வந்தோம்." என்றார்

தற்போது சென்னை மாநகராட்சியுடன் இணைந்து கோடம்பாக்கம், சென்னை மெரினா கடற்கரை சாலை, டிடிகே சாலை மற்றும் மறுகுடியேற்றம் செய்யப்பட கண்ணகி நகர் போன்ற பகுதிகளில் பல வேலைகளை செய்து வருகிறார்கள் கௌசிகா ராஜேந்திரன் மற்றும் அவரின் குழு.

இதற்கு முன்பு தான் செய்த பணிகளில் சூளைமேட்டில் வரைந்த சுவரோவியம் அனைவராலும் வரவேற்கப்பட்டது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது என்கிறார் கெளசிகா ராஜேந்திரன்.

"அது கொரோனா நோய்த்தொற்று காலகட்டத்தில் முன்கள பணியாளர்களாக இருந்த பலரை கவுரவிக்கும் வகையில், புதுமையாக ஏதேனும் வரைய திட்டமிட்டோம். எனவே குழந்தைகள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நிஞ்சா கார்ட்டூனை மையப்படுத்தி, முன் களப்பணியாளர்கள் நிஞ்சா உடையில் இருக்கும் வகையில் வரைந்தோம். இது அனைவராலும் பெரிதாக வரவேற்கப்பட்டது. நாங்கள் இப்படியான வேலைகளை திட்டமிடும்போது சமூக வலைதள பக்கங்களில் இப்படி செய்யப் போகிறோம் என்று அழைப்பு விடுப்போம். அதன் அடிப்படையில் பல தன்னார்வலர்கள் எங்களுடன் சேர்ந்து இதை செய்கின்றனர். சென்னையை அழகாக பார்க்க வேண்டும் என்பதே எனது ஆசை", என்றார்.இவருடன் இந்தப் பணியில் அவ்வப்போது பல தன்னார்வலர்கள் இணைவது உண்டு. அப்படி சென்னையை சேர்ந்த கௌரி தனபால் என்பவரும் இதில் பங்கெடுத்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "எனக்கு என் மகன் மூலம் கௌசிகா ராஜேந்திரன் அறிமுகமானார். கல்லூரிப் பருவத்தில் இருந்தே ஓவியம் மீதான ஈர்ப்பு இருந்தது. தற்போது இவர்களுடன் சென்னையில் பல்வேறு பகுதிகளில் சுவர் ஓவியம் வரைவது மூலம் மீண்டும் என் கல்லூரி நாட்களுக்கு திரும்பியது போல நான் உணர்கிறேன்," என்றார்.

மேலும், "சமீபத்தில் சென்னையில், கடற்கரை பாதுகாப்பு குறித்து ஒரு சுவர் ஓவியம் வரைந்தனர். அதில் பங்கெடுத்தது எனக்கு பல அனுபவங்களை கொடுத்தது. அதுமட்டும் இல்லாமல் கடந்த இரண்டு முறை இது போல வாய்ப்பு கிடைத்தது, ஆனால் பங்கெடுப்பதர்கான வாய்ப்பு அப்போது இல்லை என்பது எனக்கு வருத்தம் அளித்தது", என்று தெரிவித்தார். "இனி வருங்காலங்களில் இது போன்று பல சுவர் ஓவியங்களை முன்னேடுப்போம். இது நம்ப சென்னைக்காக செய்யாலாம்", என அவர் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: