கிதாம்பி ஶ்ரீகாந்த்: உலக பேட்மின்டன் சாம்பியன்ஷின்ப் போட்டியில் சாதனை - யார் இவர்?

    • எழுதியவர், மனோஜ் சதுர்வேதி
    • பதவி, பிபிசி இந்திக்காக

இந்தியாவைச் சேர்ந்த பேட்மிண்டன் வீரர் கிதாம்பி ஸ்ரீகாந்த், வரலாற்று சாதனைப் படைத்துள்ளார். உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதி சுற்றுக்கு தேர்வாகியுள்ள முதல் இந்திய வீரர் இவரே.

ஸ்பெயின் நாட்டில் நடந்து வரும் இந்த சாம்பியன்ஷிப் போட்டியின் அரை இறுதி ஆட்டம் ஒரு மணி நேரம் எட்டு நிமிடங்கள் நடைபெற்றது. இதில், சக நாட்டவரான லக்ஷ்யா செனை 17-21, 21-14 மற்றும் 21-17 என்ற கணக்கில் கிதாம்பி ஸ்ரீகாந்த் தோற்கடித்துள்ளார்.

இந்த சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இரண்டு பதக்கங்களை வென்றுள்ளது இதுவே முதல் முறையாகும். உலக சாம்பியன்ஷிப் போட்டியில் முதன்முறையாக பங்கேற்ற லக்ஷ்யா சென் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். தற்போது, இப்போட்டியில், ஸ்ரீகாந்துக்கு தங்கப் பதக்கம் வெல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதற்கு முன்னர், இந்திய வீரர்களில் பிரகாஷ் படுகோனேவும், பி. சாய் பிரணீத்தும் தலா ஒரு வெண்கலப் பதக்கம் வென்றுள்ளனர். இந்த ஆண்டு, குறைந்த பட்சம் ஸ்ரீகாந்த் வெள்ளிப் பதக்கத்துடன் நாடு திரும்புவது உறுதியாகியுள்ளது.

இது கிதாம்பி ஸ்ரீகாந்துக்கும் லக்ஷ்யா சென்னுக்கும் இடையே நடந்த முதல் சர்வதேச போட்டியாகும். தொடக்கம் முதலே, கிதாம்பி நெட் ப்ளே மூலம் ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயன்றார். இதனால், லக்ஷ்யா தனது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் போனது.

 இருவருக்கும் இடையே நடந்த ஆட்டத்தில், முதல் இரண்டு சுற்றுகளில் இருவரும் தலா ஒரு சுற்றை வென்ற நிலையில், மூன்றாவது சுற்றில் ஸ்ரீகாந்த் முன்னிலை பெற்றார். லக்ஷ்யா சென், கடும் முயற்சிக்கு பின். தோல்வியை தழுவினார். ஆனால், வருங்காலம் அவருக்கானதாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

கிதாம்பியின் திறமையை கண்டறிந்த சர்வதேச பயிற்சியாளர்

ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்தவர் கிதாம்பி ஸ்ரீகாந்த். கடந்த 2008ம் ஆண்டு, அவருடைய தந்தை அவரை கோபிசந்த் அகாடமியில் சேர்த்தார். அப்போது, அவரது மூத்த சகோதரர் நந்தகோபாலும் அதே அகாடமியில் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்தார். ஸ்ரீகாந்துக்கு இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் விளையாட கோபிசந்த் பயிற்சியளிக்க தொடங்கினார்.

இதனைத் தொடர்ந்து, 2013ம் ஆண்டு இந்திய பேட்மிண்டன் லீக் தொடங்கும் ஏற்பாடுகள் நடந்தன. அப்போது, ஸ்ரீகாந்தும், அன்றைய தேதியில் உலகின் நம்பர் ஒன் வீரரான லீ ஜோங் வேய்யும் (Lee Chong Wei) ஒரே அணியில் இருந்தனர். இருவரும் சேர்ந்து ஒரு நாள் பயிற்சி செய்தபோது, ஸ்ரீகாந்தின் ஆட்டம் அப்படியே லீ ஜோங் வேய் போலேவே இருந்ததாக லீ ஜோங் வேய்யின் பயிற்சியாளர் தய் ஜோ போக் (Tey Seu Bock) கருதினார்.

அவரை ஒற்றையர் பிரிவில் விளையாடுமாறு அறிவுறுத்தினார். அவரது திறமையை அறிந்து கொண்ட கோபிசந்தும், அவருக்கு ஒற்றையர் பிரிவு விளையாட பயிற்சியளித்தார். இதன் பலனை அனைவரும் இன்று உணர்ந்துள்ளனர்.

இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான பி.வி சிந்து காலிறுதி போட்டியில் தோல்வியடைந்ததை அடுத்து, பேட்மிண்டன் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். ஆனால், தற்போது ஸ்ரீகாந்தும் லக்ஷ்யா சென்னும் இரண்டு பதக்கங்களுடன் நாடு திரும்புவது உறுதியாகியுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டில் நடந்த சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியா இரண்டு பதக்கங்களை வென்றது. ஆனால், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இரண்டு பதக்கங்களை இந்தியா வெல்வது இதுவே முதல் முறை.

இந்த போட்டியில், உலகின் நம்பர் ஒன் வீரரான கிண்டோ மோமோடாவும் (Kento Momota) , சீனா மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்த சில திறமை வாய்ந்த வீரர்கள் பங்கேற்கவில்லை. இதனால், இந்தியாவுக்கு மூன்று பதக்கங்கள் வெல்லும் வாய்ப்பு இருந்தது. ஆனால், ஹெச்.எஸ் பிரணாய் காலிறுதி போட்டியில் தோல்வியுற்றார்.

வரலாறு படைத்த இந்திய வீரர்கள்

சர்வதேச அரங்கில், முதல் முறையாக இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் பிரகாஷ் படுகோனே. 1983ம் ஆண்டு நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில், வெண்கலப் பதக்கத்தை வென்று இந்தியாவுக்கான முதல் பதக்கத்தை பெற்று தந்தார் பிரகாஷ் படுகோனே.

அவர் பதக்கம் வென்று 36 ஆண்டுகள் கழித்து, 2019ம் ஆண்டு பி. சாய் பிரணீத் வெண்கலம் பதக்கம் வென்றார். மேலும், பேட்மிண்டன் பெண்களுக்கான பிரிவில், சாய்னா நெய்வாலும், பி.வி சிந்துவும் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகின்றனர்.

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்த ஆண்டு வரை இந்தியா பத்து பதக்கங்களை வென்றுள்ளது. அதில் ஐந்து பதக்கங்களை பெற்று தந்தவர் பி.வி சிந்து.

அதே போல், கடந்த 2015ம் ஆண்டு நடந்த சாம்பியன்ஷிப் போட்டியில், ஜகார்த்தாவில் நடந்த போட்டியில், இறுதி சுற்றுவரை சென்ற முதல் வீராங்கனை சாய்னா நெய்வால். உலக சாம்பியன்ஷிப் போட்டியில், இதுவரை அவர் ஒரு வெள்ளி பதக்கமும், ஒரு வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளார் என்பது நினைவுகூரத்தக்கது.

தற்போது நடந்து வரும் சாம்பியன்ஷிப்பின் இறுதி ஆட்டம், சிங்கப்பூரைச் சேர்ந்த யூயோ ஜியன் யோவுக்கும் (Loh Kean Yew) ஸ்ரீகாந்துக்கும் இடையே இன்று (டிசம்பர் 19) நடைபெறவுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: