You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மொஹம்மத் ஷமியின் மதத்தை வைத்து இணையத்தில் விமர்சனம் - ஆதரித்த இந்திய பிரபலங்கள்
பாகிஸ்தான் அணியுடனான டி20 உலகக் கோப்பை க்ரூப் ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தபின் பந்துவீச்சாளர் மொஹம்மத் ஷமி சமூக ஊடகங்களில் எதிர்கொள்ளும் விஷமத்தனமான விமர்சனங்களைக் கண்டித்துள்ள பல பிரபலங்களும், ஷமிக்குத் தங்கள் ஆதரவையும் தெரிவித்துள்ளனர்.
இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை போட்டி, கடந்த அக்டோபர் 24ஆம் தேதி,ஞாயிற்றுக்கிழமை துபாய் மைதானத்தில் நடைபெற்றது.
அதில் பாகிஸ்தான் அபாரமாக விளையாடி, இந்தியாவை பல ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றி கொண்டது. அதற்கு முன் ஒருமுறை கூட ஐசிசி உலகக் கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் இந்தியாவை வென்றதில்லை.
முதலில் பேட் செய்த இந்திய அணி 151 ரன்களை குவித்தது. 152 அடித்தால் வெற்றி என களமிறங்கிய பாகிஸ்தான் ஒரு விக்கெட்டை கூட பறிகொடுக்காமல், 17.5 ஓவரில் 152 ரன்களைக் குவித்து, வென்று சாதனை படைத்தது.
இந்தியா தரப்பில் பந்து வீசியவர்களில் ஷமி 3.5 ஓவர்களை வீசி 43 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார்.
இதை சில கடும்போக்கு இணையவாசிகள், செய்தியில் எழுத முடியாத மோசமான வார்த்தைகளில் மொஹம்மத் ஷமியை மத ரீதியாக விமர்சித்தனர்.
மொஹம்மத் ஷமியை பாகிஸ்தானுக்குச் செல்லுமாறும், அவரை இந்திய அணியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் தகாத வார்த்தைகளில் கடுமையாக சிலர் விமர்சித்திருந்தனர். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தைய பதிவு ஒன்றின் கீழ், கருத்துப் பகுதிகளில் இந்த கடும்போக்கு விமர்சனங்களைக் காண முடிகிறது.
மொஹம்மத் ஷமி மீதான மத ரீதியிலான விமர்சனத்தையும், அதிக ரன்கள் விட்டுக் கொடுத்தது தொடர்பாகவும், இந்தியாவில் உள்ள பல கிரிக்கெட் வீரர்கள், அரசியல் தலைவர்கள் ஷமிக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மொஹம்மத் அசாருதீன் "விளையாட்டில் வெற்றியும் தோல்வியும் சகஜமானது. ஷமி மீதான தனிப்பட்ட தாக்குதல்கள் தேவையற்றது. நான் மொஹம்மத் ஷமியை ஆதரிக்கிறேன்" என தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதே போல இந்தியாவின் முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் "இந்திய அணியை ஆதரிக்கும் போது, அணிக்காக விளையாடும் அனைவரையும் நாம் ஆதரிக்கிறோம். ஷமி ஓர் அர்பணிப்புள்ள, உலகத் தர பந்து வீச்சாளர். அது அவருக்கான நாளாக இல்லை. இது எல்லா விளையாட்டு வீரர்களுக்கும் நடப்பதுதான். நான் ஷமியையும், இந்திய அணியையும் ஆதரிக்கிறேன்" என தன் ட்விட்டர் பதிவில் கூறி யுள்ளார்.
இவர்களைப் போலவே வீரேந்திர சேவாக், இர்ஃபான் பதான், ஹர்பஜன் சிங், ராகுல் காந்தி ஆகியோரும் ஷமிக்கு தங்கள் ஆதரவை சமூக வலைதளத்தில் வெளிப்படுத்தி இருந்தனர்.
யார் இந்த மொஹம்மத் ஷமி?
சர்வதேச அளவில் 355 விக்கெட்டுகளை வீழ்த்திய மொஹம்மத் ஷமி, இந்தியாவின் சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவர். ஒரு நாள் போட்டிகள், டெஸ்ட் போட்டிகள், டி20 போட்டிகள் என பல ஃபார்மெட் போட்டிகளில் இந்தியாவுக்கு பல முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
2015 உலகக் கோப்பை போட்டிகளில் 7 போட்டிகளில் 61 ஓவர்களை வீசி 294 ரன்களை விட்டுக் கொடுத்து 17 விக்கெட்டுகளை ஷமி வீழ்த்தினார் என்கிறது இ.எஸ்.பி.என் க்ரிக்இன்ஃபோ வலைதளம்.
அந்த உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இதே ஷமிதான் 9 ஓவர்களை வீசி வெறும் 35 ரன்களைக் கொடுத்து ஷாஹித் அஃப்ரிடி, யுனிஸ்கான் உட்பட 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
2015 உலகக் கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் ஷமி நான்காவது இடம் பிடித்தார். இந்திய வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்தார்.
சமீபத்தில் நடந்து முடிந்த 2021 ஐபிஎல் போட்டிகளில் கூட அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் 14 போட்டிகளில் 19 விக்கெட்டுகளை வீழ்த்தி ஐந்தாவது இடம் பிடித்தார்.
பாகிஸ்தானுடனான போட்டியில் விளையாடிய இந்திய அணி வீரர்களின் தேர்வு தொடர்பாக பல விமர்சனங்கள் உள்ளன. ஆனால் ஷமியின் ஃபார்ம் குறித்து யாரும் பெரிய விமர்சனங்களை முன்வைக்கவில்லை.
சச்சின் தன் ட்விட்டில் குறிப்பிட்டது போல, அன்றைய நாள் அவருக்கானதாக இல்லை.
பிற செய்திகள்:
- தமிழக அமைச்சர்களை எச்சரித்த அண்ணாமலை - கொதிக்கும் திமுக
- போராட்டக்காரர்களை சுட்ட சூடான் ராணுவம் - 7 பேர் பலி, நிதி உதவியை நிறுத்திய அமெரிக்கா
- 'என் உடல்நிலையில் தொய்வு உண்மைதான், ஆனால்...' - விஜயகாந்த் உருக்கம்
- விஷ மோதிரம் மூலம் மன்னரைக் கொல்ல சௌதி இளவரசர் யோசனை: முன்னாள் அதிகாரி
- காற்று வெளியேற வைக்கும் 8 உணவுகள்: 'பின் விளைவுகள்' ஆபத்தானவையா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்