You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
18 வயதில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் பட்டம் வென்ற இளம்புயல் எம்மா ரடுகானு - யார் இவர்?
வயது 18. அமெரிக்க ஓப்பன் தொடருக்கு முன் உலக தர வரிசையில் 150ஆவது இடம்.
இறுதி போட்டிக்குச் செல்வது குறித்தெல்லாம் பெரிய நம்பிக்கை இல்லாமல், விமான பயணச் சீட்டை எல்லாம் முன்பதிவு செய்து வைத்திருந்த எம்மா ரடுகானு தான் இன்று 2021ஆம் ஆண்டுக்கான மகளிர் அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் சாம்பியன்.
தன்னை எதிர்த்து விளையாடிய லேலா ஃபர்னாண்டஸை 6-4, 6-3 என நேர் செட்களில் வீழ்த்தி, தொடரை தனதாக்கிக் கொண்டார் எம்மா.
கடந்த 44 ஆண்டுகளாக மகளிர் பிரிவில் பிரிட்டனை சேர்ந்த ஒருவர் கிராண்ட் ஸ்லாம் வெல்வார் என்கிற காத்திருப்புக்கு அமெரிக்க கிராண்ட்ஸ்லாம் வென்று முற்றுப் புள்ளி வைத்திருக்கிறார் எம்மா ரடுகானு.
1977ஆம் ஆண்டு வெர்ஜீனியா வேட் என்பவர் விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் தொடரை வென்றது தான் பிரிட்டனின் கடைசி கிராண்ட் ஸ்லாம் வெற்றி. அதன் பிறகு 44 ஆண்டுகளுக்கு பிரிட்டனால் ஒரு கிராண்ட் ஸ்லாம் வெற்றியைக் கூட காண முடியவில்லை.
எம்மா ரடுகானுவுக்கு முன், வெர்ஜீனியா வேட் தான் 1968ஆம் ஆண்டு அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் தொடரை வென்றிருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
சீனத்தாய்க்கும் ரோமேனிய தந்தைக்கு கனடாவில் பிறந்த எம்மா ரடுகானு, தன் பெற்றோருடன் தனது இரண்டாவது வயதில் பிரிட்டனுக்கு வந்தார். லண்டனில் வளர்ந்த ரடுகானு, பாலே, குதிரையேற்றம், நீச்சல், கூடைப்பந்து, கோகார்ட்டிங் போன்ற எல்லாவற்றையும் முயற்சி செய்துவிட்டு, தென்கிழக்கு லண்டனில் ப்ரோம்லி டென்னிஸ் அகாடமியில் சேர்ந்தார். அப்போது அவருக்கு வயது ஐந்து.
ஒரே வெற்றி - பல சாதனை
1. வெர்ஜீனியா வேடுக்குப் பிறகு அமெரிக்க ஓப்பன் தொடரை வென்ற பிரிட்டிஷ் பெண்மணி
2. உலகிலேயே மிக இளம் வயதில் கிராண்ட் ஸ்லாம் வென்ற வீராங்கனை (2004-ல் மரியா ஷரபோவாவின் சாதனை முறியடிப்பு)
3. மிக இளம் வயதில் கிராண்ட் ஸ்லாம் வென்ற பிரிட்டன் வீராங்கனை
4. ஒரு செட் கூட விட்டுக் கொடுக்காமல், அமெரிக்க ஒப்பன் டென்னிஸ் தொடரை வென்ற இளம் வயது வீராங்கனை (2014-ல் செரீனா வில்லியம்ஸின் சாதனை முறியடிப்பு)... என ஒரு வெற்றி மூலம் பல சாதனைகளுக்கு சொந்தக்காரராகியுள்ளார் எம்மா ரடுகானு.
பிரிட்டனின் ராணி எலிசபெத், எம்மா ரடுகானுவின் வெற்றிக்கு தன் வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கிறார்.
இந்த வெற்றி மூலம், உலக அளவில் மகளிர் வீராங்கனைகள் பட்டியலில் 23ஆவது இடத்தைப் பிடித்திருக்கிறார். பிரிட்டனின் நம்பர் 1 வீராங்கனையாகியுள்ளார் எம்மா ரடுகானு.
அவர் அமெரிக்க கிராண்ட் ஸ்லாமில் மிக சிறப்பாக விளையாடினார். அவர் இன்னும் பல பட்டங்கள் வெல்ல வாய்பு இருக்கிறது என பிரிட்டனின் முன்னாள் நம்பர் 1 வீராங்கனை லாரா ராப்சன் பிபிசி 5 ரேடியோவிடம் கூறியுள்ளார்.
தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் இருக்கும் வீராங்கனைகள் மல்லுகட்டும் போட்டியில், 150ஆவது மற்றும் 73ஆவது இடத்தில் இருந்த வீராங்கனைகள், மகளிர் அமெரிக்க ஓப்பன் தொடரில் மோதியதையே ஆச்சர்யத்துடன் பார்த்த டென்னிஸ் உலகம், எம்மா ரடுகானு நேர் செட்களில் வென்றதைப் பார்த்து வியந்து கொண்டிருக்கிறது.
மறுபக்கம் சமூக வலைதளங்களில் எம்மாவின் வெற்றியை பல நாட்டவர்களும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
பிற செய்திகள்:
- தங்கம் வாங்க வேண்டியது ஏன் அவசியம்? ஆனந்த் ஸ்ரீனிவாசன் பதில்
- நீட் தேர்வுக்கு அஞ்சி தமிழ்நாட்டில் விவசாயி மகன் தற்கொலை
- ரோமானிய பிரிட்டன் துருப்புகளை அலற விட்ட ராணி பூடிக்கா வரலாறு
- 'நார்காட்டிக்ஸ் ஜிகாத்' - கேரளாவில் இஸ்லாமியர்களை தாக்கி பேசிய கிறிஸ்தவ பிஷப், பாஜக ஆதரவு
- தாலிபனுக்கு உதவி செய்ய ஆப்கானிஸ்தானுக்கு ட்ரோன் அனுப்பியதா பாகிஸ்தான்? உண்மை என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்