கரோலே டாகாஸ்: வெடித்து சிதறிய வலது கை; இடது கையால் பயிற்சி செய்து இரு பதக்கங்களை வென்ற நம்பிக்கை நாயகன்

    • எழுதியவர், கெளதமன் முராரி
    • பதவி, பிபிசி தமிழுக்காக

வலதுசாரி மற்றும் இடதுசாரி கட்சிகளுக்கு மத்தியில் எத்தனை பெரிய வேறுபாடுகள் இருக்கின்றனவோ அத்தனை பெரிய வேறுபாடு மனிதர்களின் இடது வலது பழக்கங்களிலும் இருக்கின்றன.

உதாரணமாக வலது கையில் எழுதும் ஒருவரை, அதே வேகத்தில், அதே தெளிவோடு இடது கையில் எழுதுமாறு கூறினால் எப்படி இருக்கும். கிட்டத்தட்ட மீண்டும் குழந்தைப் பருவத்தில் எழுத பயிற்சி எடுத்தது போல மீண்டும் பயிற்சி எடுக்க வேண்டி இருக்கும் தானே...!

அப்படி துப்பாக்கி சுடுதல் விளையாட்டில் வலது கையில் சுட்டுக் கொண்டிருந்த ஒருவர், திடீரென தன் இடது கையால் சுட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு சாதித்த நம்பிக்கை நாயகனின் கதையைத் தான் இங்கு பார்க்கப் போகிறோம்.

1938 காலகட்டத்தில், கரோலே டாகாஸ் (Karoly Takacs) ஹங்கேரி நாட்டின் ராணுவத்தில் சார்ஜன்டாக பணியில் இருந்தார். அவர் ஒரு பிரமாதமான துப்பாக்கி சுடுதல் வீரரும் கூட.

ஹங்கேரி நாட்டின் சார்பாக உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல் அணியிலும் இடம் பிடித்திருந்தார் 28 வயதான கரோலே டாகாஸ். ஐவர்ண ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்வது தான் அவரது ரெயின்போ கனவு.

உலக சாம்பியன்ஷிப் போன்ற போட்டிகளில் வென்றால் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கலாம். எனவே தன் கனவுப் பாதையில் வெற்றிநடைபோட்டுக் கொண்டிருந்த மனிதருக்கு, பயிற்சி மூலம் வந்தது வினை.

1938ஆம் ஆண்டு பயிற்சியின் போது ஒரு குறைபாடான க்ரனேட் கையெறி குண்டு, கரோலே டாகாஸின் வலது கையிலேயே வெடித்தது. வலது கையின் ஒரு பகுதி அப்படியே சிதறிவிட்டது.

இது என்ன கணுக்கால் காயம் போல சிகிச்சை பெற்றால் குணமாகக் கூடியதா என்ன? கையே போய்விட்டது. இனி துப்பாக்கி சுடுவது எல்லாம் சாத்தியமே இல்லை என்று தான் நானோ, நீங்களோ நினைத்திருப்போம்.

ஆனால் கரோலே டாகாஸ் தன் கனவை லேசில் விடவில்லை. சுமார் ஒரு மாத கால மருத்துவமனை சிகிச்சைக்குப் பிறகு, சுடுவதற்கு கை வேண்டும் அவ்வளவு தான். வலது கை போனால் என்ன இடது கை இருக்கிறதே என மீண்டும் துப்பாக்கியோடு பயிற்சியில் இறங்கினார்.

இந்த முறை யார் கண்ணிலும் படாமல் தனியே பயிற்சி செய்தார். வலது கையால் சுட்ட அனுபவமும், தன்னால் முடியும் என்கிற நம்பிக்கையை தவிர கரோலே டாகாஸுடம் வேறு எதுவும் இல்லை.

மீண்டும் ஆனா, ஆவன்னா... என பால பாடத்தில் இருந்து துப்பாக்கி சுடுதலை இடது கையில் தொடங்கினார் ஹங்கேரியின் துப்பாக்கி சுடுதல் தேசிய அணியில் இடம்பிடித்திருந்த கரோலே டாகாஸ்.

தன் அனுபவத்தையும், பயிற்சியையும் சேர்த்து, வலது கையில் இருந்த வித்தையை, இடது கையிலும் கொண்டு வந்தார்.

1939ஆம் ஆண்டு மீண்டும் ஹங்கேரியின் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிக்கு வந்த போது, அவர் போட்டியை பார்வையாளர்களில் ஒருவராக இருந்து பார்க்க வந்திருக்கிறார் என கருதினர். ஆனால் மனிதர் சக வீரர்களோடு போட்டியில் கலந்து கொண்டு தன் திறனை நிரூபித்தார்.

சூப்பர்... அடுத்தது ஒலிம்பிக் தான் என காத்திருந்தவருக்கு இரண்டாம் உலகப் போர் என்கிற செய்தி பேரிடியாக வந்திறங்கியது. 1940ஆம் ஆண்டில் நடக்க வேண்டிய ஒலிம்பிக் போட்டி, போர் காரணமாக ரத்து செய்யப்பட்டது.

சரி அடுத்த ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் நிச்சயம் என லட்சியத்தோடு பயிற்சி செய்தார். இரண்டாம் உலகப் போர் உக்கிரமடைந்திருந்த காலமது. 1944 ஒலிம்பிக் போட்டிகளும் ரத்தானது. அப்போது 34 வயதான கரோலே டாகாஸின் துக்கத்துக்கு வானமே எல்லை எனலாம்.

ஒரு விளையாட்டு வீரரின் உடலும் மனதும் நாணயத்தின் இரு பக்கத்தை போல செயல்பட வேண்டும். வயது ஆக ஆக அந்த ஒருங்கிணைப்பு தவறத் தொடங்கும்.

மனம் சொல்வதை உடல் கேட்காது. அவர்களின் உடலே அவர்கள் மீது போர் தொடுக்கும். இப்படித்தான் உலகின் ஆகச் சிறந்த பல நட்சத்திர விளையாட்டு வீரர்கள் கூட தங்களின் உச்சாணிக் கொம்பிலிருந்து விழத் தொடங்குகின்றனர்.

1948 ஒலிம்பிக் போட்டிகளுக்காக காத்திருந்தார். போர் முடிவுக்கு வந்தது. 38 வயதான கரோலே டாகாஸ் (Karoly Takacs) மீண்டும் தன்னை நிரூபித்து 1948ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் சென்றார்.

"நீங்கள் லண்டனில் என்ன செய்கிறீர்கள்?" என அப்போது துப்பாக்கி சுடுதல் போட்டியில் உலக சாம்பியனாக இருந்த அர்ஜென்டினாவைச் சேர்ந்த கார்லோஸ் என்ரிக், கரோலேவைப் பார்த்து கேட்டார்.

"நான் இங்கு கற்றுக் கொள்ள வந்திருக்கிறேன்" என கரோலே கூறியதாக 'தி இந்து' நாளிதளில் வெளியான செய்தியில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

25 மீட்டர் ரேபிட் ஃபயர் பிஸ்டல் போட்டி நடந்தது, உலக சாம்பியன் கார்லோஸ், கரோலேவிடம் தோற்றார். பதக்கங்களை வழங்கும் நிகழ்வின் போது "நீங்கள் போதுமான அளவுக்கு கற்றுணர்ந்துவிட்டீர்கள்" என தங்கம் வென்ற கரோலேவிடம் கூறினார் வெள்ளி வென்ற கார்லோஸ் என்ரிக்.

கரோலேவின் ஒலிம்பிக் தாகம், 1948 லண்டன் ஒலிம்பிக்ஸோடு தீரவில்லை. மீண்டும் 1952 ஃபின்லாந்தின் ஹெல்சென்கியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியிலும் 25 மீட்டர் ரேபிட் ஃபயர் பிஸ்டல் போட்டியில், தங்கம் வென்றார்.

முதலில் தனக்கு ஏற்பட்ட விபத்து, பிறகு தன் வயது என தன் உள்மனதோடும், தன் உடலோடும் போராடி இரு ஒலிம்பிக் தங்க பதக்கங்களை வென்ற கரோலே டாகாஸ் (Karoly Takacs) இன்று வரை நம்பிக்கை நட்சத்திரமாக ஒலிம்பிக் வானில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :