You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டோக்யோ ஒலிம்பிக்: நட்சத்திர துப்பாக்கி சுடுதல் வீரர்களோடு களம் காணும் இந்தியா - பதக்க வாய்ப்பு எப்படி?
- எழுதியவர், ஆதேஷ் குமார் குப்தா
- பதவி, மூத்த விளையாட்டுச் செய்தியாளர், பிபிசி இந்திக்காக
டோக்யோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்க வாய்ப்புக்குப் பெரிதும் துணைபுரியக்கூடிய விளையாட்டாக துப்பாக்கி சுடுதல் விளங்குகிறது.
டோக்யோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் பிரதிநிதிகளாக துப்பாக்கி சுடுதலில் 15 பேர் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது. இதை ஒரு சாதனை என்றே கூறலாம்.
இந்தியாவிற்குப் பதக்கம் வெல்லக்கூடிய இந்த வீரர்கள் இதற்கு முன் கண்டிராத அனுபவமும் இளமை வைராக்கியமும் கொண்டிருக்கிறார்கள். இந்திய அணியின் பெரும்பாலான வீரர்கள் முதல் முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்பவர்கள்.
அனுபவமிக்க வீரர்கள் என்று பார்த்தால், ஸ்கீட்டில் நுழைந்த, 45 வயதான மேராஜ் அகமது கான், 40 வயதான ரைஃபிள் வீராங்கனை தேஜஸ்வினி சாவந்த், 40 வயதான சஞ்சீவ் ராஜ்புத், 27 வயதான அஞ்சும் மோத்கில், 28 வயதான அபுர்வி சண்டேலா, 33 வயதான தீபக் குமார், 31 வயதான பிஸ்டல் வீரர் அபிஷேக் வர்மா மற்றும் 30 வயதான ராஹி சர்னோபத் ஆகியோர் உள்ளனர்.
டோக்யோவில் ஷூட்டிங் ரேஞ்சிற்கு முழு உற்சாகத்துடன் வந்து பல்வேறு போட்டிகளில் தங்கள் திறமையை வெளிப்படுத்தத் தயாராக இருக்கும் இளம் வீரர்களாக, மனு பாக்கர், சவுரவ் சவுத்ரி, திவ்யான்ஷ் சிங் பவார், ஐஸ்வர்யா பிரதாப் சிங் மற்றும் யஷஸ்வினி தேஸ்வால் உள்ளனர். இந்த ஐந்து இளம் துப்பாக்கி சுடும் வீரர்கள் பதக்கங்களை வெல்லும் நம்பிக்கை நட்சத்திரங்களாகக் கருதப்படுகிறார்கள்.
கவனத்தை ஈர்க்கும் மனு பாக்கர்
19 வயதே ஆன மனு பாக்கர், டோக்யோவில் நடைபெறும் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மற்றும் 25 மீ ஏர் பிஸ்டல் தவிர, 10 மீட்டர் பிஸ்டல் கலப்பு அணி போட்டியில் சவுரவ் சவுத்ரியுடன் போட்டியிடுகிறார்.
யூத் ஒலிம்பிக் விளையாட்டு, காமன்வெல்த் விளையாட்டு, ஆசிய சாம்பியன்ஷிப் மற்றும் ஆசிய ஏர்கன் சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை இவர் வென்றுள்ளார். பின்னர் ஷூட்டிங் உலகக் கோப்பையில் அவர் ஆதிக்கம் செலுத்தியுள்ளார்.
2018 ஆம் ஆண்டில், சிட்னியில் நடந்த ஜூனியர் உலகக் கோப்பையில் 10 மீ ஏர் பிஸ்டலில் தனிநபர் மற்றும் கலப்பு அணியில் தங்கப் பதக்கங்களை வென்றபோது மனு பாக்கர் ஊடகங்களின் கவனத்திற்கு வந்தார். அதே ஆண்டில், ஜெர்மனியில் நடந்த ஜூனியர் உலகக் கோப்பையில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார். அதன் பிறகு அவருக்கு ஏறு முகம் மட்டுமே.
அவர் ஜூனியரிலிருந்து சீனியர் பிரிவுக்கு வந்த போது, அவரது இலக்குகள் மிகவும் துல்லியமாகின. தனிநபர் மற்றும் கலப்பு அணியில் மொத்தம் ஏழு தங்கம் மற்றும் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை அவர் பெற்றுள்ளார்.
அதே ஆண்டு டெல்லியில் நடைபெற்ற உலகக் கோப்பையில், மனு பாக்கர் கலப்பு அணிப் போட்டியில் தங்கம் மற்றும் தனிநபர்ப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். 2019 ஆம் ஆண்டில், தைவானில் நடைபெற்ற ஆசிய ஏர்கன் சாம்பியன்ஷிப்பில் 10 மீ ஏர் பிஸ்டலில் மனு பாக்கர் தனிநபர் மற்றும் கலப்பு அணியில் தங்கப் பதக்கங்களை வென்றார்.
2019 ஆம் ஆண்டில், தோஹாவில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் மனு பாக்கர் தனிநபர் மற்றும் கலப்பு அணியில் தங்கப் பதக்கங்களை வென்றார்.
மனு பாக்கர் 2018 ஆம் ஆண்டில் ப்யூனஸ் அயர்ஸில் நடைபெற்ற இளைஞர் ஒலிம்பிக் போட்டிகளிலும் பங்கேற்று அங்கு தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றார். ஐ.எஸ்.எஸ்.எஃப் உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளிலும் அவர் தனது திறமையை நிரூபித்தார். 2019 ஆம் ஆண்டில் சீனாவில் நடைபெற்ற இந்த சாம்பியன்ஷிப்பில் தனிநபர் மற்றும் கலப்பு அணியில் தங்கப் பதக்கங்களை வென்றார்.
2018 கோல்ட் கோஸ்ட் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தனிநபர் போட்டியில் தங்கப் பதக்கம் என்பது மனு பாக்கரின் மிகப்பெரிய வெற்றியாகும்.
மனு பாக்கர் கடந்த மூன்று நான்கு ஆண்டுகளில் மட்டுமே சர்வதேச அளவில் இந்த வெற்றியை அடைந்துள்ளார்.இவர் மற்ற துப்பாக்கி சுடும் வீரர்களுடன் க்ரொஷியாவில் கடந்த இரண்டரை மாதங்களாகப் பயிற்சி பெற்று வருகிறார்.
ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பிலும் பங்கேற்றார். அவர் ஒலிம்பிக்கிற்கான தனது பயிற்சிகளைப் பயிற்சியாளர் ஜஸ்பால் ராணாவுடன் மேற்கொண்டு வருகிறார். இவரை உற்சாகப்படுத்திய பெருமை மனு பாக்கரின் தாயார் சுமேதா பாக்கர் மற்றும் தந்தை ராம்கிஷன் பாக்கர் ஆகியோரைத் தான் சேரும்.
இந்தியாவில், திறமை இருந்தபோதிலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை முன் வர அனுமதிப்பதில்லை என்று அவரே கூறுகிறார். மனு பாக்கரைப் பொறுத்தவரை, பயிற்சி சரியாக இருந்தால், பதக்கத்தை வெல்ல முடியும் என்பது அவர் கருத்து.
மனு பாக்கர், தம் மீதான நம்பிக்கை, அழுத்தத்தை விட உத்வேகம் தருவதாகக் கூறுகிறார். டோக்யோவில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பது மனு பாக்கரின் கனவும் கூட.
கலப்பு அணியில் மனு பாக்கருடன் ஜோடி சேர்கிறார் சௌரவ் சௌத்ரி. இந்த ஜோடி உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு பல பதக்கங்களை வென்று கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அழுத்தத்தை மறுக்காத சௌரவ் சௌத்ரி
மனுவைப் போலவே, சௌரவ் சௌத்ரியும் 19 வயது இளம் துப்பாக்கி சுடும் வீரர். டோக்யோ ஒலிம்பிக்கில் 10 மீ ஏர் பிஸ்டல் போட்டியில் தனிநபர்ப் போட்டியிலும் கலப்பு அணி போட்டிகளில் மனு பாக்கருடனும் இணைந்தும் போட்டியிடுவார்.
ஐ.எஸ்.எஸ்.எஃப் உலக சாம்பியன்ஷிப், உலகக் கோப்பை, இளைஞர் ஒலிம்பிக் விளையாட்டு, ஆசிய ஏர்கன் சாம்பியன்ஷிப் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இதுவரை தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.
மேற்கு உத்தரப் பிரதேசத்தின் மீரட் மாவட்டத்தில் உள்ள கலிங்கா கிராமத்தைச் சேர்ந்தவர் இவர். இவரது தந்தை ஜக்மோகன் சிங் ஒரு விவசாயி. அவர் சௌரவ் சௌத்ரியின் திறமையை அங்கீகரித்து ஊக்கமளித்தார்.
சௌரவ் சௌத்ரியும் தனது தந்தையை ஏமாற்றவில்லை, ஒரு படி மேலே சென்றார். இதுபோன்ற சாதனைகளைச் செய்த இந்தியாவின் இளைய வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
2018 ஆம் ஆண்டில் ஜூனியர் உலகக் கோப்பையில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றதன் மூலம் சௌரவ் சௌத்ரி ஒரு பேசு பொருளானார். ஜெர்மனியில் நடந்த தனிநபர், கலப்பு அணி மற்றும் அணி நிகழ்வுகளில் தங்கப் பதக்கங்களை வென்றார்.
இதன் பின்னர், 2018 ஆம் ஆண்டில் பியூனஸ் அயர்ஸில் நடைபெற்ற இளைஞர் ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார். அதே ஆண்டில் ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தனது வெற்றியைப் பதிவு செய்தார். அதற்குப் பிறகு சௌரவ் சௌத்ரிக்கு அறிமுகமும் தேவைப்படவில்லை.
2019 ஆம் ஆண்டில், தோஹாவில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் சௌரவ் சௌத்ரி இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்றார். சாங்வோனில் நடந்த ஐ.எஸ்.எஸ்.எஃப் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வென்றபோது 2018 ஆம் ஆண்டு சௌரவ் சௌத்ரிக்கு இன்னும் சிறப்பாக இருந்தது.
இதுவரை, சௌரவ் சௌத்ரி துப்பாக்கி சுடும் உலகக் கோப்பையில் எட்டு தங்கம், மூன்று வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார். இந்த ஆண்டு மார்ச் மாதம் டெல்லியில் நடைபெற்ற உலகக் கோப்பையில் இரண்டு தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கம் வென்றார்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்காகத் தங்கப்பதக்கம் வென்ற இளைய வீரர் சௌரவ் சௌத்ரி.
2019 ஆம் ஆண்டில் டெல்லியில் நடைபெற்ற உலகக் கோப்பையில் 245.0 என்ற உலக சாதனை படைத்த அவர் டோக்யோ ஒலிம்பிக்கிற்கான நுழைவைத் தக்க வைத்துக்கொண்டார்.
மீரட்டுக்கு அருகிலுள்ள தனது கிராமத்திலிருந்து 50 கி.மீ தூரத்தில் பாக்பத்தின் பனோலி கிராமத்தில் அமைந்துள்ள ஷூட்டிங் அகாடமியில் சௌரவ் தனது ஆரம்ப காலப் பயிற்சியைப் பெற்றார். இவர், மனு பாக்கருடன் சேர்ந்து, கலப்பு நிகழ்வுகளில் இந்தியாவுக்குப் பல தங்கப் பதக்கங்களை வென்றளித்துள்ளார்.
சௌரவ் சௌத்ரி வெற்றிப்படியில் ஏறிக்கொண்டிருக்கும் சமயத்தில்,அவரை இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் விழாவில் டெல்லியில் சந்தித்தோம். உரையாடலின் போது, சௌரவ் சௌத்ரி மிகவும் கூச்ச சுபாவம் உடையவராகத் தோன்றினார்.
ஒலிம்பிக்கில் பதக்கங்களைப் பற்றிக் கேட்ட போது, 'ஒரு பதக்கம் வரக்கூடும் என்று தோன்றுகிறது.' என்று நம்பிக்கை தெரிவித்தார். பயிற்சி மற்றும் ஏற்பாடுகளில் முழுமையாகத் திருப்தி அடைந்த அவர், 'இதுபோன்ற பெரிய போட்டிகளில் இயல்பாகவே அழுத்தம் உருவாகிறது' என்றார்.
ஐஷ்வர்ய பிரதாப் சிங் தோமர் - சிறு வயதில் பெருங்கனவு
ஐஷ்வர்ய பிரதாப் சிங்கிற்கு 20 வயது. டோக்யோவில் 50 ரைஃபிள் 3 பொசிஷனில் சஞ்சீவ் ராஜ்புத் உடன் அவர் காணப்படுவார்.
ஐஸ்வர்யா உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்று மூன்று பதக்கங்களை வென்றார். தனிநபர் போட்டியில் தங்கம், 10 மீட்டர் ஏர் ரைஃபிள் ஆண்கள் அணிப் போட்டியில் வெள்ளி மற்றும் கலப்பு அணியில் வெண்கலப் பதக்கங்களை வென்றார்.
ஜூனியர் உலகக் கோப்பையிலும் ஐஷ்வர்ய பிரதாப் சிங் பங்கேற்றுள்ளார். 2019 உலகக் கோப்பையில் தங்கப்பதக்கம் வென்றார். அதே ஆண்டில், தைவானில் நடந்த ஆசிய ஏர்கன் சாம்பியன்ஷிப்பில் 10 மீ ஏர் ரைஃபில் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
2019 ஆம் ஆண்டில், தோஹாவில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று டோக்யோ ஒலிம்பிக்கிற்குத் தகுதி பெற்றார்.
ஐஷ்வர்ய பிரதாப் சிங், மத்திய பிரதேசத்தின் ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தையின் பெயர் வீர் பகதூர்.
டெல்லியில் நடந்த 50 மீ ரைபிள் 3 நிலை உலகக் கோப்பையில் தனிநபர் தங்கப் பதக்கம் வென்றதன் பின்னர் அவர் பிரபலமானார். அவர் ஹங்கேரியின் உலக நம்பர் 1 வீரர் இஸ்த்வான் பென்னி மற்றும் டென்மார்க்கின் 2018 உலக சாம்பியன் ஸ்டீபன் ஓல்சன் ஆகியோரை வென்றார்.
அவர் தனது விருப்பமான போட்டி ரைஃபிள் 3 பொசிஷன் தான் என்று குறிப்பிடுகிறார்.
திவ்யான்ஷ் சிங் பவார் - கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே
ராஜஸ்தானின் இளஞ்சிவப்பு நகரமான ஜெய்ப்பூரைச் சேர்ந்த திவ்யான்ஷ் சிங் பவாருக்கு 18 வயது. ஒலிம்பிக்கில் பங்கேற்கக் கனவு காணும் வயதில் அவர் ஒலிம்பிக்கில் பங்கேற்க டோக்யோவுக்குச் செல்கிறார்.
டோக்யோவில் நடைபெறும் 10 மீ ஏர் ரைஃபில் ஆண்கள் மற்றும் கலப்பு அணி போட்டிகளில் திவ்யான்ஷ் போட்டியிடுவார்.
ஷூட்டிங் உலகக் கோப்பையில் பங்கேற்ற அனுபவம் மட்டுமே அவருக்கு உள்ளது. ஏனெனில் அவர் மிகவும் இளம் வயதினர். தவிர, கொரொனா காரணமாக உலகெங்கிலும் உள்ள அனைத்து துப்பாக்கி சுடும் போட்டிகளும் முடங்கியிருந்தன. இருந்தும் அவரது செயல்பாடு மிகவும் சிறப்பாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
2018 ஆம் ஆண்டில் ஜெர்மனியில் நடைபெற்ற ஜூனியர் உலகக் கோப்பையில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் ஆண்கள் அணியிலும் கலப்பு அணியிலும் தங்கப் பதக்கங்களை வென்றார். இந்த வெற்றி துப்பாக்கி சுடுவதில் அவரது பாதையை வகுத்தது.
பின்னர் அதே ஆண்டு சாங்வோனில் நடைபெற்ற உலக ஷூட்டிங் சாம்பியன்ஷிப்பில் 10 மீ ஏர் ரைபிள் ஜூனியர் கலப்பு அணி போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
2019 ஆம் ஆண்டில், ஐ.எஸ்.எஸ்.எஃப் உலக கோப்பையில் பதக்கங்களை அள்ளிக்கொண்டு வந்தார். அதற்கு இரு கைகள் போதவில்லை. அந்த ஆண்டு சீனாவின் புட்டியனில் நடைபெற்ற உலகக் கோப்பையில் திவ்யான்ஷ் தங்கப்பதக்கம் வென்றார். அங்கு அவர் ஹங்கேரியின் இஸ்த்வான் பென்னியை இரண்டாவது இடத்திற்குத் தள்ளு முன்னேறினார்.
திவ்யான்ஷ் 2019 இல் நான்கு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் உட்பட ஆறு பதக்கங்களை வென்றார். இவர்களில், கலப்பு அணி நிகழ்வில் நான்கு தங்கம் மற்றும் ஒரு வெண்கல பதக்கம் வென்றார்.
இவரது தந்தை அசோக் பவார் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மருத்துவமனையில் மருத்துவர். ஜெய்ப்பூரில் உள்ள ஜங்புரா ஷூட்டிங் ரேஞ்சில் தனது பன்னிரெண்டாவது வயதிலேயே பயிற்சியைத் தொடங்கினார்.
2017 ஆம் ஆண்டில், அவரது தந்தை டெல்லியில் கர்ணி சிங் ஷூட்டிங் ரேஞ்சில் தீபக் குமார் தூபேயின் பயிற்சியில் அவரை ஒப்படைத்தார்.
பதக்கம் குறித்த அழுத்தங்களை மனதுக்குள் கொண்டு செல்லாத இவர், கீதையின் வழியில் நடப்பதாகக் கூறுகிறார். கடமையைச் செவ்வனே செய்தால் பலன் தானாக வரும், பலனை எதிர்பார்த்துக் கடமையைச் செய்யக்கூடாது என்ற கீதையின் அறிவுரைப்படி நடப்பதாகக் கூறுகிறார். இதனால் அவரது செயல்பாடு மேலும் சிறப்பாக அமைய வாய்ப்புள்ளது.
பெரிய குறிக்கோள் கொண்ட யஷஸ்வினி தேஸ்வால்
இந்த ஆண்டு மார்ச் மாதம், ஐ.எஸ்.எஸ்.எஃப் ஷூட்டிங் உலகக் கோப்பை டெல்லியில் நடந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் துப்பாக்கி சுடும் வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள் ஆகியோரின் கண்கள் 10 மீ ஏர் பிஸ்டலின் தனி நபர் இறுதிப் போட்டியின் மீதே இருந்தன.
ஷூட்டிங் ஹாலில் நடந்த இறுதிப் போட்டியில் எட்டு வீரர்கள் போட்டியிட்டனர். வீரர்களுக்குச் சற்று மேலே ஒரு தொலைக்காட்சித் திரை இருந்தது. மதிப்பெண்ணுடன் வீரரின் பெயரையும் நாட்டையும் அதில் குறிப்பிட்டனர்.
பார்வையாளர்களை அரங்கத்திற்குள் அனுமதிக்கவில்லை, அதனால் அதிக சத்தம் இல்லை. இந்தப் போட்டியில் இந்தியாவின் ஸ்டார் ஷூட்டர் மனு பாக்கரும் இருந்தார். அவர் தான் சாம்பியன் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள், ஆனால் முடிவு வந்ததும் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
மைதானத்தில் பிரமாண்ட திரையில் யஷஸ்வினி தேஸ்வாலின் பெயர் முதலில் 238.8 என்ற மதிப்பெண்களுடன். இரண்டாவது இடத்தில் மனு பாக்கர் மதிப்பெண் 236.7 ஆகவும், மூன்றாவது இடத்தில் 215.9 புள்ளிகளுடன் பெலாரஸின் விக்டோரியாவும் இருந்தனர்.
பின்னர் யஷஸ்வினி தேஸ்வால் அதே உலகக் கோப்பையில் மனு பாக்கர் மற்றும் ஸ்ரினிகேதா ஆகியோருடன் அணி நிகழ்வில் தங்கப்பதக்கம் வென்றார்.
கலப்பு அணியில் வெண்கல பதக்கத்தையும் வென்றார். முன்னதாக 2019 ஆம் ஆண்டில் ரியோவில் நடைபெற்ற உலக கோப்பையில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார். அண்மையில் குரோஷியாவில் நடைபெற்ற உலக கோப்பையில் வெண்கல பதக்கமும் பெற்றுள்ளார்.
டோக்யோவில் 10 மீ ஏர் பிஸ்டலில் கவனம் செலுத்துகிறார் 24 வயதான யஷஸ்வினி தேஸ்வால். 2014-ல் குவைத்தில் நடந்த ஆசிய ஜூனியர் ஷூட்டிங் சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்றபோது, அவரது முதல் சர்வதேச வெற்றி பதிவானது.
2019ஆம் ஆண்டில், தோஹாவில் நடைபெற்ற ஆசிய ஷூட்டிங் சாம்பியன்ஷிப்பில் கலப்பு அணி நிகழ்வில் வெள்ளிப் பதக்கம் வென்றார். 2017 ல் ஜெர்மனியில் நடந்த ஜூனியர் உலக சாம்பியன்ஷிப்பிலும் யஷஸ்வினி தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
ஒலிம்பிக் என்பது அவருக்கு முதல் பெரிய போட்டியாகும், அங்கு அவர் தனது திறமையைப் பெரிய அளவுக்கு வெளிப்படுத்தும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. யஷஸ்வினியின் துப்பாக்கி சுடும் ஆர்வத்துக்குக்கு காரணம் அவரது தந்தை எஸ்.எஸ்.தேஸ்வால். அவர், இந்திய எல்லை காவல் படையில் மூத்த அதிகாரி.
2010ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஷூட்டிங் நிகழ்வுகளை காண்பிப்பதற்காக அவர் யஷஸ்வினியை அழைத்து வந்திருந்தார். இதன் பின்னர் யஷஸ்வினி சர்வதேச துப்பாக்கி சுடும் வீரரும் முன்னாள் காவல்துறை அதிகாரியுமான டி.எஸ். தில்லனிடம் பயிற்சி பெறத் தொடங்கினார்.
இந்த இளம் வீராங்கனையை ஊக்குவிக்கும் விதமாக வீட்டிலேயே ஒரு ஷூட்டிங் ரேஞ்சை உருவாக்கித் தந்தனர் குடும்பத்தினர். அது தான் இப்போது அவரை டோக்யோ வரை கொண்டு சென்றுள்ளது.
2019 ஆம் ஆண்டில் ரியோவில் நடைபெற்ற ஷுட்டிங் உலக கோப்பையில் தங்கப்பதக்கம் பெற்று யஷஸ்வினி டோக்யோ ஒலிம்பிக்கிற்குத் தகுதி பெற்றார். டெல்லியில் அடைந்த பொன்னான வெற்றி குறித்து, 'எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. கடின உழைப்பின் பலன் தெரிகிறது. இதுபோன்று கடினமாக உழைக்க இது எனக்கு ஊக்கமளிக்கிறது.' என அவர் கூறினார்.
யஷஸ்வினி 2017 ஆம் ஆண்டில் ஜூனியர் உலக சாம்பியனானதை தனது மறக்கமுடியாத தருணமாக கருதுகிறார். 'அந்த வெற்றி கடினமாக உழைத்தால் எல்லாம் சரியாக நடக்கும் என்ற செய்தியை எனக்கு அளித்தது என்று யஷஸ்வினி கூறுகிறார்.
இப்போது மனு பாக்கர், சௌரவ் சௌத்ரி, திவ்யான்ஷ் சிங் பவார், ஐஷ்வர்ய பிரதாப் சிங் தோமர், யஷஸ்வினி தேஸ்வால் என இந்த ஐந்து துப்பாக்கி சுடும் வீரர்கள் டோக்யோவில் பதக்கம் பெறுவார்களா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
பிற செய்திகள்:
- பெகாசஸ் ஸ்பைவேர்: இந்திய ஜனநாயகத்தை ஆட்டம் காண வைக்கும் உளவுப் பிரச்னையா?
- இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் ஒருவர்கூட உயிரிழக்கவில்லை - மத்திய அரசு
- ஜெஃப் பெசோஸின் 11 நிமிட விண்வெளி பயணத்தில் மெய்சிலிர்க்கும் அனுபவம்
- கொரோனாவால் இந்தியாவில் 40 லட்சம் பேர் பலி - அதிர்ச்சி தரும் அமெரிக்க ஆய்வு
- ஐஎஸ் குழுவினரின் ஸ்மார்ட் ஃபோன் மர்மங்கள் - அறியப்படாத தகவல்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்