டோக்யோ ஒலிம்பிக்: ஊழல், புறக்கணிப்பு மற்றும் ஊக்கமருந்து பயன்பாடு - ஒலிம்பிக் வரலாற்றின் மறுபக்கம்

    • எழுதியவர், ரெஹான் ஃபசல்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

நவீன ஒலிம்பிக் போட்டிகள் அற்புதமான விளையாட்டு சாதனைகளுக்கு சாட்சியாக இருந்தபோதிலும், இந்த ஒலிம்பிக் போட்டிகளில் மோசடி, ஊழல்கள், தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகளின் பயன்பாடு, அரசியல் எதிர்ப்புக்கள் மற்றும் வன்முறை ஆகியவை ஆதிக்கம் செலுத்தின.

1886 இல் ஏதென்ஸில் நடைபெற்ற முதல் ஒலிம்பிக் போட்டியில் ஆண்கள் மட்டுமே பங்கேற்றனர். அவர்களில் பெரும்பாலானோர் கிரேக்கர்கள் அல்லது அந்த நாட்களில் கிரேக்கத்திற்கு பயணம் மேற்கொண்டவர்கள்.

"1900 ஆம் ஆண்டின் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள், மே மாதத்தின் நடுப்பகுதி தொடங்கி அக்டோபர் இறுதி வரை, மூன்றரை மாதங்கள் நீடித்தது. தொடக்க விழா அல்லது நிறைவு விழா எதுவும் நடைபெறவில்லை. வெற்றியாளர்களுக்கு பதக்கங்களும் வழங்கப்படவில்லை. சீன் ஆற்றின் சேற்று நீரில் நீச்சல் போட்டி நடைபெற்றது," என்று டேவிட் கோல்ட்ப்ளேட் தனது 'தி கேம்ஸ்' புத்தகத்தில் எழுதியுள்ளார்,

அடுத்த சில ஒலிம்பிக் போட்டிகளும் பல மாதங்கள் நீடித்தன. ஏற்பாடுகள் சீராக இருக்கவில்லை. விளையாட்டுக்களுக்கு நிலையான விதிகள் இல்லை. மேலும் விளையாட்டு வீரர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் ஓட வேண்டுமா விளையாட்டுகளில் பங்கேற்றதற்காக அவர்களுக்கு பணம் கொடுக்கப்பட வேண்டுமா என்ற விவாதங்கள் நடைபெற்றன.

விளையாட்டு வீரர்கள் தொழில் முறை வல்லுநர்களாக இருக்கக்கூடாது என்றும் விளையாட்டுகளில் இருந்து அவர்கள் பணம் சம்பாதிக்கக்கூடாது என்றும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி வலியுறுத்தியது. இதன் காரணமாக பணக்காரர் அல்லாதவர்கள் இந்த விளையாட்டுகளில் பங்கேற்பது கடினமாகிவிட்டது.

காரில் சவாரிசெய்து மராத்தான் பந்தயத்தை முடித்தவர்

1904 ஒலிம்பிக் போட்டியில், அமெரிக்காவின் ஃப்ரெட் லோர்ஸ் , வெப்பமான மற்றும் தூசி நிறைந்த சாலைகளில் ஓடி மராத்தான் பந்தயத்தை வென்றார். பந்தயத்தின் நடுவில் அவர் தனது பயிற்சியாளரின் காரில் ஏறி சிறிது தூரம் சென்றது பின்னர் தெரியவந்தது.

அவருக்கு பதக்கம் வழங்கப்பட இருந்தநிலையில், தான் காரில் சென்றதை அவர் ஒப்புக்கொண்டார். பின்னர் இந்த பதக்கம் தாமஸ் ஹிக்ஸுக்கு அளிக்கப்பட்டது.

1908 ஆம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் மராத்தான் பந்தயம் ஒரு கிலோமீட்டர் நீட்டிக்கப்பட்டது. அரச குடும்ப உறுப்பினர்கள் விண்ட்சர் கோட்டைக்குள் அமர்ந்து பந்தயத்தை பார்ப்பதற்காக இது செய்யப்பட்டது.

1972 மியூனிக் ஒலிம்பிக்கில், பொதுமக்களில் ஒருவர் மராத்தான் பந்தயத்தின் நடுவில் இணைந்து ஓடத்தொடங்கினார். பின்னர் அவர் வெற்றியாளராக அரங்கத்திற்குள் நுழைந்தார், ஆனால் பாதுகாப்பு படையினரால் அவர் கைது செய்யப்பட்டார்.

மகளிர் பங்கேற்பு

முதல் ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் பங்கேற்கவில்லை. 1900 பாரிஸ் ஒலிம்பிக்கில் பெண்கள் முதன்முதலில் போட்டியாளர்களாகக் களம்கண்டனர். ஆனால் 1928 ஆம்ஸ்டர்டாம் ஒலிம்பிக் வரை தடகளம் மற்றும் ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் பங்கேற்க அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

1928 ஒலிம்பிக் போட்டியில், 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பல மகளிர் வீரர்கள் பந்தயத்தை முடிக்கமுடியாமல் பாதையில் விழுந்தபோது, அவர்கள் 200 மீட்டருக்கு மேல் ஓட தடை விதிக்கப்பட்டது. இது 1960 ரோம் ஒலிம்பிக் வரை நீடித்தது.

ஜின் தோர்பிடமிருந்து பறிக்கப்பட்ட தங்கப் பதக்கங்கள்

இந்த விளையாட்டுகளில் இருந்து வீரர்கள் பணம் சம்பாதிக்கக்கூடாது என்று பல தசாப்தங்களாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி வலியுறுத்தியது. 1912 ஸ்டாக்ஹோம் ஒலிம்பிக்கில் பென்டத்லான் மற்றும் டெகத்லானில் அமெரிக்க தடகள வீரர் ஜிம் தோர்பே வென்ற தங்கப் பதக்கங்கள் அவரிடமிருந்து பறிக்கப்பட்டன. பேஸ்பால் விளையாடுவதற்கு அவருக்கு ஒரு சிறிய தொகை வழங்கப்பட்டது என்று தெரியவந்ததே இதற்குக்காரணம்.

1982 இல் 70 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த பதக்கங்கள் ஜிம் தோர்பேவின் குடும்பத்திற்குத் திருப்பித் தரப்பட்டன.

ஒலிம்பிக் போட்டிகளில் விளையாட்டு வீரர்கள் தனிப்பட்ட முறையில் பங்கேற்க ஸ்டாக்ஹோம் ஒலிம்பிக் முதல் தடை விதிக்கப்பட்டது.

பிரிட்டிஷ் ராணுவ வீரர் அர்னால்ட் ஜாக்சன் தேசிய அணியில் தேர்ந்தெடுக்கப்படவில்லை, ஆனால் அவர் தனிப்பட்ட முறையில் பங்கேற்றபோது 1500 மீட்டரில் தங்கப்பதக்கம் வென்றார்.

1920 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஆண்ட்வெர்பில் நடைபெற்றபோது, இரண்டாம் உலகப் போரை இழந்த ஜெர்மனி, துருக்கி, ஹங்கேரி மற்றும் ஆஸ்திரியா ஆகியவை ஒலிம்பிக் போட்டிகளுக்கு அழைக்கப்படவில்லை. உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட சோவியத் யூனியனும் போட்டிக்கு அழைக்கப்படவில்லை.

ஒலிம்பிக் போட்டியில் அரசியல்

1936 இல் பெர்லினில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றபோது, அடால்ஃப் ஹிட்லர் இந்தப்போட்டியை நாஜி சித்தாந்தத்தை ஊக்குவிக்கவும் பரப்பவும் பயன்படுத்தினார்.

மற்ற நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களைக்காட்டிலும், ஜெர்மன் வெள்ளை நிறத்தவர்களே உயர்ந்தவர்கள் என்று அவர் நினைத்தார். கருப்பினத்தவரான அமெரிக்காவின் ஜெஸ்ஸி ஓவன்ஸ் தடகள விளையாட்டுக்களில் நான்கு தங்கப் பதக்கங்களை வென்றபோது அவரது எண்ணம் தவறு என்று நிரூபிக்கப்பட்டது.

இது மட்டுமல்லாமல், 400 மீட்டர் ஓட்டத்தில் ஆர்ச்சி வில்லியம்ஸ், 800 மீட்டரில் ஜான் உட்ரஃப், உயரம் தாண்டுதலில் கொர்னேலியஸ் ஜான்சன் ஆகியோர் வெற்றி பெற்றனர். இந்த வீரர்கள் அனைவரும் கறுப்பினத்தவர்கள்.

அடிமை நாடுகளின் பங்கேற்பு தொடர்பான சர்ச்சை

1936 ஒலிம்பிக் போட்டியின் மராத்தான் ஓட்டத்தில் இரண்டு கொரிய வீரர்களான சோன் கி-சுங் மற்றும் நம் சாங்-யங் ,தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றபோது, ஜப்பானிய தேசிய கீதம் இசைக்கப்பட்டது, ஏனெனில் கொரியா அப்போது ஜப்பானால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது.

"இந்த இரண்டு வீரர்களும் தலையைக் குனிந்து தங்கள் எதிர்ப்பை அமைதியாகக் காட்டினர். இது மட்டுமல்லாமல், ஜப்பான் இந்த இரண்டு வீரர்களையும் பொய்யான ஜப்பானிய பெயர்களான கிட்டாய் சோன் மற்றும் ஷர்யு நான் என்ற பெயரில் ஒலிம்பிக் போட்டிகளில் சேர்த்தது.," என்று கே லெனார்ஸ், ஜர்னல் ஆஃப் ஒலிம்பிக் ஹிஸ்டரியில் எழுதினார்.

1936 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியும் இதேபோன்ற ஒரு சூழலை சந்தித்தது. பரிசளிப்பின்போது பிரிட்டனின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது மற்றும் அந்த நாட்டின் கொடி மேலே சென்றது.

ஆனால் இறுதிப் போட்டி தொடங்குவதற்கு முன்பு, அணியின் மேலாளர் பங்கஜ் குப்தா, காங்கிரஸின் மூவர்ணக் கொடியை தனது சட்டைப் பையில் இருந்து எடுத்து இந்திய வீரர்களை உற்சாகப்படுத்தியிருந்தார் என்பது சிலருக்கு மட்டுமே தெரியும். வீரர்கள் அந்தக் கொடிக்கு வணக்கம் செலுத்தி களத்தில் நுழைந்தனர். அவர்கள் ஜெர்மன் ஹாக்கி அணியை 8-1 என்ற கோல்கணக்கில் தோற்கடித்தனர்.

அரசியல் காரணங்களுக்காக புறக்கணிப்பு

நியூசிலாந்து தனது ரக்பி அணியை தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்ய அனுமதித்ததை எதிர்த்து ஆப்பிரிக்க நாடுகள் 1976 ஆம் ஆண்டின் மாண்ட்ரியல் ஒலிம்பிக்கை புறக்கணித்தன.

1980 இல் சோவியத் யூனியன் தனது துருப்புக்களை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பியதை எதிர்த்து 65 மேற்கத்திய மற்றும் அமெரிக்க நேச நாடுகள் ஒலிம்பிக் போட்டியை புறக்கணித்தன. 1984 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கை புறக்கணித்த பன்னிரண்டு கம்யூனிச நாடுகள், இதற்கு பழிக்குப்பழி வாங்கின.

கிரிக்கெட் காரணமாக களையிழந்த லண்டன் ஒலிம்பிக்

1948 ஆம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டிகள் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உடனடியாக நடைபெற்றதால், நிதி பற்றாக்குறை நிலவியது. இது 'சிக்கன ஒலிம்பிக்' என்று அழைக்கப்பட்டது.

லண்டனில் இவ்வளவு பெரிய விளையாட்டு நிகழ்வு இருந்தபோதிலும், இங்கிலாந்தில் டான் பிராட்மேனின் கடைசி டெஸ்ட் போட்டியைப் பார்ப்பதில் பார்வையாளர்கள் அதிக ஆர்வம் காட்டினர்.

ஒலிம்பிக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட தென்னாப்பிரிக்கா

தென்னாப்பிரிக்காவின் இனவெறி கொள்கை காரணமாக 1964 டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க அந்த நாடு அனுமதிக்கப்படவில்லை. அதன்பிறகு 1992 பார்சிலோனா ஒலிம்பிக்கில் தென்னாப்பிரிக்கா மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டது.

ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க விரும்பிய தென்னாப்பிரிக்க வீரர்கள் மற்ற நாடுகளின் குடியுரிமையைப் பெற்று இந்த விளையாட்டுகளில் பங்கேற்றனர்.

மெக்சிகோவில் கருப்பு வீரர்களின் 'பிளாக் பவர் சல்யூட்'

1960 களில் இருந்து ஒலிம்பிக் போட்டிகள் உலகம் முழுவதும் விரிவான முறையில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகத் தொடங்கின. 1968 மெக்ஸிகோ ஒலிம்பிக் போட்டியில், இரண்டு கருப்பின அமெரிக்க விளையாட்டு வீரர்கள், டாமி சிம்த் மற்றும் ஜான் கார்லோஸ், 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வென்றபிறகு , வெற்றி மேடையில் 'பிளாக் பவர் சல்யூட்' நிகழ்த்தினர்.

அமெரிக்காவில் கறுப்பின மக்களின் சமத்துவத்திற்கான போராட்டத்திற்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தவே அவர்கள் இதைச் செய்தனர். அந்த நேரத்தில் அது அமெரிக்காவில் ஒரு பெரிய அரசியல் சர்ச்சையாக மாறியது.

"தனது நடவடிக்கை மனித உரிமைகளின் சல்யூட், ' 'பிளாக் பவர் சல்யூட்' அல்ல என்று முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, 'சைலண்ட் ஜெஸ்சர்' என்ற தனது சுயசரிதையில், டாமி ஸ்மித் தெளிவுபடுத்தினார். இந்த நிகழ்வில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஆஸ்திரேலிய தடகள வீரர் பீட்டர் நார்மனும், இதற்கு ஆதரவாக தனது கையில் ஒரு கறுப்புப் பட்டையை அணிந்திருந்தார். ஆனால் இந்த இருவரின் நடவடிக்கையும் பார்வையாளர்களுக்கு பிடிக்கவில்லை.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அவர்கள் மீது தடை விதித்தது. அவர்கள் அமெரிக்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். ஆனால் ஒலிம்பிக் கமிட்டி அவர்களிடமிருந்து பதக்கங்களை பறிக்கவில்லை. இந்த விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவளித்த ஆஸ்திரேலிய தடகள வீரர் பீட்டர் நார்மன் 2006 இல் காலமானபோது, இந்த அமெரிக்க விளையாட்டு வீரர்கள் அங்குசென்று அவரது சவப்பெட்டிக்கு தோள்கொடுத்தனர்.

ம்யூனிக்கில் இஸ்ரேலிய வீரர்கள் மீது தாக்குதல்

1972 மியூனிக் ஒலிம்பிக்கில், பாலத்தீன தீவிரவாதிகள் ஒலிம்பிக் கிராமத்தைத் தாக்கி இஸ்ரேலிய அணியின் உறுப்பினர்களை பிணைக் கைதிகளாக பிடித்துவைத்தனர். இந்த தீவிரவாதிகள், விளையாட்டு வீரர்கள் போல வேடமிட்டு ஒலிம்பிக் கிராமத்திற்குள் நுழைந்தனர். இஸ்ரேல் விளையாட்டு வீரர்களை ஜெர்மன் பாதுகாப்புப் படையினர் மீட்க முயன்றபோது, இஸ்ரேலிய அணியின் 11 உறுப்பினர்கள், 5 தீவிரவாதிகள் மற்றும் ஒரு பாதுகாப்பு காவலர் கொல்லப்பட்டனர்.

அதன் பின்னர் ஒலிம்பிக் போட்டிகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டது. ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் நாடுகளின் அரசியல் நிலைமையை பொருத்து போட்டி நடத்துவது தொடர்பான எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது.

உதாரணமாக, 2008 இல் சீனா ஒலிம்பிக் போட்டியைப் நடத்தும் பொறுப்பை பெற்றபோது, சீனாவின் மனித உரிமை நிலையை பலர் விமர்சித்தனர். உலகில் 'ஒலிம்பிக் பந்தம்' எங்கு சென்றாலும், சீனாவின் எதிர்ப்பாளர்கள் அதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தது மட்டுமல்லாமல், பல இடங்களில் பந்தத்தைப்பறிக்கவும் முயன்றனர்.

ஒலிம்பிக்கை நடத்த லஞ்சம் கொடுத்ததான குற்றச்சாட்டு

ஒலிம்பிக் போட்டிகளை நடத்த வாக்களித்ததற்கு ஈடாக சில உறுப்பினர்கள் லஞ்சம் வாங்குகிறார்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டபோது 90 களில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

லஞ்சம் மட்டுமல்ல, ஒலிம்பிக் போட்டிகளில் மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டுகளும் வெளியாயின. " 1988 சியோல் ஒலிம்பிக்கில், அமெரிக்க குத்துச்சண்டை வீரர் ராய் ஜோன்ஸ், வெல்டர்வெயிட் குத்துச்சண்டை இறுதிப் போட்டியில் தென் கொரிய குத்துச்சண்டை வீரர் பார்க் சி-ஹுனிடம் தோற்றார். கொரிய குத்துச்சண்டை வீரரை விட அமெரிக்க வீரர் சிறப்பாக சண்டையிட்டார் என்பதால் அவரது வெற்றி உறுதி என்று அனைவருமே நினைத்தனர். கொரிய குத்துச்சண்டை வீரரை வெற்றிபெறச்செய்ய ஒரு தென் கொரிய கோடீஸ்வரர் , போட்டி நடுவருக்கு லஞ்சம் கொடுத்ததை சில புலனாய்வு பத்திரிகையாளர்கள் பின்னர் கண்டுபிடித்தனர். இந்த போட்டியில் ஸ்கோர் அளித்ததில் தான் தவறு செய்ததாக போட்டி நடுவர் ஒப்புக்கொண்டார்," என்று மொய்ரா பட்டர்பீல்ட் தனது 'ஒலிம்பிக் ஸ்கான்டெல்' புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஊக்கமருந்துகளின் நுகர்வு

தடைசெய்யப்பட்ட மருந்துகளின் பயன்பாடு பல ஒலிம்பிக் போட்டியாளர்களை தலைகுனிய வைத்துள்ளது. 1904 ஒலிம்பிக் போட்டியில், மராத்தான் ஓட்டப்பந்தயத்தில் வென்ற அமெரிக்க தடகள வீரர் தாமஸ் ஹிக்ஸ், பந்தயத்திற்கு முன்பு 'ஸ்ட்ரைச்னின்' ஊசி போட்டுக்கொண்டார். ஓடும்போது பிராந்தியும் அருந்தினார்.

1920 ஆண்ட்வெர்ப் ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் ஓடுவதற்கு முன்பு, அமெரிக்க தடகள வீரர் சார்லி பாடெக், ஷெர்ரி மற்றும் பச்சைமுட்டையின் கலவையை குடித்து பந்தயத்தை வென்றார்.

1960 ரோம் ஒலிம்பிக் போட்டியில், 100 கிலோமீட்டர் சைக்கிள் பந்தயத்தில் டேனிஷ் சைக்கிள் ஓட்டுநர் நுட் என்மார்க் ஜான்சன் வழியில் கீழே விழுந்து இறந்தார். பிரேத பரிசோதனை செய்யப்பட்டபோது, மரணத்திற்கான காரணம் ஹீட் ஸ்ட்ரோக் என்று கூறப்பட்டது.

ஆனால் அவரது உடலில் தடைசெய்யப்பட்ட மருந்து ஆம்பெடமைனின் தடயங்கள் காணப்பட்டதாக பிரேத பரிசோதனை செய்த ஒரு மருத்துவர் பின்னர் குறிப்பிட்டார்.

பென் ஜான்சன் மீதான தடை

1968 ஆம் ஆண்டில், பென்டத்லான் நிகழ்வுக்கு முன்பு ஸ்வீடன் விளையாட்டு வீரர் ஹான்ஸ் கன்னர் லிஜ்னென்வால்ட், பீர் குடித்ததற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

தடைசெய்யப்பட்ட மருந்துகள் உட்கொள்வதைத் தடுக்க முதல்முறையாக 1972 ஒலிம்பிக்கில் மருந்து சோதனைகளை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தொடங்கியது.

1988 சியோல் ஒலிம்பிக்கில், கனடாவின் பென் ஜான்சன் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்றது மட்டுமல்லாமல், உலக சாதனையும் படைத்தார். ஆனால் அவரது சிறுநீர் பரிசோதனையில் அவர் ஸ்டெராய்டுகள் உட்கொண்டது தெரியவந்தது. அவரிடமிருந்து பதக்கம் பறிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், அவர் உடனடியாக கனடா திருப்பி அனுப்பப்பட்டார்.

2000 வது ஆண்டுகளில், சில சிறந்த அமெரிக்க விளையாட்டு வீரர்கள் செயல்திறனை அதிகரிக்கும் மருந்துகளை உட்கொண்டதாக ஒப்புக்கொண்டனர். 2000 வது ஆண்டில் சிட்னி ஒலிம்பிக் போட்டியில் மூன்று தங்கம் மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்ற மரியன் ஜோன்ஸின் பதக்கங்கள், போதைப்பொருள் பரிசோதனைக்குப் பின்னர் அவரிடமிருந்து திரும்பப்பெறப்பட்டன. பெய்ஜிங் ஒலிம்பிக்கில் போட்டியிடவும் அவருக்கு தடை விதிக்கப்பட்டது.

2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் 15 விளையாட்டு வீரர்கள் , தடை செய்யப்பட்ட ஊக்கமருந்துகளை உட்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது. குதிரையேற்றப்போட்டியில் சில குதிரைகளுக்கு கூட தடை செய்யப்பட்ட மருந்துகள் வழங்கப்பட்டன. இந்த போக்கு 2012 லண்டன் ஒலிம்பிக்கில் கூட காணப்பட்டது. 41 ரஷ்ய வீரர்கள் தடை செய்யப்பட்ட மருந்துகளைப் பயன்படுத்தி பிடிபட்டனர்.

2016 ரியோ ஒலிம்பிக்கிற்கு 389 பேர் கொண்ட அணியை ரஷ்யா அறிவித்தபோது, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி இவர்களில் 278 பேருக்கு மட்டுமே ஒப்புதல் அளித்தது. 111 ரஷ்ய வீரர்கள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.

மேலும், இந்தியாவின் மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ் உட்பட எட்டு போட்டியாளர்கள், போதைப்பொருள் பரிசோதனைக்குப்பிறகு போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :