You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
IND vs NZ உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: இந்திய அணி - 3 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள்
முதலாவது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி இந்தியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே இங்கிலாந்தின் சௌத்தாம்ப்டன் நகரில் உள்ள ரோஸ் பௌல் மைதானத்தில் நேற்று தொடங்கியது.
வெள்ளியன்று தொடங்க இருந்த இந்தப் போட்டி மழை காரணமாக இரண்டாம் நாளான நேற்றுதான் தொடங்கியது.
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சைத் தெரிவு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த இந்தியா மூன்று விக்கெட்டுகளை இழந்து 146 ரன்களை எடுத்துள்ளது. கேப்டன் விராட் கோலி மற்றும் ரஹானே ஆகியோர் கிரீஸில் உள்ளனர்.
முன்னதாக ஷுப்மேன் கில் 28 ரன்களையும், ரோஹித் ஷர்மா 34 ரன்களையும், புஜாரா 8 ரன்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
கேப்டன் விராட் கோலி மற்றும் ரஹானேவின் கூட்டணி 50ரன்களை கடந்து சிறப்பாக ரன்களை குவித்தது.
முன்னதாக தமது 91ஆம் வயதில் கோவிட்-19 தொற்று காரணமாக உயிரிழந்த இந்திய தடகள வீரர் மில்கா சிங்குக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் இன்று தங்கள் கைகளில் கருப்பு நிறப் பட்டை அணிந்திருந்தனர்.
ஒருநாள் போட்டிகள் மற்றும் டி 20 கிரிக்கெட் போட்டிகள் ஆகியவற்றுக்கு உலகக்கோப்பை போட்டிகள் நடத்தப்படும் சூழலில், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கும் உலா சாம்பியன்ஷிப் பட்டத்தை வழங்கும் நோக்கில், முதல் சாம்பியன்ஷிப் பட்டத்துக்கான லீக் போட்டிகளை 2019 ஆகஸ்ட் மாதம் தொடங்கியது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்.
இதில் பங்கேற்ற ஒன்பது நாடுகளில், புள்ளி பட்டியலில் முதல் இரு இடங்களைப் பிடித்துள்ள இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள், இறுதிப்போட்டியில் மோதுகின்றன. இந்திய அணி தாம் விளையாடிய 73.5% போட்டிகளில் வென்றுள்ளதாக ஐசிசி இணையதளத்தின் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான அலுவல்பூர்வ பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2009ஆம் ஆண்டு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்த தீர்மானித்தது. 2013 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் தொடங்க இருந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் ரத்து செய்யப்பட்டு, 2019இல் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
அந்த ஆண்டு இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நடந்த ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இந்த லீகின் முதல் போட்டியாக அமைந்தது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்துக்காக மொத்தம் 64 லீக் போட்டிகள் நடந்தன. கொரோனா பெருந்தொற்று காரணமாக 2020 மற்றும் 2021இல் நடந்த திட்டமிடப்பட்டிருந்த சில போட்டிகள் நடைபெறவில்லை.
இறுதிப்போட்டியில் விளையாடும் இந்திய அணியினர்: விராட் கோலி (கேப்டன்), ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ரோகித் சர்மா, ஷுபம் கில், சேதேஸ்வர் புஜாரா, அஜிங்க்யா ரகானே, ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, ரவிச்சந்திரன் அஷ்வின்.
இறுதிப்போட்டியில் விளையாடும் நியூசிலாந்து அணியினர்: கேன் வில்லியம்சன்(கேப்டன்), வால்டிங் (விக்கெட் கீப்பர்), டாம் லாத்தாம், டேவன் கான்வே, ரோஸ் டெய்லர், ஹென்றி நிகோல்ஸ் ,கோலின் டீ கிராண்ட்ஹோம், கைல் ஜேமிசன், நீல் வெக்னர், டிம் சௌத்தி, ட்ரெண்ட் பௌல்ட்.
பிற செய்திகள்:
- ஜெகமே தந்திரம் - சினிமா விமர்சனம்
- இலங்கை மாகாண சபை தேர்தலுக்கு ஆதரவாக கருத்து கூறிய இந்திய ஹைகமிஷன்: தமிழ் தேசிய கூட்டமைப்பு
- நரேந்திர மோதி - மு.க.ஸ்டாலின் சந்திப்பு: தமிழ்நாடு பாஜகவினர் கடுமையாக விமர்சிப்பது ஏன்?
- தி.மு.க.வின் 'ஆபரேஷன் கொங்கு மண்டலம்' - 11 பேருக்கு சிக்கலா?
- அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை, மோதல் இரண்டுக்கும் தயாராக வேண்டும்: வட கொரியா
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :