You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை, மோதல் இரண்டுக்கும் தயாராக வேண்டும்: வட கொரிய அதிபர் கிம்
அமெரிக்காவுடன் `பேச்சுவார்த்தை, மோதல்` என இரண்டுக்கும் வட கொரியா தயாராக இருக்க வேண்டும் என அந்நாட்டின் அதிபர் கிம் தெரிவித்துள்ளார். குறிப்பாக மோதலுக்கு அதிகம் தயாராக வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் ராஜீய பேச்சுவார்த்தைகளுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எடுத்த முயற்சிகளுக்கு அதிபர் கிம் செவி சாய்க்கவில்லை.
வட கொரிய தலைநகர் பியாங்யாங்கில் மூத்த தலைவர்களுடனான சந்திப்பில்தான் கிம் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் ஜோ பைடனின் நிர்வாகம் குறித்து முதன்முறையாக கிம் இப்போது பேசியுள்ளார்.
இந்த வாரம் தொடங்கிய ஆளும் தொழிலாளர் கட்சியின் மத்திய கமிட்டி சந்திப்பில் முதன் முறையாக நாட்டில் உணவுப் பற்றாக்குறை இருப்பதை கிம் ஒப்புக் கொண்டார்.
"நமது நாட்டின் மரியாதை மற்றும் சுயாதீன வளர்ச்சிக்கான நாட்டின் விருப்பம் ஆகியவற்றை பாதுக்காகவும், அமைதியான சூழலை உருவாக்கவும் வட கொரியாவின் பாதுகாப்புக்காகவும் அமெரிக்காவுடன் ஏற்படும் மோதலுக்கு முழுமையாக தயாராக வேண்டும்," என கிம் தெரிவித்ததாக வட கொரியாவின் அரசு ஊடகமான கேசிஎன்ஏ தெரிவித்துள்ளது.
மேலும், எந்த ஒரு நடவடிக்கைக்கும் துல்லியமாகவும், துரிதமாகவும், வட கொரியா எதிர்வினை ஆற்றும் என்றும், கொரிய தீபகற்பம் தொடர்பான விஷயத்தில் ஸ்திரமான கட்டுப்பாட்டை கொண்டு வரும் முயற்சிகளில் கவனம் செலுத்தும் எனவும் கிம் தெரிவித்துள்ளார்.
பதற்றமான உறவு
அமெரிக்க அதிபர் பைடனுடனான கிம்மின் உறவு பதற்றம் நிறைந்ததாகவே உள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்னதாக, கிம்மை "ரெளடி" என பைடன் அழைத்தார். பைடனின் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு ஒரு நாளைக்கு முன்னதாக வட கொரியா ஒரு மிகப்பெரிய ராணுவ அணிவகுப்பை நடத்தியது. தனது புதிய ஏவுகணைகளை அதில் உலகுக்குக் காட்டியது.
ஏப்ரல் மாதம், சர்வதேச பாதுகாப்புக்கு வட கொரியா ஒரு "தீவிர அச்சுறுத்தல்" என்று தெரிவித்தார் பைடன்.
கோபமடைந்த வட கொரியா, பைடனின் கூற்று, வடகொரியாவுக்கு எதிரான "விரோத கொள்கையை தொடர்ந்து வலியுறுத்துவது போல உள்ளது" என்று தெரிவித்தது.
அமெரிக்காவும் தனது வட கொரியா குறித்த கொள்கையை முழுவதுமாக மறு ஆய்வு செய்தது. பின் கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதம் அற்ற நிலையை அடைவதுதான் அமெரிக்காவின் இலக்கு என தெரிவித்தது.
ராஜீய முறையையும், கடுமையான தடுப்பு கொள்கை அணுகுமுறையையும் கடைப்பிடிக்கப்போவதாக பைடன் உறுதியளித்தார். அமெரிக்காவின் வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ஜென் சாகி, "எங்களின் கொள்கை பெரிய பேரத்தை அடைவதில் கவனம் செலுத்துவதோ அல்லது கேந்திர ரீதியில் அமைதி காப்பதோ இல்லை" என தெரிவித்துள்ளார்.
வட கொரியாவுடனான ராஜீய உறவை ஆராய உதவும் நடைமுறை அணுகுமுறையை அமெரிக்கா கடைப்பிடிக்கும் என்றும், நடைமுறையில் முன்னகர்ந்து செல்லும் நடவடிக்கை மீது அமெரிக்கா கவனம் செலுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு அமெரிக்க அதிபராக இருந்த டிரம்பை கிம் மூன்று முறை சந்தித்துள்ளார். ஆனால் ஆணு ஆயுதங்களை நீக்கும் பேச்சுவார்த்தை எந்த முடிவும் எட்டப்படாமல் நின்று போனது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: