தி.மு.கவின் `ஆபரேஷன் கொங்கு மண்டலம்'; 11 பேருக்கு சிக்கலா? - 25 பேர் கொண்ட குழுவை அமைத்த இ.பி.எஸ்

    • எழுதியவர், ஆ. விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களுக்கான ஆதாரங்களை தி.மு.கவின் சட்டத்துறை நிர்வாகிகள் சேகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனையறிந்து மூத்த வழக்குரைஞர் என்.நடராஜன் தலைமையில் வழக்குரைஞர் குழு ஒன்றை எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ளதாக அ.தி.மு.கவினர் தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், பல மேடைகளில் ஒரு கருத்தை தொடர்ந்து முன்வைத்தார். "முதலமைச்சர் முதல் கடைக்கோடியில் இருக்கும் அமைச்சர்கள் வரை செய்திருக்கும் ஊழல்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளோம். அவர்கள் அத்தனை பேருக்கும் நிச்சயமாக உரிய தண்டனை கிடைக்க வழி செய்யப்படும். யார் விட்டாலும் இந்த ஸ்டாலின் விடமாட்டான். அதில் அழுத்தம் திருத்தமாக இருப்பேன். ஏனென்றால், அவர்கள் கொள்ளையடித்திருக்கும் பணம் மக்களின் வரிப்பணம்' எனக் கொதிப்பை வெளிப்படுத்தினார்.

97 பக்க ஊழல் புகார்கள்!

முன்னதாக, அ.தி.மு.க அரசின் அமைச்சர்களுக்கு எதிராக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் புகார் மனு ஒன்றை மு.க.ஸ்டாலின் அளித்திருந்தார். சுமார் 97 பக்கங்களுக்கு அந்தப் புகார் மனு இருந்தது. இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வளாகத்தில் பேட்டியளித்த மு.க.ஸ்டாலின், ` முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது உலக வங்கி நிதி ஊழல், நெடுஞ்சாலைத்துறை ஊழல், மத்திய அரசு வழங்கிய அரிசியை வெளிச்சந்தையில் விற்றதில் நடைபெற்றுள்ள மாபெரும் ஊழல், வருமானத்தை மீறி சொத்துக் குவித்தது தொடர்பான ஊழல் ஆகியவை குறித்து லஞ்ச ஒழிப்புத்துறையில் ஏற்கெனவே ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளோம்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீது வருமானத்தை மீறி சொத்துக் குவித்ததாக கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரையில் லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்கவில்லை. அதேபோல், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், உதயகுமார், டாக்டர் விஜயபாஸ்கர் ஆகியோர் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறையில் ஊழல் புகார்களை கொடுத்திருந்தோம். அதன் மீது நடவடிக்கை எடுக்காத காரணத்தால் ஆளுநரிடம் புகார் மனு கொடுத்திருக்கிறோம்" என்றார்.

வாபஸ் வாங்கிய சபாநாயகர் அப்பாவு!

இதன் தொடர்ச்சியாக, `பார்ட் 2' என்ற பெயரில் அ.தி.மு.க அமைச்சர்களாக இருந்த கே.சி.கருப்பணன், கே.டி.ராஜேந்திரபாலாஜி, தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, அந்தியூர் எம்.எல்.ஏ ராஜாகிருஷ்ணன் ஆகியோர் மீது ஆளுநரிடம் தி.மு.க புகார் மனு அளித்தது. இதன்பேரில் எந்த நடவடிக்கைளும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சர்கள் மீதான புகார்களை கவனிக்குமாறு தி.முகவின் சட்டத்துறை நிர்வாகிகளுக்கு வாய்மொழியாக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக அறிவாலய நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

"தி.மு.க ஆட்சி அமைந்த பிறகு கொரோனா தடுப்புப் பணிகளில் தீவிரம் காட்டி வந்ததால், `முன்னாள் அமைச்சர்கள் மீது 3 மாதங்களுக்குப் பிறகு நடவடிக்கையை தொடரலாம்' என்ற முடிவில் முதலமைச்சர் ஸ்டாலின் இருந்தார். அதேநேரம், சபாநாயகராக தேர்வானதால் முன்னாள் அமைச்சர்கள் காமராஜ், வேலுமணி ஆகியோர் மீது தொடர்ந்த வழக்குகளை அப்பாவு வாபஸ் பெற்றுவிட்டார். இதனால், `அ.தி.மு.கவினர் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பில்லையா?' என்ற கேள்விகள் எழுந்தன. இதுதொடர்பாக, கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் சிலர் பேசி வருவது முதல்வரின் கவனத்துக்கு வந்தது.

இதனையடுத்து, ` இனியும் தாமதப்படுத்த வேண்டாம், ஆளுநரிடம் நடவடிக்கைக்காக கொடுத்த புகார் மனுக்கள், நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள், முகாந்திரம் இல்லை என நிராகரிக்கப்பட்ட ஊழல் வழக்குகள் என அனைத்தையும் சேகரிக்கத் தொடங்குங்கள்' என உத்தரவு வந்தது" என்கிறார் தி.மு.கவின் சட்டத்துறை நிர்வாகி ஒருவர்.

சிக்கலில் 11 முன்னாள் அமைச்சர்கள்?

மேலும், "தற்போது அரசு வழக்குரைஞர் நியமனங்கள் நடக்கத் தொடங்கிவிட்டன. இதன்பிறகு முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளை துரிதப்படுத்த உள்ளனர். கொங்கு மண்டலத்தை முக்கிய இலக்காக வைத்து வழக்குகளை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. காரணம், அங்கு சில மாவட்டங்களில் தி.மு.கவுக்கு பெரிதாக வெற்றி கிடைக்காததால், உள்ளூர் அ.தி.மு.கவினரை எதிர்கொள்ள முடியாமல் தி.மு.கவினர் தவிக்கின்றனர். தேர்தல் தோல்வி காரணமாக அந்த மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர், அறிவாலயம் வருவதற்கும் தயக்கம் காட்டுகின்றனர். இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக ஊழல் வழக்குகளைக் கையில் எடுக்க முதலமைச்சர் திட்டமிட்டுள்ளார்" என்கிறார் அவர்.

தி.மு.க அரசின் முயற்சிகள் குறித்து அ.தி.மு.க வழக்கறிஞர் அணி நிர்வாகிகளிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். "முன்னாள் அமைச்சர்கள் சிலரை இலக்காக வைத்து வழக்குத் தொடர்வதற்கு தி.மு.க தயாராகி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி உள்பட 11 முன்னாள் அமைச்சர்களுக்கு சிக்கலை ஏற்படுத்த தி.மு.க திட்டமிட்டுள்ளது. இதில் முதல்கட்டமாக 4 முன்னாள் அமைச்சர்களின் ஊழல் விவகாரங்களை சேகரிக்கத் தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதில் 2 பேர் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள், மற்ற இருவரில் ஒருவர் டெல்டாவை சேர்ந்தவர், மற்றொருவர் தென்மண்டலத்தைச் சேர்ந்தவர். இவர்கள் பொறுப்பு வகித்த துறைகளில் இருந்து ஆதாரங்களைத் திரட்டும் வேலைகளைச் செய்து வருகின்றனர். இதனையறிந்து அரசின் முன்னாள் குற்றவியல் தலைமை வழக்கறிஞர் ஏ.நடராஜனை அழைத்து எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார்" என்கின்றனர்.

இ.பி.எஸ் அமைத்த 25 பேர் குழு!

தொடர்ந்து பிபிசி தமிழிடம் பேசியவர்கள், "இ.பி.எஸ் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், `தி.மு.க நடவடிக்கை எடுத்தால் சட்டரீதியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன?' என விவாதிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, ஏ.நடராஜன் தலைமையில் 25 பேர் கொண்ட வழக்குரைஞர் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதில், தி.மு.கவின் நடவடிக்கைக்கு ஆளாகக் கூடிய முன்னாள் அமைச்சர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வழக்கறிஞர் குழு ஒன்று போடப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் விவகாரத்தில் வழக்கு பதிவது, முதல் தகவல் அறிக்கை, ஊழலுக்கான ஆதாரங்கள், புலனாய்வு என அனைத்து நிலைகளையும் வழக்கறிஞர் குழு ஆராயும். இதன்பிறகு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை ஏ.நடராஜனுடனும் இ.பி.எஸ்ஸுடனும் விவாதித்து முடிவெடுப்போம்" என்கின்றனர்.

ஆர்.எஸ்.பாரதி சொல்வது என்ன?

``முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளை துரிதப்படுத்தும் வேலைகள் தொடங்கப்பட்டுள்ளது உண்மையா?" என தி.மு.கவின் சட்டத்துறை செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் பிபிசி தமிழுக்காக கேட்டோம். "எதையும் நிதானமாக, தீர விசாரித்து செயல்படுத்த வேண்டும் என்ற முடிவில் இருக்கிறோம். தற்போது அவசரமாக செயல்படுத்தும் முடிவில் நாங்கள் இல்லை. அ.தி.மு.கவில் அமைச்சர்களாக இருந்தவர்கள் மீது வழக்கு போடும்போதே அனைத்தையும் சேகரித்துவிட்டுத்தான் வழக்கே தொடர்ந்தோம். தி.மு.கவை பொறுத்தவரையில் ஆதாரங்களைத் திரட்டிவிட்டு, அதில் தவறு நடந்திருப்பதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்பதற்கான முகாந்திரத்தை ஆராய்ந்த பிறகே ஆளுநரிடம் மனு கொடுத்தோம்.

இதுதொடர்பாக, ஏற்கெனவே ஊழல் நடந்திருப்பதற்கான ஆதாரங்களைத் திரட்டியுள்ளோம். இதனை ஆராய்வது புலனாய்வு அதிகாரியின் வேலை. நீதிமன்றத்தில் வழக்கு தொடரும்போது இதுதொடர்பான ஆதாரங்களை சமர்ப்பிப்பது எங்களின் வேலையாக இருக்கும். தற்போது கொரோனா தொடர்பான பணிகளில் கவனம் செலுத்தி வருகிறோம். இந்தப் பணிகள் நிறைவடைந்த பிறகு தீர விசாரித்து செயல்படுத்துவோம்" என்கிறார்.

சம்பந்திக்கு ஒப்பந்தம் கொடுத்தாரா இ.பி.எஸ்?

இதுதொடர்பாக, அ.தி.மு.க செய்தித் தொடர்பாளரும் வழக்குரைஞருமான மகேஸ்வரியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். "அ.தி.மு.க அரசாங்கத்தில் இடம் பெற்றவர்கள் மீது தி.மு.க போட்ட சில வழக்குகளையே ஆர்.எஸ்.பாரதி வாபஸ் பெற்றுள்ளார். சில வழக்குகள் ஆதாரம் இல்லாமல் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. தேர்தல் பிரசாரத்தின்போது இ.பி.எஸ் பேசும்போது, டெண்டரே விடாத பணிகளில் எல்லாம் ஊழல் நடந்துள்ளதாக தி.மு.க குறைகூறுவதாகப் பேசியிருந்தார். தி.மு.கவை பொறுத்தவரையில் அனைத்திலும் அவசரம் காட்டுகிறார்கள். ஊழல் கறையைக் கூறி அதை மக்களிடம் பூதாகரமாக்கும் வேலைகளைச் செய்தனர். தற்போது சபாநாயகரும் 3 வழக்குகளை திரும்பப் பெற்றுள்ளார். இதெல்லாம் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல. எந்தவித அடிப்படையும் இல்லாமல் எங்கள் மீது வழக்குகளை புனைந்தனர்" என்கிறார்.

தொடர்ந்து பேசுகையில், `` தி.மு.க தொடர்ந்த வழக்குகளின் நோக்கம் பெரும்பாலும் அ.தி.மு.கவை அவமானப்படுத்துவதே. முதலமைச்சரின் சம்பந்திக்கு ஒப்பந்தப் பணிகளைக் கொடுத்ததாகவும் புகார் கூறினர். அவர், தி.மு.க ஆட்சியில் இருந்த காலகட்டத்திலேயே ஒப்பந்தப் பணிகளை எடுத்து செய்து வந்தவர். எந்த ஆட்சி வந்தாலும் அவர் ஒப்பந்த வேலைகளை எடுத்துச் செய்வார். சொல்லப்போனால், ஒப்பந்ததாரராக இருந்துதான் அவர் இ.பி.எஸ்ஸுக்கு சம்பந்தியானார். அதிகாரத்தில் இருந்த காலகட்டத்தில் தனது குடும்பத்தாருக்கு எந்தவித சலுகையையும் இ.பி.எஸ் காட்டவில்லை.

அதேபோல், உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணியும், `ஊழல் குற்றச்சாட்டை நிரூபித்தால் அமைச்சர் பதவி மட்டுமல்ல, அரசியல் பதவிகள் அனைத்திலும் இருந்து விலகத் தயார், இந்த சவாலை ஏற்றுக் கொள்ள ஸ்டாலின் தயாரா?' எனக் கேட்டார். இதற்கு அவர்களால் பதில் அளிக்க முடியவில்லை.

ஓமந்தூரார் சட்டமன்ற வளாகத்தைக் கட்டியதில் எந்த அளவுக்கு அப்போதைய தி.மு.க அரசாங்கம் முறைகேடு செய்தது என்பது குறித்து இ.பி.எஸ் விரிவாகப் பேசியுள்ளார். இவர்கள் மேல் ஏராளமான குறைகளை வைத்துக் கொண்டு எங்கள் மீது புகார்களைக் கூறுகின்றனர். நாங்கள் வெளிப்படையான நிர்வாகத்தை நடத்தி வந்தோம். ஊழலுக்கு அப்பாற்பட்ட அரசாங்கமாகவும் அது இருந்தது. தற்போதைய அரசாங்கம் என்ன வழக்குகளைத் தொடர்ந்தாலும் அதை சட்டரீதியாக எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம்" என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :