You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மோட்டெரா சர்தார் படேல் ஸ்டேடியம்: நரேந்திர மோதி ஸ்டேடியம் என பெயர் மாற்றம்
குஜராத் மாநிலத்தின் ஆமதாபாதில் உள்ள மோட்டெரா சர்தார் படேல் ஸ்டேடியத்துக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோதி பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. மீளுருவாக்கம் செய்யப்பட்ட இந்த விளையாட்டரங்கை இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
ஒரு லட்சத்து 10 ஆயிரம் பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த அரங்கின் மைதானத்தில் இந்தியா, இங்கிலாந்து இடையிலான மூன்றாவது டெஸ்ட் புதன்கிழமை பிற்பகல் தொடங்கியது.
பிங்க் பால் டெஸ்ட் என அழைக்கப்படும் இந்த ஆட்டத்தின் முன்னதாக, அனைவருக்கும் ஆச்சரியமளிக்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோதியின் பெயர் இந்த விளையாட்டரங்குக்கு சூட்டப்பட்டதை குறிக்கும் கல்வெட்டு திறந்து வைக்கப்பட்டது.
இதே அரங்கில் மூன்றாவது டெஸ்டுடன் சேர்த்து நான்காவது டெஸ்ட் ஆட்டமும் நடைபெறவுள்ளது.
முன்னதாக, குஜராத் மோட்டெரா விளையாட்டாரங்கு திறப்பு விழாவில் பங்கேற்ற இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "இந்திய பிரதமர் நரேந்திர மோதி, குஜராத் முதல்வராக இருந்த காலம் தொட்டு உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தை உருவாக்கும் லட்சியத்தை கொண்டிருந்தார். அது இப்போது நனவாகியிருக்கிறது," என்று தெரிவித்தார்.
"முதல்வராக இருந்தபோது, குஜராத்திகள் இரண்டு துறைகளில் வெற்றி நடை போட வேண்டும். ஒன்று - விளையாட்டு, இரண்டாவது ஆயுதப்படைகள் என்று மோதி கூறுவார். எனது வேண்டுகோளை ஏற்று குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் பொறுப்பை ஏற்ற அவர், மோட்டெரா விளையாட்டரங்கை மீளுருவாக்கம் செய்யும் நடவடிக்கையில் தீவிர அக்கறை காட்டினார்," என்று அமித் ஷா கூறினார்.
இந்தியாவின் விளையாட்டு நகரமாக ஆமதாபாதை திகழச் செய்யும் வகையில், நான்புரா என்ற இடத்திலும் மோட்டெரா விளையாட்டு வளாகத்தை உருவாக்க குஜராத் அரசு திட்டமிட்டுள்ளது. இதையொட்டி நடந்த பூமி பூஜை அடிக்கல் நாட்டு விழாவில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளை நடத்த ஏதுவாக அந்த அரங்கு நவீன வசதிகளுடன் கட்டப்படும் என்று குஜராத் மாநில அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிற செய்திகள்:
- இந்தியா Vs இங்கிலாந்து 3வது டெஸ்ட்: இன்றைய போட்டியின் முக்கிய தகவல்கள்
- உலக பணக்காரர் பட்டியல்: ஒரே மாதத்தில் முதலிடத்தை இழந்த ஈலோன் மஸ்க்
- கிம்முக்கு டிரம்ப் கொடுத்த அசாதாரண சலுகை - அதிர்ச்சியில் அமெரிக்கா
- இந்தியா - சீனா மோதல்: 'தவறாகப் பேசிய' 6 பேரை கைது செய்த சீனா
- 'அமெரிக்காவில் உலகப் போரைவிட கொரோனாவால் அதிக மரணங்கள்' - பைடன்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: