You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
Ind Vs Eng 2-வது டெஸ்ட்: விளாசிய ரோஹித், சாதனை படைத்த ரஹானே
இந்தியா முதல் நாளின் முடிவில் 300 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்திருக்கிறது. அனுபவமிக்க பேட்ஸ்மேன்களில் ரிஷப் பண்ட் மட்டுமே பாக்கி இருக்கிறார். சத்தம் காட்டாமல் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 1,000 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீரர் என்கிற பெருமையைப் பெற்றிருக்கிறார் அஜிங்க்யா ரஹானே.
இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (பிப்ரவரி 13, சனிக்கிழமை) காலை தொடங்கியது. டாஸை வென்ற இந்திய அணி, பேட்டிங் செய்யத் தீர்மானித்தது.
இரண்டாவது ஓவரிலேயே சுப்மன் கில் டக் அவுட் ஆகிவிட்டார். ரோஹித் ஷர்மா நின்று நிதானமாக ரன் குவிப்பில் இறங்கினார். அவருக்கு இணையாக புஜாரா முதலில் நின்று கொடுத்தார். ரோஹித் - புஜாரா இணை 113 பந்துகளை எதிர்கொண்டு 85 ரன்களைக் குவித்தது.
21 ரன்களோடு பெவிலியன் திரும்பிய புஜாராவைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி களமிறங்கிய வேகத்தில் தன் விக்கெட்டைப் பறிகொடுத்தார்.
அவரைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் கலக்கிய அஜிங்க்யா ரஹானே களமிறங்கினார். மீண்டும் ஒரு சூப்பர் ஜோடி உருவானது. ரோஹித் - ரஹானே இணை 310 பந்துகளை எதிர்கொண்டு 162 ரன்களைக் குவித்தது. ஜாக் லீச் வீசிய சுழற்பந்தில் ரோஹித் விக்கெட் பறிபோனதால் இந்த இணை பிரிந்தது.
ரோஹித் ஷர்மாவின் விக்கெட் பறி போன போது இந்தியா 248 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அடுத்த சில ஓவர்களிலேயே நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய ரஹானேவும் 67 ரன்களுக்கு தன் விக்கெட்டைப் பறிகொடுத்தார். அஸ்வின் 13 ரன்களுக்கு தன் விக்கெட்டை இழந்துவிட்டார்.
ரிஷப் பண்ட் 33 ரன்களோடும் மற்றும் அக்ஸர் படேல் 5 ரன்களோடும் நாளை தொடர்ந்து விளையாட இருக்கிறார்கள்.
ஹானேவின் சாதனை
நீண்ட நாட்களுக்குப் பிறகு `ஹிட் மென்` ரோஹித் ஷர்மாவை மீண்டும் களத்தில் காண முடிந்தது. 231 பந்துகளில் 161 ரன்களைக் குவித்தார். இதில் 18 பவுண்டரிகளும், 2 சிக்ஸர்களும் அடக்கம். அக்டோபர் 2019-க்குப் பிறகு தன் முதல் சதத்தையும், தன் டெஸ்ட் வாழ்கையில் 7-வது சதத்தையும் இன்று பதிவு செய்தார். ரோஹித் ஷர்மா தன் வாழ்நாளில் 150 ரன்களுக்கு மேல் அடித்திருப்பது இது நான்காவது முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ரோஹித் ஷர்மாவைப் போலவே, அஜிங்யா ரஹானேவும் ஒரு புதிய சாதனையைப் படைத்திருக்கிறார். 149 பந்துகளுக்கு 67 ரன்களை எடுத்து தன் விக்கெட்டைப் பறிகொடுத்த ரஹானே, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் 1,000 ரன்களைக் கடந்த முதல் இந்தியர் என்கிற பெருமையைப் பெற்றிருக்கிறார். அதோடு தன் 23-வது அரை சதத்தைப் பதிவு செய்தார். ஒட்டுமொத்தப் பட்டியலில் 1,051 ரன்களோடு ஐந்தாவது இடத்தில் இருக்கிறார் ரஹானே.
இப்பட்டியலில் முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லபுசானேவும் (1,675 ரன்கள்), இரண்டாவது இடத்தில் இங்கிலாந்தின் ஜோ ரூட்டும் (1,550 ரன்கள்), மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தும் (1,341 ரன்கள்), நான்காவது இடத்தில் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸும் (1,220 ரன்கள்) இருக்கிறார்கள்.
ரோஹித் ஷர்மா சதமும் மற்றும் அஜிங்க்யா ரஹானேவின் அரை சதமும் எப்படி இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியதோ, அதற்கு நேர்மாறாக சுப்மன் கில் மற்றும் விராட் கோலியின் டக் அவுட் இந்திய ரசிகர்களை வருத்தமடையச் செய்தது.
ரிஷப் பண்ட் மட்டுமே களத்தில்
இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை கரை சேர்க்க அனுபவமிக்க பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட் மட்டுமே இருக்கிறார்.
பொதுவாக சுழற்பந்துகளை லாவகமாக எதிர்கொள்ளும் இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரு போட்டிகளிலும், ஜாக் லீச், டாம் பெஸ் மற்றும் மொயின் அலி ஆகியோரின் சுழலில் சிக்கியுள்ளனர்.
ரோஹித் ஷர்மா, புஜாரா, விராட் கோலி, ரஹானே என இந்தியாவின் முக்கிய பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை ஜாக் லீச் மற்றும் மொயின் அலி என இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் மட்டுமே மாறி மாறி பெவிலியனுக்கு அனுப்பியுள்ளனர்.
அனுபவம் குறைந்த வேகப்பந்து வீச்சாளரான ஒலி ஸ்டோன் மற்றும் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.
நாளை இந்தியாவின் மீத இன்னிங்ஸ் ரிஷப் பண்டின் பேட்டில் தான் இருக்கிறது.
இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் 88 ஓவர்களுக்கு 300 ரன்களை எடுத்து 6 விக்கெட்டுகளை இழந்திருக்கிறது இந்தியா.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: