You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்து: 19 பேர் பலி - 6 பேர் மீது வழக்குப்பதிவு
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், இந்த விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளர் சந்தன மாரி மற்றும் குத்தகைத்தாரர்களான சக்திவேல், சிவக்குமார், பொன்னுப்பாண்டி, ராஜா, வேல்ராஜ் ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாத்தூர் அருகே அச்சங்குளம் என்ற கிராமத்தில் செயல்படும் மாரியம்மாள் பட்டாசு ஆலை என்ற ஆலையில் நேற்று தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். நண்பகல் 12 மணியளவில் திடீரென ஆலையின் ஒரு பகுதியில் பட்டாசுகள் வெடித்துச் சிதறின.
இந்த விபத்து ஏற்பட்டபோது, அந்த ஆலையில் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதில் சிலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு தீயில் கருகியுள்ளன.
இந்த விபத்தில் 34க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் சிவகாசி, சாத்தூர், கோவில்பட்டி அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். சிவகாசியில் 25 பேரும் சாத்தூரில் 6 பேரும் கோவில்பட்டியில் 3 பேரும் சிகிச்சைபெற்று வருகின்றனர். சிவகாசியில் சிகிச்சைபெற்று வருபவர்களில் 3 பேர் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட தீக்காயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.
மதுரையிலிருந்து கூடுதலான மருத்துவர்களை அனுப்ப மாநில சுகாதாரத் துறை ஏற்படுகளைச் செய்துள்ளது. பட்டாசு ஆலையில் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் பட்டாசு ஆலையில் 60க்கும் மேற்பட்ட அறைகள் இருந்தன. இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்ட அறைகள் இடிந்து தரைமட்டமாயின. ஒரு அறையில் 2 பேர் மட்டுமே பணியாற்ற வேண்டிய நிலையில், 4 பேர் பணியாற்றிவந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பட்டாசு தொழிற்சாலையில் வேறு விதிமுறைகள் மீறப்பட்டிருக்கிறதா என்பது குறித்த விசாரணைகள் துவங்கப்பட்டிருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பிரதமர் மோதி இரங்கல்
பட்டாசுத் தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19ஆக உயர்ந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக 6 பேர் மீது மாவட்ட காவல்துறை வழக்குப் பதிவுசெய்துள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோதி, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து 2 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்படுமென்றும் காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாய் வழங்கப்படுமென்றும் தெரிவித்துள்ளார்.
காங்கிரசின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் இந்த விபத்து குறித்து தனது வருத்தத்தைப் பதிவுசெய்துள்ளார்.
சிக்கியுள்ளவர்களை உடனடியாக காப்பாற்றி அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என மாநில அரசிடம் கேட்டுக் கொள்கிறேன் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
அச்சங்குளம் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 3 லட்ச ரூபாய் நிதியுதவி அளிக்கப்படுமென்றும் பலத்த காயமடைந்தவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் நிவாரண உதவியாக அளிக்கப்படுமென்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: