You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கோவிட் 19: ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதா கொரோனா வைரஸ்? – வெளியான விசாரணை முடிவுகள்
- எழுதியவர், ஆலிஸ்டர் கோல்மேன்
- பதவி, தகவல் ஆய்வாளர்
சர்வதேச அளவிலான நிபுணர்கள், கோவிட்-19 வைரஸ் நோய் எங்கிருந்து வந்திருக்கக்கூடும் என்பது குறித்து அனைத்து வழிகளிலும் விசாரணை செய்து வரும் நிலையில், அது ஒரு ஆய்வுக்கூடத்திலிருந்து வந்திருக்கக்கூடும் என்ற ஊகத்தை மட்டும் மறுத்துவிட்டார்கள்.
உலக சுகாதார அமைப்பின் திட்டப்பணி தலைவரான பீட்டர் பென் எம்பரெக், இந்த வைரஸ் சீனாவின் வூஹானில் உள்ள ஆய்வுக்கூடத்திலிருந்து கசிந்திருப்பதற்கான ’வாய்ப்புகள் இல்லை` என்று கூறியுள்ளார்.
இந்த வைரஸ், மனிதர்களுக்கு பரவுவதற்கு முன்பு, மிருகங்களிடமே உருவாகி இருக்கும் என்று கூறும் நிபுணர்கள், ஆனால், அது எவ்வாறு நடந்திருக்கும் என்பதை மட்டும் இன்னும் அறியவில்லை.
பல மாதங்களுக்கு சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின், உலக சுகாதார அமைப்பின் இந்த பணி ஜனவரி மாதம் தொடங்கியது. சீனாவிற்கு சென்ற நிபுணர்களின் வருகை மற்றும் நடவடிக்கைகள் சீன அதிகாரிகளால் மிகவும் கூர்மையாக கவனிக்கப்பட்டது.
ஆனால், அங்கு கிடைத்த எந்த ஒரு தடையமும், இந்த வைரஸ் எங்கிருந்து ஆரம்பித்தது என்பது குறித்து உலகில் உலாவரும் கோட்பாடுகளை முடிவுக்கு கொண்டு வருவதாக இல்லை என்றே கூறலாம்.
இவ்வாறு உலா வரும் கோட்பாடுகளில், மிகவும் அதிகம் பேசப்பட்ட ஒன்று, கொரோனா வைரஸ், மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒரு ரசாயன ஆயுதம் என்பதாகும். கடந்த ஆண்டு அதிகம் பேசப்பட்ட இந்த கோட்பாட்டு ஆதாரங்கள் அற்றது.
இந்த கோட்பாட்டில் குறிப்பிடப்பட்ட இந்த ‘ஆயுதம்’ சீனா, அமெரிக்கா, ரஷ்யா அல்லது பிரிட்டனால் உருவாக்கப்பட்டிருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், கோவிட் - 19-ன் மரபணுவை ஆய்வு செய்த நிபுணர்கள் இந்த வைரஸ் இயற்கையாக உருவாகக்கூடியது என்ற முடிவுக்கு வந்தனர்.
‘மூளைச்சலவை’ குறித்த குற்றச்சாட்டுகள்
சீனா இந்த வைரஸ் பரவலை சரியாக கட்டுப்படுத்தாதை திசைதிருப்பவும், வைரஸ் இங்கிருந்து வந்தது என்ற உண்மையை அறிந்திடாமல் இருக்கவும் ஆய்வுக்கூடத்தில் நடந்த விபத்தின் காரணமாக இந்த வைரஸ் கசிந்திருக்கலாம் என்ற கூற்று அடிப்படையாக அமைந்தது.
சீனா மற்றும் உலக சுகாதார அமைப்பின் கூட்டு செய்தியாளர் சந்திப்பிற்குப் பிறகு, சீனா சென்ற உலக சுகாதார அமைப்பின் அதிகாரிகள், சீன அரசால் அதிக அழுத்தத்திற்கு ஆளாகி, அவர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்துள்ளனர் என்று என்று பலர் ட்விட்டரில் பதிவிட்டனர்.
அங்கு கிடைத்த விசாரணையின் முடிவுகள் `கண் துடைப்பிற்காக` நிகழ்ந்தவை என்று சிலர் கூறுகின்றனர். ஒரு சிலர் இது ஒரு ஊழல் என்று பதிவிட்டனர். வேறு சிலர், இது ரசாயன ஆயுதம் என தொடர்ந்து பேசி வருகின்றனர்.
”உலக சுகாதார அமைப்பை நம்புவது யார்?” என்று ட்விட்டரில் பதிவு செய்தார் அமெரிக்காவின் குடியரசுக்கட்சி பிரதிநிதி. அவரை ட்விட்டரில் 448,000 பேர் பின்தொடருகின்றனர்.
இதேபோல, ஆஸ்திரேலியாவின் தீவிர வலதுசாரி அமைப்பான லீவ் பார்ட்டி, தனது பேஸ்புக் பக்கத்தில், “இவையெல்லாம் பொய்! சீனாவின் இந்த வைரஸ் குறித்த அனைத்து ஆதாரங்களையும், முதல் நாளிலிருந்தே உலக சுகாதார அமைப்பு நீர்த்துப்போக செய்து வருகிறது. “ என்று எழுதியுருந்தது.
அதே போல, அமெரிக்காவின் தாராளவாத கட்சியின் பக்கத்தில், “ஆமாம், உலக சுகாதார அமைப்பு கூறுகிறது என்றால், அது உண்மையாகதான் இருக்கும்" என்று கிண்டல் செய்யும் தொணியில் பதிவு செய்திருந்தார்.
போர் ஆயுதம் முதல் 5ஜீ வரை
சரியான ஆதாரங்கள் இல்லாத போதிலும், கோவிட் - 19 வைரஸ், மனிதர்களாலேயே உருவாக்கப்பட்டது என்ற கோட்பாடு கடந்த ஆண்டு முழுவதும் பரவலாக பேசப்பட்டது. இவ்வாறு கூறப்பட்டத்தை அடுத்தடுத்து பேசப்பட்ட கோட்பாடுகளுக்கு அடித்தளமாக அமைந்தது.
அதாவது, இந்த வைரஸ், வான்வழியாக மக்கள்மீது ஒரு ரசாயன சோதனை போல தூவப்பட்டது என்றும், 5ஜீ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மக்களின் உடல் நோயை எதிர்ப்பதை பலவீனமாக்கப்படுதாகவும் பேசப்பட்டது.
இதில் எந்த கோட்பாடுமே உண்மையல்ல. ஆனால், உலகில் உள்ள வசதி படைத்தவர்கள், இந்த வைரஸை பயன்படுத்தி உலக மக்கள் தொகையை குறைக்கவோ, சுயலாபத்திற்காக சமூகத்தில் கண்காணிப்பை அதிகரிக்கவோ இந்த வைரஸை பயன்படுத்தியுள்ளனர் என்பன போன்ற கோட்பாடுகள் உலா வர இவை உதவி செய்தன.
QAnon என்ற ஆதாரங்கள் இல்லாத கோட்பாடுகளோடு, மேலே கூறப்பட்ட கோட்பாடுகளும் இணைந்தன. QAnon கோட்பாடை நம்புபவர்கள் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்பை கடவுளாக கருதுகிறார்கள். மேலும் அவர் சாத்தானை வழிப்படுபவர்களுக்கும், குழந்தைகளை பாலியல் துன்புறுத்தல் செய்பவர்களுக்கும் எதிராக ஒரு ரகசிய போரை மேற்கொண்டு வருவதாக இவர்கள் நம்புகிறார்கள். ஆம், சிலர் சாத்தானின் வழிபாட்டை மறைப்பதற்காகவே இந்த கோவிட் -19 கிளப்பப்பட்டதாக தெரிவித்தனர்.
அரசியலும், கோவிட் -19 உருவான கதையும்
சீனாவிற்கு இந்த வைரஸ் உருவானது குறித்து தகவல்கள் தெரியும் என்றும், அதை அவர்கள் வெளியிட மறுக்கின்றனர் என்றும் நம்பும் மக்களை, உலக சுகாதார அமைப்பின் முடிவுகள் திருப்திப்படுத்தாது.
இந்த நம்பிக்கை, அமெரிக்க தலைமையாலேயே கடந்த ஆண்டு முழுவதும் ஊக்குவிக்கப்பட்டது. தெரிந்தோ தெரியாமலோ, இந்த வைரஸை கடந்த ஆண்டு முழுவதும் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப், ‘சீனா வைரஸ்’ என்றே கூறி வந்தார். இந்த வைரஸ் பரவலுக்கு சீனாவே காரணம் என்ற எண்ணத்திற்கும் ஆதரவு தருவது போலவே அவர் தொடர்ந்து நடந்துகொண்டார்.
இதன்காரணமாக, டிரம்பை பின் தொடர்பவர்கள், ஒரு நான்கு வார்த்தைகள் கொண்ட வாக்கியத்தை உருவாக்கினர்; ‘ சீனா பொய்யுறைத்தது, மக்கள் உயிரிழந்தனர்.’ (’China lied, people died’) என்பதே அது.
விசா பிரச்னை காரணமாக, உலக சுகாதார அமைப்பின் விசாரணை அதிகாரிகள் சீனாவிற்குள் நுழைவதில் இருந்த சிக்கலும், இந்த கோட்பாடுகளுக்கு உதவும் வகையிலேயே அமைந்தது.
விசாரணை நடத்த வரும் உலக சுகாதார அமைப்பின் அதிகாரிகளின் நடவடிக்கைகள் சீன அரசால் கட்டுப்படுத்தப்படும் என்று சீனாவிற்கு வெளியே சில கருத்துகள் வந்தன. சீன அரசுக்கு எதிரான கருத்துக்களை கூறுவதிலிருந்து அவர்கள் அவர்கள் கட்டுப்படுத்தப்படுவார்கள் என்றும் சிலர் பேசினர்.
மறுபக்கமோ, கோவிட் - 19 வைரஸ் அமெரிக்காவால் உருவாக்கப்பட்டிருக்கக்கூடும் என்ற ஆதாரமற்ற கோட்பாடுகள், புரளிகளாக பரப்பப்பட்டன.
சீன அரசால் கட்டுப்படுத்தப்படும் அந்நாட்டு சமூக வலைதளமான வீபோவிலும் சில சமூக வலைதள பயன்பாட்டாளர்கள் இந்த கோட்பாட்டிற்கு ஆதரவளித்து பேசினர்.
கடந்த ஆண்டு பிப்ரவரி 9 மற்றும் 10 ஆம் தேதி அதில் பதிவிடப்பட்ட கருத்துகள், உலக சுகாதார அமைப்பு, இந்த விவகாரத்தில் அமெரிக்காவையும் விசாரணை செய்ய வேண்டும் என்றும், அமெரிக்கர்கள் ’மூளைச்சலவை’ செய்யப்பட்டுள்ளதாகவும், ‘வெட்கமில்லாமல்’ இந்த வைரஸ் சீனாவிலிருந்துதான் உருவாகியது என்று அவர்கள் பேசி வருவதாகவும் அவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த பதிவுகளில் சில, அரசுக்கு ஆதரவான பதிவுகள் போடுவதற்காக, சீன அதிகாரிகளால் பணம் அளித்து நடத்தப்படும் ‘50-சென்ட் ஆர்மி’ என்ற அமைப்பின் மூலமாகவும் பதிவிடப்பட்டிருக்கக்கூடும்.
கோவிட் - 19 வைரஸ், சீனாவிலிருந்துதான் வந்திருக்ககூடும் என்பதற்கான முறையான ஆதாரம் எதுவுமில்லாமல் உலக சுகாதார அமைப்பின் விசாரணைக்குழு திரும்பியுள்ள நிலையில், இந்த ஆதாரமற்ற கோட்பாடுகள் முடிவுக்கு வருவதாக தெரியவில்லை.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: