You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
BBC Indian Sportswoman of the Year: இந்திய விளையாட்டு வீராங்கனைகளுக்கு விருது வழங்கி கௌரவிக்கும் பிபிசி
- எழுதியவர், வந்தனா
- பதவி, இந்திய மொழி சேவைகளின் தொலைக்காட்சி பிரிவு ஆசிரியர், பிபிசி
26 வயது பவானி தேவி, சர்வதேச அளவில் கத்திச் சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை. தற்போது டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காக அவர் தயாராகிக் கொண்டு இருக்கிறார்.
இந்தியாவில் கத்திச் சண்டை போட்டி (Fencing) பெரியதாக பிரபலம் அடையவில்லை. எனவே இந்தியாவில் அதை தேர்ந்தெடுப்பதில் பல சவால்கள் உள்ளன.
கொரோனா காலத்தில் பயிற்சிகள் ரத்து செய்யப்பட்டு, உடற்பயிற்சி கூடங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், மொட்டை மாடியில் செங்கல் மற்றும் கிட் பையை கொண்டு டம்மி உருவம் ஒன்றை செய்து அதில் பவானி பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று வைரலானது.
தொடர்ந்து பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக பவானி தேவி அவ்வாறு செய்தார்.
உடற்பயிற்சி கூடங்கள் திறக்கப்பட்ட பிறகு, மல்யுத்த வீராங்கனை திவ்யா காக்ரனுடன் நான் ஒரு நாளை கழித்தேன். அவர் ஜார்ஜியாவை சேர்ந்த தனது பயிற்சியாளருடன் வீடியோ கால் மூலம் கடுமையான பயிற்சியை மேற்கொண்டிருந்தார்.
கொரோனா பெருந்தொற்று காலத்திலும் இத்தனை ஆர்வத்தையும், உறுதிப்பாடையும் கொண்டிருக்கும் இந்த விளையாட்டு வீராங்கனைகள் தள்ளிவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக்கில் சாதிக்க காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த பின்னணியில்தான் இந்தியாவில் சிறந்த விளையாட்டு வீராங்கனைகளை சிறப்பிக்கும் வண்ணம், பிபிசி இந்த வருடத்துக்கான `BBC Indian Sportswoman of the Year` விருது நிகழ்ச்சிக்கான வாக்களிப்பு பிப்ரவரி 8ஆம் தேதி தொடங்குகிறது.
இந்த நிகழ்ச்சியின் நோக்கம், விளையாட்டுத் துறையில் உள்ள வீராங்கனைகள் மீது கவனம் திரும்ப வேண்டும் என்பதும், மாற்றுத்திறன் தடகள வீரர்கள் உட்பட அனைத்து இந்திய வீராங்கனைகளின் மகத்தான பங்களிப்பை கெளரவப்படுத்த வேண்டும் என்பதாகும்.
இந்திய விளையாட்டு வீராங்கனைகளின் வளர்ச்சி
ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கு கிடைத்த இரு பதக்கங்களும் வீராங்கனைகளால் கிடைத்த பதக்கங்கள். மேலும் ஒலிம்பிக் போட்டிக்கு இந்த வருடம் ஏற்கனவே பல வீராங்கனைகள் தேர்வாகியுள்ளனர்.
சுவாரஸ்யமான ஒரு விஷயம் என்னவென்றால், கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2020ஆம் ஆண்டுதான் இந்திய வீராங்கனை ஒருவர் ஒலிம்பிக் போட்டிகளில் முதன்முறையாக பதக்கம் வென்று 20 ஆண்டுகள் நிறைவடைந்த ஆண்டு.
2000ஆம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பாக கர்ணம் மல்லேஷ்வரி வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். செப்டம்பர் 19, 2000 என்ற அந்த நாள் நினைவில் நீங்காமல் உள்ளது.
அப்போதிலிருந்து, சாய்னா நேவால், சாக்ஷி மாலிக், மேரி கோம், மானசி ஜோஷி, பி.வி. சிந்து என பலர் உலகளவிலான போட்டிகள் பலவற்றில் பதக்கங்களையும் பெற்றுள்ளனர்.
இந்த வருடம் கொரோனா தொற்று காரணத்தால் விளையாட்டு நிகழ்ச்சிகள் சற்று குறைவானதாக உள்ளன. இருப்பினும், ஆசிய மற்றும் உலக மல்யுத்த போட்டிகள், செஸ் ஒலிம்பியாட், பெண்கள் ஹாக்கி அணி ஒலிம்பிக் போட்டிகளில் தேர்வானது என சில முக்கிய சாதனைகள் இந்திய வீராங்கனைகளால் நிகழ்த்தப்பட்டுள்ளன.
`BBC Indian Sportswoman of the year award` நிகழ்ச்சியின் நோக்கம் இந்த சாதனையாளர்களுக்கு மகுடம் சூட்ட வேண்டும் என்றும், அவர்களின் பிரச்னைகள் மற்றும் சவால்கள் கவனம் பெற வேண்டும் என்பதாகும்.
விளையாட்டுத் துறையில் பெண்களுக்கு சரிசமமான இடம்
2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற பெண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை குறித்து உஙக்ளுக்கு நினைவிருக்கலாம்.
இதுவரை பெண்கள் விளையாட்டு நிகழ்ச்சிக்கு வந்த அதிகப்படியான பார்வையாளர்கள் என்ற சாதனையை கிட்டதட்ட முறியடிக்கும் எண்ணிக்கையாக அது இருந்தது. அந்த எண்ணிக்கை 90, 185ஆக உள்ளது. இருப்பினும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்படி உலகளவில் பெண்கள் கிரிக்கெட் போட்டியை காண வந்த அதிகபட்ச பார்வையாளர்களின் எண்ணிக்கை அது.
இந்திய வீராங்கனைகள் பல பதக்கங்களையும், சர்வதேச போட்டிகளில் பல வெற்றிகளையும் பெற்றிருந்தாலும், அவர்கள் குறித்த இணையப் பக்கங்கள் அவர்களின் சாதனையை முழுவதுமாக சொல்வதாக இல்லை.
ஆண் விளையாட்டு வீரர்களை ஒப்பிட்டு பார்த்தால் இந்த விளையாட்டு வீராங்கனைகள் குறித்த விக்கிப்பீடியா பக்கங்களும் குறைவாகதான் உள்ளன.
`BBC Indian Sportswoman of the year` நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, விக்கிப்பீடியாவுடன் இணைந்து பிபிசி ஹேக்கதான் நிகழ்ச்சி ஒன்றையும் நடத்துகிறது. அதில் இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் இந்த விளையாட்டு வீராங்கனைகள் 50 பேரின் பக்கங்களை புதியதாக உருவாக்குவர். இது ஆண் வீரர்களுக்கு இணையாக வீராங்கனைகளின் பக்கங்களை உருவாக்கும் முயற்சி.
பெண்கள் மற்றும் இளைஞர்கள் விளையாட்டுத் துறையில் அதிகப்படியாக பங்கெடுத்துவருகிறார்கள், குறிப்பாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கான தயாரிப்புகளில் அதிகம் ஈடுபட்டு வருகிறார்கள் என்பதில் பிபிசி கவனம் செலுத்தி வருகிறது என்பது இந்த நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக உள்ளது.
வெற்றியாளர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
பிபிசியால் தேர்ந்தெடுக்கப்பட்ட நடுவர் குழு இந்திய வீராங்கனைகளின் பட்டியல் ஒன்றை உருவாக்கியுள்ளது. அந்த நடுவர் குழுவில், இந்தியா முழுவதும் உள்ள முக்கிய விளையாட்டுப் பிரிவு பத்திரிகையாளர்கள், நிபுணர்கள், மற்றும் எழுத்தாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஐந்து வீராங்கனைகளின் பெயர் பொதுமக்களின் வாக்குகளுக்காக வெளியிடப்படும். இந்த வாக்குகளை பிப்ரவரி 8ஆம் தேதியிலிருந்து 24ஆம் தேதி வரை செலுத்தலாம்.
பிபிசி நடுவர் குழு, பிபிசியின் இந்த வருடத்துக்கான வளர்ந்து வரும் விளையாட்டு வீராங்கனையை தேர்ந்தெடுக்கும். ஆசிரியர்கள் குழு, விளையாட்டுத் துறையில் வாழ்நாள் சாதனை பெறும் வீராங்கனையை பரிந்துரைப்பர்.
கடந்த வருடம் பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதை 2019ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற பி.வி. சிந்து பெற்றார். தடகள வீராங்கனை பி.டி. உஷா வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற்றார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: