You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆஸ்திரேலியா–இந்தியா டி20: முதல் போட்டியில் வெற்றியை பதித்த இந்திய அணி
ஒரு பக்கம் அபாயகரமான மேக்ஸ்வெல் விக்கெட்டை நடராஜன் வீழ்த்த, இன்னொருபுறம் வாஷிங்டன் சுந்தர் சிக்கனமான பந்துவீச்சால் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு அழுத்தத்தை கூட்ட, சாஹல் அபாரமாக மூன்று விக்கெட்டுகளை வீழ்த்த என டி20 தொடரை, வெற்றியுடன் துவங்கியிருக்கிறது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அறிமுகமான தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் தனது முதல் போட்டியிலேயே முத்திரை பதித்தார். இந்தியாவும் வென்றது. அதன் பலனாக டி20 தொடரின் முதல் போட்டியிலேயே நடராஜன் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார்.
சர்வதேச டி20 தொடரில் முதல்முறையாக களம் கண்ட நடராஜன் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி வாய்ப்பை வீணடிக்காமல் சாதித்து காட்டியுள்ளார். மேக்ஸ்வெல்லை எல்பிடபிள்யூ முறையிலும், தொடக்க வீரர் ஷர்ட்டை லெந்த் பந்திலும், மிச்செல் ஸ்டார்க்கை ஒரு துல்லியமான யார்க்கர் மூலமும் பெவிலியன் அனுப்பினார் நடராஜன்.
முன்னதாக டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் ஃபீல்டிங்கை தேர்ந்தெடுத்தார். இந்திய அணியில் நடராஜன், சஞ்சு சாம்சன், மணீஷ் பாண்டே ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.
இந்தியாவின் பேட்டிங் முதல் பாதியில் அவ்வளவு சிறப்பாக இல்லை. தவான், கோலி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். சஞ்சு சாம்சன் அதிரடியாக ஆடி நம்பிக்கை தந்தார் ஆனால் அவரால் நீண்ட நேரம் நிலைத்து நிற்க முடியவில்லை. மணீஷ் பாண்டே, ஹர்டிக் பாண்டியாவும் ஏமாற்றினர். ஒரு பக்கம் தொடக்க வீரராக களமிறங்கிய ராகுல் அரைசதமடித்து அவுட் ஆனார். பேட்டிங்கில் இந்தியாவுக்கு நாயகனாக விளங்கியவர் ரவீந்திர ஜடேஜாதான். கடைசி கட்டத்தில் அவர் ஆடிய அதிரடி ஆட்டத்தால் 150 ரன்களை தாண்டுவதே இந்தியாவுக்கு சிரமம் என்ற நிலை மாறி 160 ரன்களையும் கடந்தது இந்திய அணி.
ஜடேஜா 23 பந்துகளில் 5 பவுண்டரி ஒரு சிக்ஸர் என 44 ரன்கள் குவித்தார். கடைசி மூன்று ஓவர்களில் 46 ரன்கள் குவித்தது இந்திய அணி. 20 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது.
ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரராக பின்ச்சும் ஷர்ட்டும் களமிறங்கினர். தீபக் சாகர் வீசிய முதல் ஓவரிலேயே 14 ரன்கள் விளாசியது இந்த கூட்டணி. ஆனால் அதற்கடுத்த ஓவரிலேயே வாஷிங்க்டன் சுந்தரை கொண்டு வந்தார் கோலி. இந்திய அணித்தலைவர் கோலியின் துருப்பூச்சீட்டாக விளங்கிய சுந்தர் பவர்பிளேவில் ரன்களை கட்டுப்படுத்தினார்.
கேப்டன் கோலி முதற்கொண்டு கேட்சை கோட்டை விட்டதால் ஆஸ்திரேலிய தொடக்க வீரர்கள் கவனமாக ரன்கள் சேர்த்தனர். இந்த ஜோடியை ஜடேஜா காயமடைந்ததால் அவருக்கு பதிலாக களமிறங்கிய சாஹல் பிரித்தார். அதன்பின்னர் ஸ்மித்தையும் வெளியேற்றினார் சாஹல். அதிரடி வீரர் மேக்ஸ்வெல் சர்வதேச டி20 போட்டியில் நடராஜனின் முதல் விக்கெட்டாக வீழ்ந்தார். அதன்பின்னர் ஆஸ்திரேலிய அணியை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர் இந்திய பந்துவீச்சாளர்கள். 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் மட்டுமே எடுத்தது ஆஸி.
11 ரன்கள் வித்தியாசத்தில் வென்று வெற்றிக்கணக்கை துவங்கியிருக்கிறது இந்தியா. அடுத்த போட்டி ஞாயிற்றுகிழமை நடைபெறவுள்ளது. சாஹல் இந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருதை வென்றார். வாஷிங்டன் சுந்தர் அபாரமாக பந்து வீசி 4 ஓவர்களில் வெறும் 16 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
பிற செய்திகள்:
- டெனெட் – திரை விமர்சனம்
- விவசாயிகள் போராட்டம்: டிசம்பர் 8ல் பாரத் பந்த் நடத்த விவசாயிகள் சங்கங்கள் அழைப்பு
- "இலங்கை இறுதி யுத்தத்தில் 40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டார்களா?"
- நடராஜனின் மறுபக்கம்: வறுமையின் பிடியில் "அந்த 15 ஆண்டுகள்"
- இந்திய ஆசிரியருக்கு 10 லட்சம் அமெரிக்க டாலர்கள் பரிசு: இப்படி கூட செய்வாரா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: