CSK vs RR: தோனி இளம் வீரர்கள் குறித்து கூறியது சரியா? - ஜாதவ் மீது தொடரும் விமர்சனம்

    • எழுதியவர், சிவக்குமார் உலகநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

சில விளையாட்டு போட்டிகள் நம்பிக்கை அளிக்கும், சில போட்டிகள் ஏமாற்றமளிக்கும், கேள்விகளை எழுப்பும். வேறு சில போட்டிகள் வியப்பளிக்கும். இவை அனைத்தையும் ஒருசேர அளிக்கும் வல்லமை மிக சில போட்டிகளுக்குத்தான் உள்ளது.

அபுதாபியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக திங்கட்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய ஐபிஎல் லீக் போட்டியில் அப்படித்தான் நடந்தது.

சென்னை அணி இந்த தொடரில் மற்றொரு மோசமான தோல்வியை சந்தித்துள்ள நிலையில், இம்முறை ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் நிபுணர்கள் தரப்பில் அழுத்தமான கேள்விகள் மற்றும் ஏமாற்றங்கள் வெளிப்பட்டன.

இதுவரை 3 முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்ற சிஎஸ்கே அணி, 8 முறை இறுதி போட்டிகளில் விளையாடியுள்ளது. தான் விளையாடிய அனைத்து ஐபிஎல் தொடர்களிலும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

வெல்ல முடியாத அணி என்று முன்பு புகழப்பட்ட சிஎஸ்கே, தொடர்ந்து அளித்து வரும் மோசமான பங்களிப்பு எதிரணி ரசிகர்களுக்கும் வியப்பையே அளித்துள்ளது.

களையிழந்த 200-வது போட்டி

ஐபிஎல் வரலாற்றில் 200-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் என்ற பெருமையுடன் களமிறங்கிய தோனிக்கு மறக்கமுடியாத போட்டியாக அது அமையும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்தனர். உண்மை தான், அவரால் மறக்கவே முடியாத போட்டியாக அமைந்தது.

டாஸ் வென்ற தோனி மீண்டும் பேட்டிங் தேர்வு செய்ய, கடந்தமுறையை போலவே இம்முறையும் பவர் பிளே ஓவர்கள் சரியாக அமையவில்லை.

டூ பிளஸிஸ் மற்றும் வாட்சன் ஆகிய இருவரும் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்துவிட, மற்றொரு தொடக்க வீரரான சாம் கரனால் தனது வழக்கமான அதிரடி பேட்டிங் பாணியை தொடரமுடியவில்லை.

ஆடுகளம் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருப்பதை உணர்ந்த ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் சூழலை சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்.

இரு முனையிலும் ராஜஸ்தான் அணியின் சுழல் பந்துவீச்சாளர்களான ஷ்ரேயாஸ் கோபால் மற்றும் ராகுல் டிவாட்டியா ஆகிய இருவரும் நன்றாக பந்துவீசினர்.

இந்த தருணத்தில் சாம் கரன் மற்றும் அம்பத்தி ராயுடு ஆகிய இருவரும் ஆட்டமிழக்க சென்னை அணி மேலும் தடுமாறியது.

தோனி 28 ரன்கள் எடுத்தார். ஜடேஜா அதிகபட்சமாக 35 ரன்கள் எடுத்தார்.

மீண்டும் ட்ரோல் செய்யப்படும் ஜாதவ்

இறுதி ஓவர்களில் பேட்டிங் செய்த கேதர் ஜாதவால் ஒரு பவுண்டரி கூட அடிக்கமுடியவில்லை. 7 பந்துகளில் 4 ரன்கள்தான் எடுத்தார். அவர் கொடுத்த கேட்ச்சை ஜோஃப்ரா ஆர்ச்சர் பிடித்திருந்தால் 1 ரன்னில் ஆட்டமிழந்திருப்பார்.

மீண்டும் சமூகவலைத்தளங்களில் ஜாதவ் ட்ரோல் செய்யப்படுகிறார். ஆனால் தோல்விக்கான காரணம் அவர் மட்டுமா?

ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தபோதிலும், சென்னை அணியின் பேட்டிங் மிகவும் மோசமாகவும், எந்த எத்தனிப்பும் இல்லாமல் இருந்ததே 125 என்ற குறைவான ரன்களை பெற்றதற்கு முக்கிய காரணம்.

சுழல் பந்துவீச்சை சமாளிக்க ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப் போன்ற வித்தியாசமான ஷாட்கள் எதையும் சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் முயலவில்லை.

126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை விரைவாக இழந்ததால் சென்னை ரசிகர்களுக்கு சற்று நம்பிக்கை இருந்தது.

ஆனால் குறைந்த இலக்கு என்பதாலும், ஜோஸ் பட்லரின் சிறப்பான பேட்டிங்காலும், 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் எளிதாக வென்றது.

48 பந்துகளில் 70 ரன்கள் எடுத்த பட்லர் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

எடுபடாத சிஎஸ்கே பந்துவீச்சு

சாவ்லா, ஜடேஜா போன்ற சென்னையின் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு அவர்கள் பந்துவீசிய சமயத்தில் ஆடுகளம் பெரிய அளவில் சாதகமாக இல்லாததால் அவர்களால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை.

போட்டி முடிந்தவுடன் பேசிய தோனி, தாங்கள் பந்துவீசும்போது சுழல் பந்துவீச்சுக்கு ஆடுகளம் சாதகமாக இல்லை என்று குறிப்பிட்டார்.

இளம் வீரர்களுக்கு அதிகம் வாய்ப்பளிக்கபடுவதில்லை என்று கூறப்படுவதற்கு 'ஒருவேளை இம்முறை சில இளம்வீரர்களிடம் தேவைப்படும் தீப்பொறி இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் இனி வரும் போட்டிகளில் எந்த அழுத்தமும் இல்லாமல் விளையாட வாய்ப்பளிக்கப்படும்' என்று கூறினார்.

தோனி கூறியது சரியா?

இது குறித்து சமூகவலைதளத்தில் அதிக அளவில் கேள்விகள் எழுப்பப்பட்டன. சில முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் ஜாதவ் தொடர்ந்து விளையாடி வருவது குறித்தும், ஒரு போட்டிக்கு பிறகு வாய்ப்பளிக்கப்படாத தமிழக வீரர் ஜெகதீசன் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தோனி கூறியது மற்றும் அவரின் முடிவுகள் குறித்த விமர்சனங்கள் குறித்து கிரிக்கெட் வீரர் மற்றும் வர்ணனையாளர் ரகுராமன் பிபிசி தமிழிடம் பேசினார்.

''தோனி இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிப்பது பற்றி கூறியது ஒரு வரிதான். அது சிலரால் மிகைப்படுத்தப்படுகிறது என்று எண்ணுகிறேன்.

ஆனால் குறைந்த பந்துகளில் 33 ரன்கள் எடுத்த ஜெகதீசன் ஒரு போட்டிக்கு பிறகு ஏன் அணியில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்பது குறித்தும், ஜாதவுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படுவது குறித்தும் தோனி தான் விளக்கவேண்டும்.

நிச்சயம் அதற்கு வலுவான காரணம் இருக்கலாம். ஆனால் தற்போது தொடர்ந்து தோல்விகள் ஏற்படுவதால் அவரது முடிவுகள் மற்றும் தலைமை விமர்சனத்துக்குள்ளாகிறது.

இதே அணி வெற்றி பெற்றால், இவை குறித்து பெரிதாக கேள்விகள் எழாது. இனி சிஎஸ்கே அனைத்து போட்டிகளையும் வெல்ல வேண்டும். ஆனால் அது மிகவும் சிரமம்'' என்று ரகுராமன் குறிப்பிட்டார்.

2020 ஐபிஎல் தொடரில், இதுவரை தான் விளையாடிய 10 போட்டிகளில் மூன்றில் மட்டுமே சென்னை அணி வென்றுள்ளது. புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

சமூக வலைத்தளங்களில் பிளே ஆஃப் சுற்றில் நுழைவது குறித்த கணக்கையும், விவாதத்தையும் சிஎஸ்கே ரசிகர்கள் தொடங்கியுள்ள நிலையில், எஞ்சியுள்ள நான்கு போட்டிகளில் வெல்வது மட்டுமல்ல, மற்ற அணிகளின் வெற்றி, தோல்வியையும் உன்னிப்பாக கவனிக்க வேண்டிய நிலையில் அந்த அணி உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: