ஐபிஎல் 2020: அம்பட்டி ராயுடு - மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சாளர்களை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சாதித்த கதை

    • எழுதியவர், சிவக்குமார் உலகநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐசிசி உலகக் கோப்பை தொடரில் விளையாடும் இந்திய அணி 2019 மார்ச் மாதத்தில் அறிவிக்கப்பட்டது. இந்திய வீரர்கள் பட்டியலில் நிச்சயம் இடம்பெறுவோம் என்று நம்பிய ஒரு பேட்ஸ்மேனின் பெயர் அதில் இடம்பெறவில்லை.

மிடில் ஆர்டர் பேஸ்ட்மேனான அம்பட்டி ராயுடு தான், உலகக் கோப்பையில் விளையாடிய இந்திய அணியில் இடம்பெற தவறிய அந்த வீரர்.

ராயுடுவுக்கு ஏன் வாய்ப்பில்லை என்று விளக்கிய தேர்வாளர் ஒருவர், ராயுடுவுக்கு பல வாய்ப்புகள் தந்துள்ளோம், ஆனால் சில காரணங்களால் மற்றொரு வீரரை தேர்வு செய்ததாக குறிப்பிட்டார்.

உலகக் கோப்பையில் விளையாடும் இந்திய அணியில் தேர்வான அந்த வீரர் பேட்டிங், பெளலிங், பீல்டிங் என மூன்று அம்சங்களில் சிறப்பாக பங்களிப்பவர் என அந்த தேர்வாளர் அப்போது கூறியிருந்தார்.

இந்த நிலையில்,அதை கிண்டல் செய்வது போல உலகக்கோப்பை போட்டிகளை காண, தான் 3டி கண்ணாடி வாங்கியுள்ளதாக அம்பத்தி ராயுடு ட்வீட் வெளியிட்டார். இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

அதன் பின்னர் அந்த உலகக் கோப்பையில் ஓரிரு போட்டிகளுக்கு ஷிகர் தவான் மற்றும் விஜய் சங்கர் ஆகியோர் காயமடைந்த நிலையில், அவர்களுக்கு பதிலாக அறிவிக்கப்பட்ட மாற்று வீரர்கள் பட்டியலில் ராயுடுவின் பெயர் இல்லை.

புறக்கணிப்பை தொடர்ந்து ஒய்வு அறிவிப்பை வெளியிட்ட ராயுடு

மிகுந்த ஏமாற்றத்துக்கு உள்ளான அம்பட்டி ராயுடு, அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் அறிவித்தார்.

அதன்பின் சில மாதங்கள் கழித்து மீண்டும் ஓய்வில் இருந்து திரும்பி வந்தார். ஆனால் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடந்த ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் பலம் பொருந்திய மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சை இக்கட்டான தருணத்தில் ராயுடு சந்தித்தார்.

163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தனது ஆட்டத்தை துவக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தொடக்கத்தில் அதிர்ச்சி காத்திருந்தது. இரண்டாவது ஓவரின் முடிவில் 6 ரன்களை மட்டுமே எடுத்த அந்த அணி, 2 விக்கட்டுகளை இழந்து தடுமாறியது.

தொடக்கமே அதிர்ச்சி; போராடிய ராயுடு

வேகப்பந்து வீச்சாளர்களான ஜேம்ஸ் பேட்டின்சன் மற்றும் டிரண்ட் போல்ட் ஆகிய இருவரும் சிறப்பாக பந்துவீசினர். ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது.

பும்ரா மற்றும் பாண்டியா சகோதரர்கள் இன்னும் பந்து வீச வேண்டியிருந்தது. சர்வதேச கிரிக்கெட்டில் எதிர்பார்த்தது போல பங்களிக்க முடியாதது, இனி இந்திய அணியில் விளையாட முடியாதோ என்ற ஏமாற்றம், சென்னை அணியில் ஆடும் பேட்ஸ்மேன்களுக்குள் உள்ள போட்டி என பல அழுத்தங்களின் மத்தியில் ராயுடு, நிதானமாக தொடங்கி, தேவைப்பட்ட நேரத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி, 48 பந்துகளில் 71 ரன்கள் எடுத்து சென்னை அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

ராயுடுவை சாதிக்க தூண்டியது எது?

நிச்சயம் அவர் சந்தித்த போராட்டங்களும், ஏமாற்றங்களும் தான். ஏன் சில சர்ச்சைகள் கூட எனலாம்.

உலகக் கோப்பை அணியில் இடம்பெறாதது மற்றும் ஒய்வு முடிவை அறிவித்தது மட்டுமல்ல, ராயுடு தனது கிரிக்கெட் பயணத்தில் ஏராளமான சர்ச்சைகள் மற்றும் ஏமாற்றங்களை சந்தித்துள்ளார்.

மிக தாமதமாக தனது 27-வது வயதில் தான், முதல் சர்வதேச போட்டியில் விளையாட அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

இளம் வயதில் சிறப்பாக விளையாடி வந்த அவர், 2004-ஆம் ஆண்டு நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் இந்திய அணியின் கேப்டனாக இருந்தார்.

அதன் பின்னர் ஓரிரு ஆண்டுகளில் இந்திய அணியில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ராயுடு, பிசிசிஐ அங்கீகரிக்காத இந்தியன் கிரிக்கெட் லீக் தொடரில் விளையாட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

இதன் பின்னர் அவர் இந்திய கிரிக்கெட் அணியில் மட்டுமல்ல, ரஞ்சி அணியில் இடம்பெறுவது கூட முடியாத காரியமானது.

பெரும் போராட்டத்துக்கு பிறகு கிடைத்த வாய்ப்பு

2009-ஆம் ஆண்டு ஐசிஎல் தொடரில் விளையாட ஒப்பந்தமான பல வீரர்களுக்கு மன்னிப்பு அளித்து அவர்களை சர்வதேச கிரிக்கெட் போட்டி தேர்வுக்கு பரிசீலிப்பது என்ற முடிவை பிசிசிஐ எடுத்தது.

நீண்ட தாமதத்துக்கு பின்னர், ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 2013-ஆம் ஆண்டு நடந்த ஒருநாள் போட்டியில் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை ராயுடு துவக்கினார்.

55 ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடியுள்ள அவர், 3 சதங்கள் எடுத்துள்ளார். மேலும் அவரின் பேட்டிங் சராசரியும் 47 என்ற நல்ல நிலையில் உள்ளது.

ஆனாலும் வலுவான பேட்டிங் வரிசை உள்ள இந்திய அணியில், அம்பட்டி ராயுடுவுக்கு போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இந்திய அணியில் நிரந்தர வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற ஏமாற்றம் ஒருபுறமிருக்க, ராயுடுவின் பெயர் பல சர்ச்சைகளிலும் இடம்பெற்றது.

2005-ஆம் ஆண்டு நடந்த ரஞ்சி கோப்பை போட்டியில் எதிரணி வீரருடன் அவருக்கு மோதல் ஏற்பட்டது. அதேபோல், 2016- ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் ஹர்பஜன் சிங்குடன் களத்தில் அவர் பலமான கருத்து மோதலில் ஈடுபட்டார்.

ஓரிரு முறைகள் நடுவர்களுடன் அவர் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஆனால், இந்த சர்ச்சைகள், ஏமாற்றங்களை தாண்டி தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் முடிந்தவரை அவர் பங்களித்து வந்தார்.

சர்வதேச கிரிக்கெட் மட்டுமல்ல, ஐபிஎல் தொடர்களும் கடுமையான அழுத்தம் மற்றும் போராட்டத்தில் இருந்து மீண்டு சாதிக்கும் வீரர்களை தொடர்ந்து அடையாளம் கண்டு வருகிறது. அந்த வகையில் சனிக்கிழமையன்று சிறப்பாக பங்களித்து ஆட்ட நாயகன் விருதை வென்ற அம்பட்டி ராயுடு 2020 ஐபிஎல் தொடரில் தனது பயணத்தை அற்புதமாக துவக்கியுள்ளார் என்றே கூறலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: