You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ட்ரீம் 11: ஐபிஎல் புதிய டைட்டில் ஸ்பான்சரும் அதன் சீன தொடர்பும்
- எழுதியவர், பிபிசி குழு
- பதவி, டெல்லி
பேண்டஸி கேமிங் தளமான "ட்ரீம் 11 2020" இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) டைட்டில் ஸ்பான்சராக மாறியுள்ளது. முன்னதாக, விவோ ஐபிஎல்லின் டைட்டில் ஸ்பான்சராக இருந்தது.
கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீனா படையினருக்கு இடையிலான மோதலுக்குப் பிறகு, இந்தியாவில் சீன நிறுவனங்களுக்கான எதிர்ப்பு அதிகரித்து வந்தது. பெருமளவிலான ஆர்ப்பாட்டங்களுக்குப் பிறகு, விவோவின் இந்த ஆண்டிற்கான 440 கோடி ரூபாய்க்கான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.
அத்தகைய சூழ்நிலையில், ஐபிஎல் ஒரு டைட்டில் ஸ்பான்சரை தேடியது.
ஐபிஎல் 2020: ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஐபிஎல் 13-க்கான நான்கரை மாத ஒப்பந்தத்திற்கு ரூபாய் 222 கோடி கொடுத்து, ட்ரீம் 11 ஏலம் பெற்றது. இதை உறுதிப்படுத்திய ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல், "ட்ரீம் 11 நிறுவனம் 222 கோடி ரூபாய் ஏலத்தில் உரிமைகளைப் பெற்றுள்ளது" என்றார்.
இதற்கு முன்னர் இந்திய தொழில்துறை குழுவான டாடாவும் இந்த பந்தயத்தில் இருந்ததாக கூறப்படுகின்றது. ஆனால் பின்னர் அது இறுதி ஏலத்தில் வெற்றி பெறவில்லை. மேலும் இரண்டு கல்வி தொழில்நுட்ப நிறுவனங்களான பைசஸ் (ரூ. 201 கோடி) மற்றும் யுனகாடமி (ரூ. 170 கோடி) இரண்டாவது இடத்தையும் மூன்றாவது இடத்தையும் பிடித்தன.
ட்ரீம் 11 நிறுவனத்தின் இந்த ஒப்பந்தம் டிசம்பர் 31 வரை உள்ளது, எனவே ஐக்கிய அரபு எமிரேட்ஸில் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 ஆம் தேதி வரை நடைபெற்ற போட்டிகள் ஏதேனும் காரணத்தால் நிறுத்தப்பட்டாலும் கூட, இந்த நிறுவனம் இந்த ஆண்டு இறுதி வரை டைட்டில் ஸ்பான்சராக இருக்கும்.
விவோ நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதற்கு முக்கிய காரணம் சீனாவுடனான அதன் தொடர்புதான். ஆனால் ட்ரீம் 11 நிறுவனமும் சீனாவுடன் தொடர்பு கொண்ட நிறுவனமாக கூறப்படுகிறது.
சீனாவுடன் நிறுவனத்தின் தொடர்பு
இந்தியன் எக்ஸ்பிரஸின் தகவலின்படி, ட்ரீம் 11 சீனாவின் இணையதள நிறுவனமான டென்சென்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து நிதி உதவியைப் பெற்றுள்ளது. 2019 ஆம் ஆண்டில், ட்ரீம் 11 நிறுவனம் ஒரு பில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்பை எட்டிய இந்தியாவின் முதல் கேமிங் ஸ்டார்ட் அப் நிறுவனமாக ஆனது.
இருப்பினும், ட்ரீம் 11 நிறுவனம் ஒரு இந்திய நிறுவனம் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வலியுறுத்துகிறது.
டைம்ஸ் ஆப் இந்தியா கருத்துப்படி, சீனாவின் தொழில்நுட்ப நிறுவனமான டென்சென்ட், ட்ரீம் 11 நிறுவனத்தில் 20 முதல் 25 சதவீதம் பங்குகளைக் கொண்டுள்ளது.
ஆனால் இது குறைந்த அளவிலான பங்கு என்று அழைக்கப்படுகிறது, மேலும் இந்த பிராண்ட் தன்னை முற்றிலும் இந்திய நிறுவனம் என்று முன்வைக்கிறது. அதனால் தான் டைட்டில் ஸ்பான்சர் போட்டியில் அந்நிறுவனம் பங்கேற்க முடிந்தது. கார்ப்பரேட் சர்க்கிள் என்ற இணையதள கண்காணிப்பு வலைதளமான, வி.சி சர்க்கிள் சீன நிறுவனமான டென்செண்டின் ட்ரீம் 11 இல் 2018 செப்டம்பரில் பணத்தை முதலீடு செய்வதாக அறிவித்திருந்தது.
இந்த நிறுவனத்தில் 100 மில்லியன் டாலர்களை முதலீடு செய்யப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் ஒப்பந்தம் 720 கோடி ரூபாய்க்கு பரிவர்த்தனை செய்யப்பட்டது என்று கூறப்பட்டது. இது சீரிஸ் டி ஃபண்டிங் ரவுண்ட் என்று அழைக்கப்படுகின்றது.
அந்த வலைதளத்தின் கூற்றுப்படி, ட்ரீம் ஸ்போர்ட்ஸ் என்பது விளையாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களான ட்ரீம் 11, ஃபேன்கோட், ட்ரீம்எக்ஸ், ட்ரீம்செட்கோ மற்றும் ட்ரீம் பே போன்ற ட்ரீம் ஸ்போர்ட்ஸை கொண்டுள்ளது.
நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இணை நிறுவனர் ஹர்ஷ் ஜெயின் மற்றும் சிஓஓ மற்றும் துணை நிறுவனர் பவித் சேத் ஆகியோரால் இது 2008-ல் உருவாக்கப்பட்டது என்று வலைதளம் தெரிவிக்கின்றது.
2012 இல் இது ப்ரீமியம் ஃபேண்டஸி கிரிக்கெட்டைத் தொடங்கியது. 2014 ஆம் ஆண்டில், ஒரு லட்சம் பயனர்களை இந்த நிறுவனம் தொட்டது. 2015 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் தொடர் நிதியையும் பெற்றது.
தோனி ஒரு பிராண்ட் தூதர்
2018 ஆம் ஆண்டில், அதன் பயனர்களின் எண்ணிக்கை 17 மில்லியனை எட்டியது. அதே ஆண்டு அந்நிறுவனம் ஐ.சி.சி, பி.கே.எல், எஃப்.ஐ.எச் மற்றும் பிபிஎல் உடன் கூட்டு சேர்ந்ததுடன், எம்.எஸ் தோனியும் அதன் புதிய பிராண்ட் தூதரானார். 2019 ஆம் ஆண்டில், அதன் பயனர்களின் எண்ணிக்கை ஏழு கோடியைத் தாண்டியது. இந்த ஆண்டு இது ஐபிஎல் மற்றும் ஐசிசியின் அதிகாரப்பூர்வ விளையாட்டாக மாறியது. மேலும் 2020 ஆம் ஆண்டில், ஐ.பி.எல் டைட்டில் ஸ்பான்சரை பெற்றது.
டைம்ஸ் ஆப் இந்தியாவைப் பொறுத்தவரை, ட்ரீம் 11 உண்மையில் 712 கோடி ரூபாய்க்கு மூன்று ஆண்டுக்கான ஏலத்தை வென்றுள்ளது, மேலும் விவோ அடுத்த ஆண்டு திரும்பவில்லை என்றால், இந்த நிறுவனம் போட்டியின் டைட்டில் ஸ்பான்சராக இருக்கும்.
இது நடந்தால், இந்நிறுவனம் இந்த ஆண்டு 222 கோடி ரூபாயை செலுத்துகிறது மற்றும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தலா 240 கோடி ரூபாய் செலுத்தும்.
ஆனால், இவ்வளவு பணம் கிடைத்தாலும், இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டில் விவோ, ஐந்தாண்டு ஒப்பந்தத்தை 1,199 கோடி ரூபாய்க்கு வென்றது. அப்போது முதல் அந்நிறுவனம் பிசிசிஐக்கு ஆண்டுதோறும் ரூ. 439.80 கோடி செலுத்தி வந்தது.
இப்போது டைட்டில் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தை ட்ரீம் 11 222 கோடிக்கு ஏலத்தில் பெற்றுள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டு ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர்ஷிப் மூலம் பிசிசிஐக்கு ரூ. 217.80 கோடி குறைவாகவே கிடைக்கும்.
பிற செய்திகள்:
- எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை கவலைக்கிடம்: தற்போதைய நிலை என்ன?
- சிவகங்கை கிளஸ்ட்டர்: மலேசியாவை அச்சுறுத்திய நபரின் தமிழக குடும்பத்தின் நிலை என்ன?
- கரிகாலன் கட்டிய கல்லணை: தமிழர்களின் நீர் மேலாண்மை குறித்து நீங்கள் அறிவீர்களா?
- கொரோனா வைரஸ்: சென்னைக்கு வருவோரை தனிமைப்படுத்த நடவடிக்கை
- டாலரின் அதிகாரம் வீழ்கிறதா? சீனா மற்றும் ரஷ்யா செய்யும் அரசியல்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: