You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தென்னை மரத்தில் ஏறிய இலங்கை அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ
இலங்கையில் வழமையாக நடத்தப்படும் ஊடகவியலாளர்கள் சந்திப்புக்களை தாண்டி வித்தியாசமான ஊடகவியலாளர் சந்திப்பொன்றை இலங்கை ராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ நடத்தியிருந்தார்.
புத்தளம் - தங்கொட்டுவை பகுதியில் தென்னை மரமொன்றின் மீதேறி இந்த ஊடகவியலாளர் சந்திப்பு நடத்தப்பட்டது.
தென்னை, பனை, கித்துல் ராஜாங்க அமைச்சர் என்ற விதத்திலேயே, அருந்திக்க பெர்ணான்டோ இந்த ஊடக சந்திப்பை நடத்தியிருந்தார்.
உலக சந்தையில் தென்னை மற்றும் அதன் சார்ந்த உற்பத்தி பொருட்களுக்கான தட்டுப்பாடு அதிகரித்துள்ள நிலையில், இந்த ஊடக சந்திப்பு நடத்தப்பட்டிருந்தது.
இலங்கையிலும் தென்னை மற்றும் அதன் சார்ந்த உற்பத்தி பொருட்களுக்கான கேள்வி அதிகரித்துள்ளதாக அருந்திக்க பெர்ணான்டோ கூறியுள்ளார்.
தங்கொட்டுவை பகுதியிலுள்ள அவரது வீட்டுத் தோட்டத்திலுள்ள தென்னை மரமொன்றின் மீதேறி, அருந்திக்க பெர்ணான்டோ தேங்காய்கள் சிலவற்றை பறித்துள்ளார்.
இதையடுத்து, குறித்த மரத்திலிருந்து அவர் ஊடக சந்திப்பை நடத்தினார்.
தென்னை மரமொன்றிற்கு ஏறும் ஒருவருக்கு 100 இலங்கை ரூபாய் வழங்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேங்காய் பறித்தல் மற்றும் தென்னங் கள் உற்பத்தி ஆகியவற்றிற்கு தற்போது பணியாளர்களை தேடிக்கொள்வது கூடி கடினமான விடயம் என அவர் கூறியுள்ளார்.
குறிப்பாக தென்னங் கல்லு உற்பத்தி செய்வோர் இலங்கையில் தற்போது குறைவடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மரத்தில் ஏறுவதற்கும், இரு மரங்களுக்கு இடையில் கயிற்றின் உதவியுடன் செல்வதற்கும் காணப்படுகின்ற அச்ச நிலைமையும் இந்த தொழில்துறை வீழ்ச்சி அடைந்துள்ளமைக்கான காரணம் என அவர் குறிப்பிடுகின்றார்.
இலங்கை மக்களின் பயன்பாட்டிற்காக வருடாந்தம் சுமார் 2.8 பில்லியனுக்கும் அதிகமான தேங்காய் உற்பத்தி இந்த நாட்டில் காணப்படுவதாகவும் அவர் கூறுகின்றார்.
எனினும், அந்த 700 மில்லியன் தொழில்துறையில் தட்டுப்பாடு காணப்படுவதாக கூறும் ராஜாங்க அமைச்சர், வருடாந்த பயன்பாட்டிற்காக 1.8 பில்லியன் தேங்காய்கள் தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இதனால் தென்னை செய்கையை மேம்படுத்தி, பாரியளவிலான அந்நிய செலாவணியை நாட்டிற்குள் கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.
தேங்காய் விலையை குறைப்பதற்காக தற்போதைய சூழ்நிலையில், தற்காலிக தீர்வுகள் சிலவற்றை எடுக்க முயற்சித்து வருவதாகவும், தேங்காய் விலையை அதிகரிக்காதிருக்க எதிர்காலத்தில் நீண்ட கால திட்டமொன்றை வகுக்கவுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
இந்த நிலையில், தேங்காயின் விலை எவ்வளவு அதிகரித்தாலும், வெளிநாடுகளிலிருந்து தேங்காய் இறக்குமதி செய்யப்படாது என அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
அருந்திக்க பெர்ணான்டோ எவ்வாறு மரத்தில் ஏறினார்?
கேகாலை - வரகாபொல பகுதியிலுள்ள புதிய கண்டுபிடிப்பாளர் ஒருவரினால் கண்டுபிடிக்கப்பட்ட மரம் ஏறும் உபகரணமொன்றை பயன்படுத்தியே அருந்திக்க பெர்ணான்டோ தென்னை மரத்தில் ஏறினார்.
குறித்த உபகரணத்தை பயன்படுத்தி நாளொன்றிற்கு சுமார் 100 உயரமான தென்னை மரங்களில் ஏற முடியும் என அவர் குறிப்பிடுகின்றார்.
இந்த உபகரணத்தை பயன்படுத்தி மரமொன்றிற்கு ஏறுவதற்கு 100 ரூபாய் அறவிடப்படுமேயானால், நாளொன்றில் 10 ஆயிரம் ரூபாயை தனிநபர் ஒருவரினால் உழைக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த உபகரணமானது 19 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளதுடன், அதனை மிக விரைவில் இலங்கை சந்தைக்கு கொண்டு வர அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும் அருந்திக்க பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
தென்னை செய்கையாளர்களில் பதில்
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக தேங்காய் ஒன்றின் விலை 100 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக தென்னை உற்பத்தி மற்றும் செய்கையாளர்கள் சங்கத்தின் உப தலைவர் ஜயரத்ன ஜயசேகர தெரிவிக்கின்றார்.
தேங்காய் விற்பனையின் ஊடாக குறைந்த இலாபத்தை கூட பெற்றுகொள்ள முடியவில்லை என அவர் கூறினார்.
இலங்கையில் தேங்காய் செய்கையாளர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுக்கின்றார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: