You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
IND vs BAN: ரோகித் சர்மா 100வது டி20 போட்டியில் அசத்தல் ஆட்டம்
இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான சில முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.
தி இந்து - 100வது டி20 போட்டியில் அசத்திய ரோகித் சர்மா
இந்தியா மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நேற்று ராஜ்கோட்டில் நடந்த இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதல் போட்டியை வங்கதேசம் வென்ற நிலையில், தற்போது தொடர் சமன் ஆகியுள்ளது.
முதலில் பேட் செய்த வங்கதேசம், 20 ஓவர்களில் ஆறு விக்கெட்டை இழந்து 153 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணி 15.4 ஓவர்களில் வெறும் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 154 ரன்கள் எடுத்தது.
தனது 100வது டி20 போட்டியில் விளையாடிய கேப்டன் ரோகித் சர்மா, தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி 43 பந்துகளில் 85 ரன்கள் எடுத்தார். இன்னும் 15 ரன்கள் எடுத்திருந்தால் தனது ஐந்தாவது டி20 சதத்தை அடைந்திருப்பார் ரோகித் சர்மா.
ஷிகர் தவன் 27 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். வங்கதேச அணிக்காக மொகமது நயீம் அதிகபட்சமாக 36 ரன்கள் எடுத்தார்.
இந்தியாவின் இரண்டு விக்கெட்டுகளையும் அமினுல் இஸ்லாம் வீழ்த்தினார்.
தினத்தந்தி - உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள்
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது என்கிறது தினத்தந்தி நாளிதழின் செய்தி.
அதன்படி ஓட்டுப்பதிவு நாளில் காலை 7 மணியில் இருந்து மாலை 5 மணி வரை நடக்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நீண்டகாலமாக தள்ளி வைக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் செய்து உள்ளது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டுச்சீட்டு வண்ணங்கள் மற்றும் ஓட்டுப்பதிவு நேரம் ஆகியவை குறித்து அரசிதழில் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என தெரிகிறது என்கிறது அச்செய்தி.
தினமணி - அரசு அலுவலக வளாகங்களில் வழிபாட்டுத் தலங்கள்
அரசு அலுவலக வளாகங்கள், பொது இடங்களில் கட்டப்பட்டுள்ள வழிபாட்டுத் தலங்களை இடிக்க கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தந்தை பெரியார் திராவிடா் கழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத் தலைவா் எம்.கண்ணதாசன் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'தமிழகத்தில் சாலைகள், நடைபாதைகள், அரசு புறம்போக்கு நிலங்கள், அரசு அலுவலக வளாகங்கள், நீர்நிலைகளை ஆக்கிரமித்து ஹிந்து கோயில்கள், மசூதிகள், கிறிஸ்தவ தேவாலயங்கள் கட்டப்பட்டுள்ளன.
இந்த வழிபாட்டுத் தலங்களால் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்துகிறது. கோவை அரசு அலுவலக வளாகத்தில் உள்ள கோயிலை இடிக்க கோரிய வழக்கில், பதில்மனு தாக்கல் செய்த தமிழக நகராட்சி நிர்வாகத் துறை, தமிழகத்தில் சாலை, நடைபாதை, நீா்நிலைகள், அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து மசூதிகள், தேவாலயங்கள், கோயில்கள் என மொத்தம் 3,168 வழிபாட்டுத் தலங்கள் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளதாக அறிக்கை தாக்கல் செய்தது.
அரசு அலுவலகங்களில் உள்ள சாமி சிலைகள், புகைப்படங்களை அகற்ற வேண்டும் என தமிழக அரசு கடந்த 1968-ஆம் ஆண்டே அரசாணை பிறப்பித்தது. இதன் பின்னா், கடந்த 1993-ஆம் ஆண்டு அரசு அலுவலகங்களில் வழிபாட்டுத் தலங்கள் இல்லை என்பதை உயா் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவுகளை அவமதிக்கும் வகையில் அரசு அலுவலகங்களில் வழிபாட்டுத் தலங்களை சட்டவிரோதமாக கட்ட அதிகாரிகள் அனுமதிக்கின்றனா்.
இதுகுறித்து கடந்த 2010-ஆம் ஆண்டு ஒரு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, மதம் தொடா்பான நிகழ்வுகளை அரசு அலுவலக வளாகங்களில் நடைபெறாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டது என்கிறது தினமணி செய்தி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்