அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு அபராதம் விதித்த பெண் நீதிபதி மற்றும் பிற செய்திகள்

தனது அறக்கட்டளையின் நிதியை முறைகேடான வகையில், தேர்தல் செலவுகளுக்கு பயன்படுத்தியதற்காக நியூயார்க் நீதிமன்றம் ஒன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு இரண்டு மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 14 கோடி ) அபராதம் விதித்துள்ளது.

தனது சொந்த நலன்களுக்காக 'டொனால்ட் ஜே டிரம்ப் பவுண்டேஷன்' எனும் அந்த அறக்கட்டளையை டிரம்ப் பயன்படுத்துகிறார் என்று குற்றச்சாட்டு எழுந்ததால், 2018ஆம் ஆண்டு அது மூடப்பட்டது.

இத்தகைய அறக்கட்டளை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்று நீதிபதி சேலியன் ஸ்கார்புலா தெரிவித்தார்.

முன்னாள் பாதுகாப்பு படையினருக்காக வசூலிக்கப்பட்ட பணம் டிரம்ப் தேர்தல் செலவுக்கு 2016இல் முறைகேடாக பயன்படுத்தப்பட்டது என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

டிரம்ப் அபராதமாக செலுத்தும் பணம், அவருடன் தொடர்பில்லாத வேறு எட்டு தொண்டு நிறுவனங்களுக்கு பகிர்ந்து வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

கோவை இரட்டை கொலை வழக்கு

தமிழகத்தையே உலுக்கிய கோவை பள்ளி மாணவர்கள் ரித்திக் மற்றும் முஸ்கான் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி மனோகரனுக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்துள்ளது உச்ச நீதிமன்றம்.

2010ஆம் ஆண்டு கோவையை சேர்ந்த பள்ளிக் குழந்தைகள் முஸ்கான் மற்றும் ரித்திக் ஆகியோரை கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் தனது தூக்கு தண்டனையை குறைக்கக் கோரி மனோகரன் சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தார். அதனை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது.

அதிகம் செலவு செய்தது யார்?

எதிர்வரும் இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் பிரதான கட்சிகளின் மூன்று வேட்பாளர்களின் செலவீனங்கள் தொடர்பிலான தகவல்களை தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் உத்தியோகப்பூர்வமாக வெளியிட்டது.

இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட தேர்தல் கண்காணிப்பு நிலையமான தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் கொழும்பில் நவம்பர் 5 அன்று ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து இந்த விடயத்தை வரலாற்றில் முதல் தடவையாக வெளியிட்டது.

மாசுபாடு மிக்க நகரங்கள் பலவும் இந்தியாவில் இருப்பது ஏன்?

இந்தியாவின் தலைநகர் புது டெல்லியில் பொது சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கூடங்கள் மூட்ப்பட்டன. மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டுமென கேட்டுகொள்ளப்பட்டனர். மூச்சுத் திணறல் காரணமாக பல நோயாளிகள் மருத்துவமனைகளை நாடினர்.

அதிக காற்று மாசுபாடு காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளது.

"விஷவாயுக் கூடமாக" டெல்லி இருப்பதாக பொதுவாக விமர்சிக்கப்பட்டாலும், வடஇந்தியாவில் அதிக மாசுபாடு உள்ள நகரம் டெல்லி மட்டுமல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

சைனைடு கொடுத்து 10 கொலை செய்த நபர்

தொடர் கொலைகளை செய்தவர் என்ற குற்றச்சாட்டின் பேரில் சிவா என்று அறியப்படும் சிம்ஹாத்ரிக்கு எதிராக ஆந்திர பிரதேச காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

20 மாதங்களில் ஆந்திர பிரதேச மாநிலத்தின் மூன்று மாவட்டங்களில் 10 கொலைகளை சிம்ஹாத்ரி செய்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கொல்லப்பட்ட 10 பேரில் மூன்று பேர் பெண்கள். கொல்லப்பட்டோரில் சிம்ஹாத்ரியின் உறவினர்கள், வீட்டு உரிமையாளர், நண்பர்கள் மற்றும் அவருக்கு கடன் வழங்கியோர் உள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :