You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தீவிரமடையும் 'புல்புல்' புயல்: மேற்கு வங்காளத்தை குறிவைக்கிறது
'புல்புல்' என்பது ஒரு பறவையின் பெயர். தமிழில் இதனை சின்னாங்குருவி என்பார்கள். மென்மையான அழகிய பறவையின் பெயரைத் தாங்கியிருக்கும் இந்தப் புயல் தற்போது, தீவிர புயலாக உருக்கொண்டு வங்கதேசத்தை தாக்கப் பறந்து செல்வதாகத் தெரிகிறது.
வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள இந்த 'புல்புல்' புயல், அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறி இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம், மற்றும் வங்கதேசத்தை தாக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்காளத்தில் பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புயல் ஒடிஷாவை கடந்து செல்லும் என்ற வானிலை ஆய்வு மையத்தின் தகவலினால், ஒடிஷாவிலும் 15 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
''ஒடிஷாவின் அனைத்து கடலோர மாவட்டங்களிலும் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்து, ஏற்கனவே மீன்பிடிக்க கடலுக்கு சென்றவர்கள் நவம்பர் 7ம் தேதி மாலைக்கு முன்பு கரை திரும்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 'புல்புல்' புயலின் தாக்கம் ஒடிஷாவில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் ஒடிஷாவை கடந்து மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசத்துக்கு செல்வதால், நவம்பர் 9ம் தேதி வடக்கு ஒடிஷாவில் மிதமான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.'' என்று ஒடிஷா சிறப்பு நிவாரண ஆணையர் பிரதீப் கிர் ஜீனா, ஏ.என்.ஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் ஒடிஷாவில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட அதிகாரிகள் எச்சரிக்கையாக செயல்படவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஏற்கெனவே அரபிக்கடல் பகுதியில் மையம் கொண்டுள்ள மஹா புயல் நவம்பர் 7, மாலைக்குள் வலுவிழந்துவிடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்