ஜோஃப்ரா ஆர்ச்சர் முதல் ஷாஹின் அஃப்ரிடி வரை: 2019 உலகக்கோப்பையின் 5 நம்பிக்கை நட்சத்திரங்கள்

2019 ஐசிசி உலகக் கோப்பை திருவிழா ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்த நிலையில், இந்த உலகக்கோப்பை உருவாக்கிய நட்சத்திரங்கள் யார் என்ற விவாதம் தொடங்கியுள்ளது.

இதுவரை சர்வதேச போட்டிகளில் பெரிய அளவில் சாதிக்கவில்லையென்றாலும், 2019 உலகக்கோப்பையில் தங்களின் பங்களிப்பை அழுத்தமாக பதிவுசெய்த 5 இளம் நட்சத்திரங்கள் யார் என்பதை இங்கு விவரங்களுடன் பட்டியலிட்டுள்ளோம்.

ஜோஃப்ரா ஆர்ச்சர்

இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற பரபரப்பு மிகுந்த உலகக்கோப்பை இறுதி போட்டி டை ஆனதால், சூப்பர் ஓவர் முறையில் ஆட்டத்தின் முடிவை நிர்ணயிக்க தீர்மானிக்கப்பட்டது.

முதலில் பேட் செய்த இங்கிலாந்து 15 ரன்கள் எடுக்க, 16 ரன்கள் எடுத்தால் நியூசிலாந்து உலகக்கோப்பையை வெல்லும் என்ற நிலையில் ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்திருந்தனர்.

இங்கிலாந்து அணியின் சார்பாக யார் சூப்பர்ஓவரை வீசுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. கிறிஸ் வோக்ஸ், பிளங்கட் போன்ற அனுபவம்வாய்ந்த பந்துவீச்சாளர்களைவிட இங்கிலாந்தின் கேப்டன் மோர்கனின் தேர்வு ஜோஃப்ரா ஆர்ச்சராக இருந்தது.

உலகக்கோப்பையை வெல்ல 44 ஆண்டுகள் காத்திருந்த இங்கிலாந்தின் சார்பாக மிகவும் முக்கியமான மற்றும் பரபரப்பான சூழலில் சூப்பர்ஓவரை வீசிய ஜோஃப்ரா ஆர்ச்சர் மே 2019-இல்தான் முதல்முறையாக இங்கிலாந்து அணியின் சார்பாக விளையாடினார்.

2019 உலகக்கோப்பை அணிக்கு இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டது. 15 பேர் கொண்ட இங்கிலாந்து அணியில் முதலில் ஆர்ச்சர் இடம்பெறவில்லை.

பிறகு மே மாதத்தில் இங்கிலாந்து அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டபோது அணியில் ஜோஃப்ரா ஆர்ச்சர் சேர்த்து கொள்ளப்பட்டார்.

ஆரம்ப போட்டிகளிலேயே ஜோஃப்ரா ஆர்ச்சர் சிறப்பாக பங்களித்தார். இறுதிப்போட்டிவரை 10 போட்டிகளில் விளையாடிய அவர் 19 விக்கெட்டுகளை எடுத்தார்.

தனது அணியின் சார்பாக அதிக அளவில் விக்கெட்டுகள் எடுத்தது மட்டுமல்ல நடப்பு உலகக்கோப்பை தொடரில் மிகவும் சிக்கனமாக பந்துவீசியும் ஜோஃப்ரா ஆர்ச்சர் இங்கிலாந்தின் வெற்றிக்கு பல போட்டிகளில் காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

லாக்கி ஃபெர்குசன்

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நியூசிலாந்தின் சார்பாக அறிமுகமான 27 வயதான வேகப்பந்துவீச்சாளர் லாக்கி ஃபெர்குசன் ஆரம்ப ஆண்டுகளில் அணியில் தொடர்ந்து இடம்பிடிக்கவில்லை.

2019 உலகக்கோப்பைக்கு முன்னர் நடந்த சில உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளில் சிறப்பாக பங்களித்த இவர், உலகக்கோப்பை தொடரில் இடம்பிடித்தார்.

இதற்கு முன்பு விளையாடிய சர்வதேச போட்டிகளில் ஃபெர்குசன் சிறப்பாக விளையாடியுள்ள போதிலும், இவரது மிகச்சிறந்த பங்களிப்பு உலகக்கோப்பையில்தான் வெளிப்பட்டது எனலாம்.

இந்த தொடரில் 9 போட்டிகளில் விளையாடி இவர் 21 விக்கெட்டுகளை எடுத்து போல்ட் மற்றும் ஹென்றி ஆகிய இரு பந்துவீச்சளர்களுக்கு துணையாக சிறப்பாக பங்களித்தார்.

மேலும் தனது சிறந்த பங்களிப்பால் செவ்வாய்கிழமை அறிவிக்கப்பட்ட ஐசிசி உலகக்கோப்பை அணியில் லாக்கி ஃபெர்குசன் இடம்பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வேன் டெர் டஸன்

கண்டிப்பாக அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறும் என்று ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்ட தென்னாப்பிரிக்காவின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஆகிய இரண்டுமே இந்த தொடரில் எதிர்பார்த்த அளவுக்கு சோபிக்கவில்லை.

தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டூ ப்ளசிஸ் தவிர இந்த உலகக்கோப்பை தொடரில் பேட்டிங்கில் அந்நாட்டு ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்தது மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ரசி வேன் டெர் டஸன் தான்.

தென்னாப்பிரிக்க அணியின் ஜாம்பவான் பேட்ஸ்மேன் ஏ பி டிவில்லியர்ஸ் ஒய்வு பெற்றதை அடுத்து அணியில் டிவில்லியர்ஸ் களமிறங்கும் நான்காம் நிலையில் உலகக்கோப்பை தொடரில் பேட்டிங் செய்த வேன் டெர் டஸன் இந்த தொடரில் 6 போட்டிகளில் விளையாடி 311 ரன்கள் எடுத்தார்.

குறிப்பாக பலம் பொருந்திய ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இவர் எடுத்த 95 ரன்கள் தென்னாப்பிரிக்க அணி அதிக அளவு ரன்கள் குவிக்கவும், வெற்றிக்கும் பெருமளவில் உதவியது.

மூத்த வீரர்களான ஆம்லா, மில்லர், டுமினி போன்றோர் இந்த தொடரில் ஏமாற்றமளிக்க தென்னாப்பிரிக்க அணியின் ரசிகர்களின் நம்பிகை நட்சத்திரமாக வேன் டெர் டஸன் திகழ்ந்தார் எனலாம்.

அலெக்ஸ் கேரி

கில்கிறிஸ்ட் போன்ற அதிரடி விக்கெட்கீப்பர் பேட்ஸ்மேன் எண்ணற்ற போட்டிகளில் கடந்த காலங்களில் வென்ற ஆஸ்திரேலியாவுக்கு மீண்டும் ஒரு நல்ல விக்கெட்கீப்பராக அலெக்ஸ் கேரி அமைந்துள்ளார் என்று கூறலாம்.

2019 உலகக்கோப்பை தொடரில் அலெக்ஸ் கேரி 375 ரன்கள் எடுத்தார். மேலும் தனது விக்கெட்கீப்பிங்கில் 20 பேரை அவர் ஆட்டமிழக்க செய்தார்.

அதேபோல் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அலெக்ஸ் கேரி 35 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்த தொடரில் கேரி எடுத்த ரன்களைவிட அதனை அவர் எடுத்த விதம் கிரிக்கெட் வல்லுநர்களால் அதிகமாக பாரட்டப்பட்டது. இதற்கு அத்தாட்சி போல செவ்வாய்கிழமை அறிவிக்கப்பட்ட ஐசிசி உலகக்கோப்பை அணியிலும் அலெக்ஸ் கேரி இடம்பிடித்தார்.

ஷாஹின் அஃப்ரிடி

உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு செல்லாததற்கு முக்கிய காரணம் அந்த அணி தொடக்கத்தில் இந்தியா, மேற்கிந்தியத்தீவுகள் உள்ளிட்ட 3 போட்டிகளில் தோல்வியடைந்ததுதான். இந்த போட்டிகளில் பாகிஸ்தானின் ரன் ரேட்டும் மிகமும் மோசமாக இருந்தது.

ஆரம்ப போட்டிகளில் முகமது ஹஃபீஸ், சோயிப் மாலிக் உள்ளிட்ட மூத்த வீரர்கள் சிறப்பாக பங்களிக்காத நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அணியில் சேர்த்து கொல்லப்பட்ட வேகப்பந்துவீச்சாளர் ஷாஹின் அஃப்ரிடி, அடுத்து பாகிஸ்தான் தொடர்ச்சியாக வென்ற 4 போட்டிகளிலும் சிறப்பாக விளையாடினார்.

19 வயதான ஷாஹின் அஃப்ரிடி, இந்த தொடரில் 5 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்டுகள் எடுத்தார்.

நியூசிலாந்து அணிக்கு எதிராக ரன்களை கட்டுப்படுத்தும் விதமாக பந்துவீசிய இவர் 3 விக்கெட்டுகளை எடுத்தார். அதேவேளையில் வங்கதேசம் அணிக்கு எதிராக ஷாஹின் அஃப்ரிடி தனது மிகச்சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார். இந்த போட்டியில் இவர் 6 விக்கெட்டுகளை எடுத்தார்.

அரையிறுதி போட்டியில் தகுதி பெறவில்லையென்றாலும், இளம் பந்துவீச்சாளர் ஷாஹின் அஃப்ரிடியின் பங்களிப்பு பாகிஸ்தான் ரசிகர்களிடம் நம்பிக்கையை விதைத்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :