அமேசானில் தள்ளுபடி விலையில் பொருட்கள் வாங்க திட்டமா? - இதனை தெரிந்து கொள்ளுங்கள் மற்றும் பிற செய்திகள்

அமேசான் தள்ளுபடி விற்பனை

அமேசான் தனது வருடாந்தர தள்ளுபடி விற்பனையை தொடங்கி உள்ள இந்த நேரத்தில் ஆயிரக்கணக்கான அமேசான் ஊழியர்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். ஜெர்மனியில் 2000 ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், அமெரிக்காவில் உள்ள ஊழியர்கள் ஆறு மணி நேர போராட்டத்திற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அமேசான் தொழிற்சங்கம் கூறுகிறது.

அதிக பணி சுமைதான் இந்த வேலை நிறுத்தத்திற்கு காரணமென்று கூறப்படுகிறது.

நேபாள வெள்ளத்தில் 67 பேர் பலி

நேபாளத்தில் பருவமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 67 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். தொடர்ந்து 5 நாட்களாக பெய்து வரும் பருவமழை அந்த பகுதியை முற்றிலுமாக வெள்ளமயமாக்கியது.

வியாழக்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவார் குமாரசாமி

கர்நாடக முதல்வர் ஹெச்.டி.குமாரசாமி வியாழக்கிழமை சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவார். சட்டப்பேரவைத் தலைவர் ரமேஷ்குமார் இதனை முறைப்படி சட்டப்பேரவையில் அறிவித்தார்.எனவே மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு தங்கள் கட்சிகளைச் சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்த இன்னும் மூன்று நாள் அவகாசம் இருக்கிறது.

சீனப் பொருளாதார வளர்ச்சி வேகத்தில் வீழ்ச்சி

இரண்டாவது காலாண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி மிகக் குறைந்த வேகத்தில் செல்கிறது. 1990களுக்குப் பிறகு சீனாவில் பொருளாதார வளர்ச்சி வேகம் இவ்வளவு குறைவாக இருப்பது இப்போதுதான் என்பதை அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. ஜூன் வரையிலான மூன்று மாதங்களில் சீனாவின் பொருளாதாரம் கடந்த ஆண்டைவிட 6.2 சதவீதம் வளர்ந்துள்ளது.வளர்ச்சியைத் தூண்டும் வகையில் செலவீடுகளை ஊக்குவித்து, வரிக் குறைப்புகளையும் அறிமுகப்படுத்தியது சீனா.

நியூசிலாந்து வீரர்களை நாயகர்களைப் போல வரவேற்போம்

ஞாயிறன்று நடந்த 2019 உலகக்கோப்பைத் தொடரில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடயேயான பரப்பரப்பான இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி தோல்வியைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா அர்டென் கூறியுள்ளார். தங்கள் நாட்டின் அணியைக் குறித்து பெருமிதம் கொள்வதாக அவர் ஆர்.என்.எஸ். செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :