You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரோகித், பும்ரா அடங்கிய ஐசிசி உலகக்கோப்பை அணி அறிவிப்பு : ஏன் கோலி, தோனிக்கு இடமில்லை?
2019 ஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை திருவிழா ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்த நிலையில் உலகக்கோப்பை அணி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
ஐசிசி உலகக்கோப்பை அணிக்கு நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பரபரப்பான இறுதிப் போட்டியில் கடும் போராட்டத்திற்கு இடையே நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து முதல் முறையாக கோப்பையை வென்றது.
இந்நிலையில் ஐசிசி அணியில் இந்தியாவை சேர்ந்த தொடக்க வீரர் ரோகித் சர்மா மற்றும் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள வீரர்கள் பின்வருமாறு:
ஐசிசி அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள்:
ஜேசன் ராய் ( இங்கிலாந்து) -443 ரன்கள்
ரோகித் சர்மா ( இந்தியா) - 648 ரன்கள்
கேன் வில்லியம்சன் ( நியூசிலாந்து) - 578 ரன்கள்
ஷாகிப் அல் ஹசன் (வங்க தேசம்) - 606 ரன்கள் மற்றும் 11 விக்கெட்டுகள்
ஜோ ரூட் ( இங்கிலாந்து) - 556 ரன்கள்
பென் ஸ்டோக்ஸ் ( இங்கிலாந்து) - 465 ரன்கள் மற்றும் 7 விக்கெட்டுகள்
அலெக்ஸ் கேரி ( ஆஸ்திரேலியா) - 375 ரன்கள், 20 ஆட்டமிழப்புகள்
மிர்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா) - 27 விக்கெட்டுகள்
ஜோஃப்ரா ஆர்ச்சர் ( இங்கிலாந்து) - 20 விக்கெட்டுகள்
பெர்குசன் (நியூசிலாந்து) - 21 விக்கெட்டுகள்
பும்ரா ( இந்தியா) - 18 விக்கெட்டுகள்
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இந்தியாவின் ரோகித் சர்மா ( 648 ரன்கள்) முதலிடம் பிடித்தார். ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் (647 ரன்கள்) இரண்டாவது இடம் பிடித்தார்.
ஏன் கோலி, தோனிக்கு இடமில்லை?
ஆனால், இந்த ஐசிசி உலகக்கோப்பை அணியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி, முன்னாள் கேப்டன் தோனி ஆகியோர் இடம் பெறவில்லை.
ஐசிசி உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து அதிரடி தொடக்க வீரர் ஜேசன் ராய் எடுத்த அதே 443 ரன்களை விராட் கோலியும் இந்த தொடரில் எடுத்துள்ளார்.
ஆனால் 7 போட்டிகளில் விளையாடி 443 ரன்களை எடுத்த ஜேசன் ராயின் பேட்டிங் சராசரி 63.29. அதேவேளையில் 9 போட்டிகளில் விளையாடி 443 ரன்கள் எடுத்த கோலியின் பேட்டிங் சராசரி 55.38.
மேலும் நியூசிலாந்துடன் நடந்த அரையிறுதி போட்டியில் முக்கிய தருணத்தில் 1 ரன் மட்டும் எடுத்து விராட் கோலி ஆட்டமிழந்ததும் இந்தியாவின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது.
இதனிடையே இந்த உலகக்கோப்பை தொடரில் 273 ரன்கள் எடுத்த முன்னாள் கேப்டனும், விக்கெட்கீப்பருமான மகேந்திர சிங் தோனிக்கும் இந்த அணியில் இடமில்லை.
இந்த உலகக்கோப்பை தொடரில் தோனியின் பேட்டிங் பலமுறை கடுமையாயின விமர்சனங்களை எதிர்கொண்டது.
இங்கிலாந்து அணியுடனான போட்டியில் இந்தியாவின் சேஸிங்கின்போது தோனி மெதுவாக விளையாடினார் என்று தோல்விக்கு பிறகு அவர் மீது சில கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் விமர்சனம் செய்தனர்
மற்ற போட்டிகளிலும் அவர் தனது வழக்கமான அதிரடி பேட்டிங் பாணியில் விளையாடவில்லை என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், நடப்பு உலகக்கோப்பை தொடர் அவருக்கு கடைசி சர்வதேச தொடராக இருக்கும் என்ற யூகங்களும் சமூகவலைதளங்களில் வலம்வந்தன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்