உலகக்கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்து இந்தியாவை வீழ்த்தியது எப்படி? - ஒரு சிறிய தேசத்தின் கதை

பட மூலாதாரம், Michael Steele/Getty Images
- எழுதியவர், சிவக்குமார் உலகநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
''ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து போன்று எங்கள் நாட்டில் கிரிக்கெட் விளையாட அதிக வசதிகள் இல்லை. தேர்வு செய்வதற்கு என்று ஏராளமான வீரர்களும் இல்லை. எங்கள் நாட்டில் உள்ள இயல்பான விளையாட்டு ஆர்வம் மற்றும் உலக அரங்கில் நாட்டை ஜொலிக்க செய்யவேண்டும் என்ற வீரர்களின் உத்வேகமும் எங்கள் அணிக்கு வெற்றிகளை தருகிறது'' - இது மறைந்த நியூசிலாந்து கேப்டன் மார்ட்டின் குரோவ் சில ஆண்டுகளுக்கு முன்பு கூறியது.
அண்மைய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 49 லட்சம் மக்கள்தொகையை கொண்ட நியூசிலாந்து, அளவில் இந்தியாவைவிட 12 மடங்கு சிறிய நாடாகும்.
தனி தீவு நாடான நியூசிலாந்து அண்மைய காலங்களில் வெளிநாட்டினரை பெரிதும் கவர்ந்து வருகிறது. பொதுவாக வாழத்தகுந்த நாடுகளின் பட்டியலில் முதல் 15 இடங்களில் இடம்பெறும் நியூசிலாந்தில் குளிர் காலங்களில் மிகவும் அதிக குளிர் நிலவும்.
சிறிய நாடாகவும், குறைந்த மக்கள்தொகை கொண்ட நியூசிலாந்து விளையாட்டுத்துறையில் ஆர்வமுள்ள நாடாகவே இருந்துவருகிறது.

பட மூலாதாரம், Nathan Stirk/Getty Images)
படகுப்போட்டி, நீச்சல் போட்டி பிரிவுகள், தடகளம் போன்றவற்றில் ஒலிம்பிக் மற்றும் காமன்வெல்த் போட்டி தொடர்களில் பதக்கங்கள் வெல்லும் நியூசிலாந்து, கிரிக்கெட், ஹாக்கி மற்றும் வாலிபால் போன்ற குழு விளையாட்டுகளில் ஆர்வமுள்ள நாடாகவே இருந்து வருகிறது.
கிரிக்கெட்டை பொருத்தவரை நியூசிலாந்தில் ரிச்சர்ட் ஹேட்லி, மார்ட்டின் குரோவ், ஜான் ரைட் போன்ற வீரர்கள் கடந்த காலங்களிலும், டேனியல் வெட்டோரி, கென் வில்லியம்சன், ராஸ் டெய்லர் போன்ற வீரர்கள் அண்மைய காலங்களில் மிக சிறந்த வீரர்களாக வலம்வந்த போதிலும், டெண்டுல்கர், லாரா, வசீம் அக்ரம், கோலி போன்ற ஜாம்பவான்கள் அந்த நாட்டில் இருந்து வெளிவந்ததில்லை.
ஆனால், தங்களின் கட்டுக்கோப்பான மற்றும் நேர்த்தியான பந்துவீச்சு, அட்டகாசமான ஃபீல்டிங் ஆகியவற்றால் மற்ற அணிகளுக்கு தொடர்ந்து நியூசிலாந்து அதிர்ச்சி அளித்து வந்துள்ளது.
உலகக்கோப்பை தொடர்களில் நியூசிலாந்து
1975-இல் நடந்த முதல் கிரிக்கெட் உலகக்கோப்பையில் இருந்து உலகக்கோப்பை தொடர்களில் பங்கேற்றுவரும் நியூசிலாந்து புதன்கிழமையன்று மான்செஸ்டரில் நடந்த அரையிறுதி போட்டியில் இந்தியாவை வென்று இரண்டாவது முறையாக உலகக்கோப்பை இறுதியாட்டத்தில் விளையாட தகுதி பெற்றுள்ளது.
2015-இல் நடந்த முந்தைய உலகக்கோப்பை தொடரில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற நியூசிலாந்து முதலாவதாக பேட் செய்து 183 ரன்கள் மட்டுமே பெற்றது. 33 ஓவரில் இலக்கை எட்டிய ஆஸ்திரேலியா நியூசிலாந்தின் கோப்பை கனவை தகர்த்தது.
இதுவரை 8 அரையிறுதி போட்டிகளில் விளையாடிய நியூசிலாந்து இரண்டுமுறை மட்டுமே இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
வியூகத்தால் வென்ற நியூசிலாந்து
இந்நிலையில், நியூசிலாந்தின் வெற்றி மற்றும் அரையிறுதி போட்டியில் அந்த அணி வகுத்த வியூகங்கள் குறித்து பிபிசியிடம் பேசிய கிரிக்கெட் வீரர் மற்றும் பயிற்சியாளர் ரகுராமன் கூறுகையில், ''இந்த போட்டியில் இந்தியாவை பேட்டிங் தடுமாறியது என்றாலும், நியூசிலாந்தின் அற்புதமான வியூகங்கள் மற்றும் ஆட்டத்திறனால் இந்தியா தோல்வியுற்றது என்றே கூற வேண்டும்'' என்றார்.

பட மூலாதாரம், Clive Mason/Getty Images
''குறிப்பாக விராட் கோலியை ஆட்டமிழக்க டிரெண்ட் போல்ட் மற்றும் கேன் வில்லியம்சன் வகுத்த வியூகம் அபாரமானது. 240 ரன்கள்தானே வென்றுவிடலாம் என்ற எண்ணத்தில் களமிறங்கிய இந்தியாவுக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. 5 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் இழப்பு என்பது பேரதிர்ச்சியாக, அதில் இருந்து இந்தியா மீள அதிக நேரமானது'' என்றார்.
''லீக் போட்டி பிரிவுகளில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற அணிகளிடம் தோல்வியுற்ற நியூசிலாந்து தனது ஆகச்சிறந்த ஆட்டத்தை அரையிறுதியில் வெளிப்படுத்தியது''
''வெற்றிக்கு ஹென்றி, போல்ட் போன்ற நியூசிலாந்தின் பந்துவீச்சு ஒரு காரணம் என்றாலும், நியூசிலாந்தின் கேப்டன் கேன் வில்லியம்சனின் தலைமைப்பண்பு ஒரு முக்கிய காரணம்'' என்று ரகுராமன் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
44 ஆண்டுகள் காத்திருப்பு கைகூடுமா?
1992-ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் உலகக்கோப்பை போட்டிகள் நடந்தபோது நியூசிலாந்து வலிமைமிக்க அணியாக இருந்தது. அந்த தொடரில் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்ற நியூசிலாந்து எளிதாக வென்று இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாகிஸ்தான் அணியின் அனுபவம் மிக்க ஜாவீத் மியாண்டாட் மற்றும் இளம் வீரர் இன்சமாம் உல் ஹக் ஆகியோரின் கணக்கு வேறு விதமாக இருந்தது.
இன்சமாம் உல் ஹக்கின் அதிரடி பாணி பேட்டிங் மற்றும் ஜாவீத் மியாண்டாட்டின் நெடிய அனுபவம் சொந்த மண்ணில் நியூசிலாந்தின் இறுதி போட்டி கனவை தகர்த்தது.
அது போன்ற ஒரு நிலையை மீண்டும் சந்திக்க நேரிடுமோ என்ற அச்சத்தை மான்செஸ்டரில் ரவீந்திர ஜடேஜா மற்றும் தோனியின் பார்ட்னர்ஷிப் ஏற்படுத்தியது.
ஆனால், தங்களின் வியூகம் மற்றும் அபார பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கில் இந்தியாவை வீழ்த்தி மீண்டும் இறுதியாட்டத்துக்கு தகுதி பெற்ற நியூசிலாந்து தனது முதல் கோப்பை கனவுடன், இரண்டாவது அரையிறுதியில் வெல்லப்போகும் அணிக்காக காத்திருக்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












