உலகக்கோப்பை அரை இறுதி: ரவீந்திர ஜடேஜா - தோனி போராட்டம் வீண். எப்படித் தோற்றது இந்தியா?

ரவீந்திர ஜடேஜா

பட மூலாதாரம், DIBYANGSHU SARKAR

இறுதிப்போட்டிக்குள் நுழைய 240 ரன்கள் எடுக்க வேண்டும் எனும் இலக்கோடு களமிறங்கிய இந்திய அணி 49.3 ஓவர்களில் 221 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

முதல் மூன்று ஓவர்களில் மூன்று விக்கெட்டை இழந்தது இந்திய அணி

மேட் ஹென்றி ரோகித் மற்றும் ராகுல் விக்கெட்டை வீழ்த்தினார். விராட் கோலியின் விக்கெட்டை ட்ரென்ட் போல்ட் வீழ்த்தினார். ஹென்றி பந்தில் கார்த்திக்கும் வீழ்ந்தார்.

இந்திய ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி - 3 விக்கெட் இழப்பு

பட மூலாதாரம், Getty Images

இதையடுத்து பாண்ட்யா - பந்த் இணை 5வது விக்கெட்டுக்கு 47 ரன்கள் சேர்த்தது. பாண்ட்யா 62 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார்.

அடுத்தடுத்த விக்கெட்டுகளால் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு மங்கியது. அதன் பின்னர் இணைந்த ஜடேஜா தோனி இணை அதிரடியாக ரன்கள் குவித்தது. குறிப்பாக ஜடேஜா அனாயசமாக சிக்ஸர்கள் விளாசினார்.

ஜடேஜாவின் வருகைக்கு முன்னர் நியூசிலாந்து எளிதில் வென்றுவிடும் சூழலில் இருந்தது.

ஆனால் ஜடேஜா சிக்ஸர்களும் பவுண்டரிகளுமாக விளாசினார். இந்த இணை 116 ரன்கள் குவித்தது. போல்ட் வீசிய 48-வது ஓவரில் ஜடேஜா வீழ்ந்தார்.

ரவீந்திர ஜடேஜா

பட மூலாதாரம், Clive Mason

அதன் பின்னர் அடுத்தடுத்த பந்துகளில் மீதமிருந்த மூன்று விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணி. தோனி 50 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

முன்னதாக 46.1 ஓவர்களில் 211 ரன்களுடன் இன்றைய ஆட்டத்தைத் துவங்கிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 239 ரன்கள் குவித்தது.

இன்றைய தினம் மூன்று விக்கெட்டுகளை இழந்தது நியூசிலாந்து அணி .

நேற்று என்ன நடந்தது?

நியூசிலாந்து அணி சார்பில் ராஸ் டெய்லர் அதிகபட்சமாக 74 ரன்கள் குவித்தார்.

புவனேஷ்வர் குமார் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது.

முதல் பந்திலேயே ரிவ்யூவை இழந்தது இந்தியா. முதல் இரண்டு ஓவர்கள் மெய்டன் ஆனது. மூன்றாவது ஓவரில் ரன் கணக்கைத் துவக்கியது நியூசிலாந்து.

நான்காவது ஓவரில் கப்டில் விக்கெட்டை வீழ்த்தினார் பும்ரா.

அதன்பின்னர் ஹென்றி நிக்கோல்ஸ் மற்றும் கேன் வில்லியம்சன் இணைந்து பொறுமையாக விளையாடினர்.

ஜடேஜா பந்தில் நிக்கோல்ஸ் வீழ்ந்தார்.

கேன் வில்லியம்சன் - ராஸ் டெய்லர் அணி மிடில் ஓவர்களில் ரன் ரேட்டை உயர்த்தவில்லை.

கேன் வில்லியம்சன் அரை சதமடித்து 67 ரன்களில் அவுட் ஆனார்.

நீஷம், கிராந்தோம் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.

ராஸ் டெய்லர் நேற்று 67 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

நியூசிலாந்து அணி 46.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்திருந்தது.

ஜடேஜா 10 ஓவர்கள் வீசி 34 ரன்கள் மட்டும் கொடுத்தார். சாஹலின் 10 ஓவர்களில் 63 ரன்கள் எடுத்தனர் நியூசிலாந்து பேட்ஸ்மென்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :